உலக நாடுகள் சிரியா (SYRIAN ARAB REPUBLIC)
- தலைநகர் டமாஸ்கஸ் (Damascus)
- அரபி, குர்தீஷ், அர்மீனியன் மொழிகள் பேசப்படுகின்றன 8 நாணயம் சிரியன் பவுண்டு (Syriyan pound) ஓர் அமெரிக்க டாலர் = 45 சிரியன் பவுண்டுகள்
- அலுவலக மொழியாக அரபி திகழ்கிறது
- உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய மசூதிகளில் ஒன்றான உமயத்து மசூதி தலைநகர் டாமாஸ்கசில் உள்ளது.
- அடெல் சஃபார் (Adel Safar) பிரதமராக உள்ளார்.
- பாஷர் அல் ஆஸாத் (Bashar al Assad) குடியரசுத் தலைவராக உள்ளார்.
- 17.04.1946 இல் பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றுள்ளது.
பழங்கால நாகரிகச் சின்னங்கள் அடங்கிய இந்நாடு ரோமானியப் பேரரசின் மாநிலமாக இருந்தது. உலகின் முதல் எழுத்து இங்கேதான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இந்நாட்டை அராபியர்கள் கைப்பற்ற, இது இஸ்லாமிய நாடானது. 8,9 ஆம் நூற்றாண்டுகளில் இந்நாட்டின் தலைநகரமான டாமாஸ்கஸ் உமயத் கலிப்பாக்களின் தலைமையகமாக விளங்கியது.
பின்னர், இந்நாடு உதுமானியப் பேரரசின் மாநிலமானது. முதல் உலகப் போருக்குப்பின் பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1946 ஏப்ரல் 17 அன்று விடுதலை பெற்றுள்ளது. 1958 இல் எகிப்துடன் இணைந்து அய்க்கிய அரபுக் குடியரசு என்ற பெயரைப் பெற்றுள்ளது. சோஷலிஸ்ட் பாத் கட்சி 1963 இல் ஆட்சியைப் பிடித்தபின் இக்கட்சியே ஆட்சிப் பீடத்தில் தொடர்ந்து அமர்ந்தது. அரபு _ இஸ்ரேல் போர்களின் போது இந்நாடு அரபு நாடுகளுக்கு ஆதரவாக இஸ்ரேலை எதிர்த்துப் போர் தொடுத்தது. 1991 இல் ஈராக், குவைத்தை ஆக்ரமித்ததை எதிர்த்துப் படையினை அனுப்பியது.
கிழக்காசிய நாடுகளில், கடந்த சில மாதங்களாக அரசுகளுக்கு எதிராக பொது மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். எகிப்து, ஏமன் தொடங்கி இப்போது சிரியாவிலும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. சிரிய அதிபர் பாஷர் அல் ஆஸாத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைக் கடுமையான வழிகள் மூலம் அரசு அடக்கிவருகிறது.
இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 8,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித நேய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
புவியியல் அமைப்பு
இந்நாடு மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மத்தியத் தரைக்கடலின் கடற்கரையில் உள்ளது. வடக்கே துருக்கியும், கிழக்கு மற்றும் தென்கிழக்கே ஈராக்கும், தெற்கே ஜோர்டானும், மேற்கே லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் அமைந்துள்ளன.
தட்பவெப்பநிலை
மத்தியத் தரைக்கடல் கால நிலை நிவுகிறது. கோடைக் காலத்தில் வறண்ட காலநிலையும், குளிர் காலத்தில் மிதமான குளிரும் காணப்படுகின்றன. உயர்ந்த மலைப் பிரதேசங்களில் மழைப்பொழிவு தொடர்ந்து காணப்படுகிறது. கோடையில் அதிக வெப்பம் நிலவுகிறது.
வேளாண்மை
மக்களின் முக்கியத் தொழில் விவசாயமாகும். பருத்தி, கோதுமை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பார்லி, திராட்சை, புகையிலை ஆகியன முக்கிய விளைபொருள்களாக உள்ளன. யூப்ரடிஸ், காபர், அசி, பராடா ஆறுகள் ஓடி நாட்டிற்கு வளம் சேர்க்கின்றன.
கனிமவளம்
பெட்ரோலியம், பாஸ்பேட், பாறை உப்பு, இரும்பு, குரோமியம், மாங்கனீஸ், இயற்கை வாயு ஆகியன முக்கியக் கனிம வளங்களாகும்.
கல்வி
பழைய பிரெஞ்சு முறையை அடிப்படையாகக் கொண்ட நல்ல கல்வி முறை கற்பிக்கப்படுகிறது. முதல் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை முதல் நிலையாகவும், ஏழாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை இரண்டாம் நிலையாகவும் பத்தாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்புவரை அடுத்த நிலையாகவும் கொண்டு பள்ளிகள் செயல்படுகின்றன. பொதுப் பள்ளிகளில் இலவசக் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது.