வெற்றி : இசையில் சாதிக்கும் ஆர்வன்
மோகன்
பிஞ்சுகளே! எல்லோருக்கும் பாடல் கேட்கவும், இசையை ரசித்துக் கேட்கவும் பிடிக்கும். அதுபோல தன் சிறு வயது முதலே தந்தையின் இசைக் கருவிகளை வாசித்து வாசித்து தன்னையும் சாதனையாளராக மாற்றிக் கொண்டுள்ளார் _ 6 வயதுச் சிறுவன் ஆர்வன் வெற்றி இளங்கோ. இவரின் தந்தை இன்ஸ்பயரிங் இளங்கோ தன்னம்பிக்கைப் பேச்சாலர்; பகுத்தறிவாளர்; சிறந்த இசைக் கலைஞர்; பல்துறை ஆற்றலாளர். ஆசிரியர் தாத்தாவின் கரங்களால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். அவர் மூலமாக சிறுவர் ஆர்வன், தான் நடக்கத் தொடங்கிய குழந்தைப் பருவத்திலிருந்தே இசையைக் கற்று வந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஹாக்கி வீரர் தயான் சந்தை நினைவுகூர்ந்திடும் வகையில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கீ போர்டு இசைக் கருவியை வாசித்தபடி 4 சரளி வரிசை, 9 ஜண்டை வரிசை, முழு நீள ஜண்டை மாலை மற்றும் 72 மேளகர்த்தா ராகங்களை வாசித்து அனைவரையும் வியப்புறச் செய்துள்ளார். இவரது இந்த முயற்சி உலக சாதனையாகப் பதிவாகியுள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியிலேயே இசைஞானி இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களை இசைத்தும் பார்வையாளர்களை ரசிக்கச் செய்துள்ளார். சிறுவன் ஆர்வனின் இந்தச் சாதனையை Universal Achievers Book of Records மற்றும் Future Kalams Book of Records அமைப்புகள், அங்கீகரித்து விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கியுள்ளன.
இதன்மூலம் இரண்டு உலகச் சாதனை-களைப் படைத்துள்ள ஆர்வன், இதன் பின் கின்னஸ் சாதனை படைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். நாற்பது நாள்களில் இசை நுணுக்கங்களைப் பயின்று இந்தச் சாதனைகளை சிறுவன் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகனின் சாதனையைக் கேட்டு தான் மிகவும் பெருமைப்படுவதாகத் தந்தை இன்ஸ்பயரிங் இளங்கோ கூறியுள்ளார். இருவருக்கும் ஊக்கம் தருபவர் ஆர்வனின் தாயார் சிறீலதா அவர்கள் தான்.
பிஞ்சுகளே! இசை என்பது குறிப்பிட்டவருக்கு மட்டுமின்றி, ஆர்வமுள்ள அனைவருக்குமானது என்று தனது சாதனை மூலம் நிரூபித்துள்ள ஆர்வனை வாழ்த்துவோம்.