பொங்கல் நன்னாள்!
பொங்கல் நன்னாள்!
ஏரும் மாடும் பயிரும்தாம்
இணையில் லாத செல்வங்கள்;
நீரும் நிறைந்த வயலுழவர்
நிலத்தில் உயர்ந்த வேந்தர்கள்!
தேரும் ஓட்டிச் செல்வோர்க்கும்
தெருவில் வாழும் ஏழைக்கும்
ஊருக் கும்தான் உணவீந்தே
உயிரைக் காப்போர் உழவர்தாம்!
பாரின் சுழற்சி இவரால்தாம்;
பண்டே உரைத்தார் வள்ளுவர்தாம்;
ஊரில் இவரைப் போற்றும்நாள்
உயர்ந்த நன்னாள் பொங்கல்நாள்!
வேராய் இவர்கள் உழைப்பதனால்
வீழா(து) உயிர்கள் வாழ்கிறதே;
ஓரா யிரமாம் நன்றியினை
உரைக்கும் நன்னாள் பொங்கல்நாள்!
– கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர்