உலகப் புகழ் பெற்றவர்கள்
கண்ணொளி இருந்தும் இருண்ட வாழ்வில் உழலும் அறியாமை மனிதர் நடுவில் கண் ஒளி இல்லாத நிலையிலும் பார்வையற்ற மனிதர்கள் வாழ்வில் நிலையான அறிவொளி ஏற்றியவரின் அதி உன்னத வாழ்க்கை வரலாற்றை இனி காண்போம். 1809 _ ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் நாள் பிரான்சு நாட்டில் புகழ்பெற்ற பாரிஸ் நகரின் கிழக்கில் 25 மைல் தொலைவில் அமைந்த கூப்வெரி (COUPVRAY) என்ற கிராமத்தில் லூயிஸ் பிரெய்லி பிறந்தார். இவரது தந்தையார் சைமன் ரேனே பிரெய்லி (SAIMON RENE BRAILLE) தாயார் மோனிக் பேரான் (MONIQUE BARON). இவரது தந்தை உயர்ரகத் தோல் பொருட்கள் செய்யும் திறம்மிக்க கைவினைக் கலைஞன் ஆவார்.
பணிமனையில் நேர்ந்த துயரம்
மூன்று வயதினரான லூயிஸ் தந்தையின் பணிமனையில் கூரிய குத்தூசி கொண்டு தோலில் சிறுதுளையிட முயன்றார். எதிர்பாராமல் ஊசி வலது கண்ணைத் துளைத்துக் காயம் ஏற்படுத்தியது. அதன் விளைவாக வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. விரைவில் வலதுகண் காயத்தின் நுண்கிருமிகள் இடது கண்ணையும் பாதித்துப் பார்வை குறையத் துவங்கியது. இவருக்கு அய்ந்து வயதாகும் போது இரண்டு கண்களும் பார்வைத்திறனை இழந்தன. இவ்விழப்புத்தான் எதிர்காலத்தில் பார்வையற்றோர் வாழ்வில் பெரும் மாற்றத்தை – உயர்வை, – மேன்மையை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது.
பள்ளிப்படிப்பு
இவர் வாழ்ந்த காலத்தில் பிரான்சு நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழ்ந்த பார்வையற்றோர் வாழ்வு மிகவும் பரிதாபகரமானதாகவும் – பிறரிடம் பிச்சை எடுத்து வாழும் இழிநிலைக்குரியதாகவும் இருந்தது. இந்நிலையில் இருந்து லூயிஸ் பிரெய்லியின் வாழ்வைப் படிப்பின்மூலம் மாற்ற அவர்தந்தை உறுதி பூண்டார். தனது மகன் தன்மானத்துடனும் _ சுதந்திரத்துடனும் வாழ வழிவகுத்தார். இளம்வயதிலேயே இவர் கூரிய அறிவு பெற்றிருந்ததை உணர்ந்த இவரது தந்தையார் எழுத்துகளை ஆணிகள் மூலம் பலகையில் பதித்துக் கல்வி கற்பித்தார். மேலும் யாருடைய துணையுமின்றி நடந்து செல்ல மரத்தால் ஆன ஊன்றுகோலையும் வழங்கினார்.
இவர் தமது ஆறு வயதில் அப்பே பாலி (ABBE PALLUY) என்ற பாதிரியாரிடம், அவரது கிராமப் பள்ளியில் கல்வி கற்கத் தொடங்கினார். இவரது மதிநுட்பத்தினை உணர்ந்த பாதிரியார் பின்னர் இவரைப் பாரிஸ் மாநகரில் உள்ள பார்வை இழந்தோர்க்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் பள்ளியில் (INSTITUTE FOR BLIND YOUTH) குடும்பத்தார் ஒப்புதலின் பேரில் சேர்த்தார். இந்தப் பள்ளியில்தான் லூயிஸ் தன் வாழ்நாள் இறுதிவரைக் கற்பதிலும், கற்பிப்பதிலும் காலங் கழித்தார்.
உலகின் முதல் பார்வையற்றோர் பள்ளி
வெலன்டின் அவே (VALENTIN HAUY) என்ற பெருமகனாரால் 1786 ஆம் ஆண்டு இச்சிறப்புப் பள்ளி நிறுவப்பட்டது. உலகிலேயே பார்வையற்றவர்க்கான முதல் பள்ளி அமைத்தவர் என்ற பெருமைக்கும் உரியவரானார். பார்வையற்றவர் கல்வி கற்கத் தன்னுடைய அறிவுத்திறன் கொண்டு புதிய முறைகளை வகுத்தவரும் இவரே எனலாம். எழுத்துகளை விரல்நுனியால் உணர்வதற்கு ஏற்ப மேடாக்கிக் (EMBOSSED) காட்டி புத்தகங்களைத் தயாரித்துக் கல்வி வழங்கினார். பள்ளியின் வளர்ச்சிக்காகப் பல பார்வையற்றோர் பள்ளிகளைத் தம்பள்ளியுடன் இணைத்தார். இப்பள்ளியின் கல்வி முறை லூயிசின் வாழ்வில் மறுமலர்ச்சியை அளித்தது.
மாணவர்களின் நினைவாற்றல் துணைகொண்டு இப்பள்ளியில் கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, இலக்கணம், இசை, கணிதம் (ALGEBRA) தலியன கற்பிக்கப்பட்டன. இத்துடன் சுயதொழில் முனைவராகச் செயல்படத் தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்டது. இதில் இவர்களுக்கு மூங்கில் நாற்காலி, காலணிகள் மற்றும் கூடைகள் தயாரிக்கவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பிரெய்லி குறியீடு (BRAILLE CODE) திருப்பு முனையாக, 1821 ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டின் படைத்தலைவராக சார்லஸ் பார்பியர் (CHARLES BARBIER) லூயிஸின் பள்ளிக்குப் புதிய எழுத்துகளின் வடிவினை (முறையினை) அறிமுகம் செய்ய அழைக்கப்பட்டார். அவருடைய எழுத்து முறை 12 புள்ளிகள் கொண்டதாக இருந்தது.
இம்முறை இராணுவத்தினர் இரவு நேரத்தில் இரகசியங்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறை Night Writing என்று அழைக்கப்பட்டது. இம்முறையில் பள்ளி மாணவர்கள் கற்பிக்கப்பட்டனர்.
இம்முறையில் படிப்பது கடினமானதாகவும் சிரமமானதாகவும் இருப்பதாக லூயிஸ் உணர்ந்தார். 1824ஆம் ஆண்டு இம்முறைக்கு மாறாக எளிதாகவும், வேகமாகவும், பயில லூயி ஆறு புள்ளிகளைக் கொண்ட புதிய பிரெய்லி குறியீட்டை (Braille Code) உருவாக்கினார். பள்ளியின் இயக்குநர் மருத்துவர் பிக்னியர் (Dr.PIGNIER) லூயினுடைய புதிய குறியீட்டு முறையை ஊக்கப்படுத்தியது மட்டுமில்லாமல் அந்த முறையைப் பள்ளியில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். இம்முறையால் மாணவர்கள் எளிதாகவும் வேகமாகவும்அறிவை வளப்படுத்துவதை உணர்ந்து 1928 ஆம் ஆண்டு லூயிஸ் அந்தப் பள்ளியின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
பிரெய்லி என்ற 6 புள்ளிகள் செய்த அற்புதங்கள் பார்வையற்றோர் படிப்பதற்கும், எழுதுவதற்கும், இசை அமைப்பதற்கும், பாடல்களைப் படைப்பதற்கும் 1829 ஆம் ஆண்டு 6 புள்ளிகளைக் கொண்ட பிரெய்லி முறையில் முதல் புத்தகத்தை வெளியிட்டார். இதற்குப் பின்பு 1837 ஆம் ஆண்டு இவரது பள்ளி பிரெய்லி குறியீட்டைப் பயன்படுத்தி பிரான்சு நாட்டின் வரலாறு (HISTORY OF FRANCE) என்ற புத்தகத்தை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 1838 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பிரெய்லி புத்தகத்தை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பிரெய்லி எழுத்துமுறையின் அவசியத்தையும், அதன் பொதுத் தன்மையையும் கணக்கில் கொண்டு அந்தக் குறியீட்டிற்கு நல்வரவேற்பை ஏற்படுத்தினார்.
இந்த எழுத்துவடிவம்தான் சிந்தனை ஆற்றல் இருந்தும் செயல்படுத்த வகையறியாது இருட்டுலகில் வாடிய பார்வையற்றோர் வாழ்வில் அறிவொளியையும் செயல் மலர்ச்சியையும் உண்டாக்கியது. ஆம்! 200 ஆண்டுகளுக்கு முன்னால் பார்வையற்றவர்களால் எழுதவும் – படிக்கவும் முடியாது என்று இருந்த நிலையை மாற்றி – புதிய வரலாற்றை இவ்வெழுத்துகள் ஏற்படுத்தின. பார்க்கும் திறன் இழந்தோர் கவிதை புனையும் திறன் பெற்றனர்; வேறு சிலர் பாடல்களுக்கு இசை அமைத்து – புதிய இராகங்களைப் புனைந்து வியப்பூட்டினர் இவ்வாறு இவர்தம் வாழ்வில் குளிர்தென்றல் வீசத் துவங்கியது. மேலும் பார்வை இழந்தோர் அனைவரும் கற்க பிரெய்லி தட்டச்சு இயந்திரத்தைப் பியரி (PIERRE) என்பவருடன் இணைந்து தயாரித்து வெற்றி கண்டார்.
இதுதான் முதல் தட்டச்சு இயந்திரம் என்று அறியப்பட்டது. இவ்வாறு பார்வையற்றோர் எண்ணங்களைப் பயனுள்ளதாக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்தி வந்தார். இந்தச் சூழலில் 1944 ஆம் ஆண்டு எலும்புருக்கி நோயினால் (TUBERCULOSIS) பாதிக்கப்பட்டார்; குரல்வளம் குன்றியது. இக்காலகட்டத்தில் பயன்தரும் நூல்களை வெளியிட்டார் – தம்மால் இயன்ற பொருள் உதவிகளைப் பிறருக்காக வழங்கி மனநிறைவுடன் வாழ்ந்தார். வாழ்வாங்கு வாழ்ந்து இவ்வையத்துக்கு வளம் சேர்த்தார். 1952 ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாடிய இரண்டே நாட்கள் கழித்து அதாவது ஜனவரி 6 ஆம் நாள் தம் அழியாப் புகழை நிலைநாட்டி மண்ணுலக வாழ்க்கையைத் துறந்தார்.
இறவாப் புகழ்
இவர் வாழ்ந்த காலத்தில் இவரது பிரெய்லி குறியீடுகளை அங்கீரிக்காத பிரான்சு அரசாங்கம், இவர் மறைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 1954 ஆம் ஆண்டு அங்கீகரித்து ஆணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து 1868 ஆம் ஆண்டு பார்வையற்றோருக்கான உலக நாடுகள் ஆணையமும் பிரெய்லி குறியீட்டை அங்கீரித்தது. இவ்வங்கீகாரம் பிரெய்லி என்ற மாமனிதர்க்குக் கிடைத்த அங்கீகாரம் அல்ல; தடுமாறிக் கொண்டு திசை தெரியாமல் திகைப்புற்றுக் கிடந்த பார்வையற்றோர் அனைவரையும் ஒன்றுசேர்க்கக் கிடைத்த அங்கீகாரம் – ஒளியிழந்தவர் இல்லங்களிலெல்லாம் ஒளி ஏற்றக் கிடைத்த அங்கீகாரம்; தன்னலமற்ற தொண்டுக்குக் கிடைத்த அங்கீகாரம் – தாழ்ந்து கிடந்தவர் நிமிர்ந்து நிற்கவும் – தன்மானத்துடன் வாழவும் கிடைத்த அங்கீகாரம். இவரது நூற்றாண்டு விழாவினை ஒட்டி பிரான்சு – அரசு இவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தன்னலமற்ற சேவை செய்த வால்டேர், எமிலிஜோலா, மேரி கியூரி ஆகியோர் தம் கல்லறைகளுக்கு அருகில் இவரையும் அடக்கம் செய்து தனது புகழை நிலைநாட்டிச் சென்றுள்ளது.
பார்வை அற்றவர் உள்ளங்களில் எழுந்த உணர்ச்சிகளை எல்லாம் உலகினுக்கு உணர்த்திய அதி அற்புத சிந்தனையாளர்தான் லூயிஸ் பிரெய்லி – தமது அமைதிப் பணியில் உலக அமைதிக்காக அடித்தளம் அமைத்த செயல்வீரர் – பார்வையற்றோர் தமது நுண்ணறிவை அறுவடை செய்யவும் – அவ்வறிவை மேலும் மேலும் வளப்படுத்திப் பயன்பெறவும் வழிகாட்டிய கலங்கரைவிளக்கு. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதே அவர் பணியின் நோக்கம். நிலைபெற்ற இவ்வுலகில் நிலையான இடம்பெற விழைபவர்கள் தம் புகழ் நிறுத்தி, தாம் மாய்ந்தனர் என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்ப இறந்தும் இறவாப்புகழ் பெற்றவர்தான் பிரெய்லி.
– சாரதாமணி ஆசான்