நினைவில் நிறுத்துவோம் : சுற்றுச்சூழல் காப்பதில் நமது பங்கு
சிகரம்
மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் சுற்றுச் சூழலால் உருவானவை; சுற்றுச் சூழலால் வாழ்பவை. சுற்றுச் சூழல் எந்த அளவுக்கு, கெடாமல் இருக்கிறதோ அந்த அளவுக்கு உயிரினங்களின் நலமும் கெடாமல் இருக்கும். சுற்றுச் சூழல் கெட்டால் உயிரினங்களின் வாழ்வு கெடும். சுற்றுச் சூழல் அழிந்தால் உயிரினங்களும் அழியும்.
சுற்றுச்சூழல் என்றால் என்ன?
சுற்றுச்சூழல் என்பதில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் அடங்கும். காற்று, நீர், நிலம், மலை, ஆறு, கடல், காடு, செடி, கொடி, மனிதர்களோடு சேர்ந்து வாழும் மற்ற உயிரினங்கள் அனைத்தும் அடங்கும்.
சுற்றுச்சூழல் சார்பு:
இவ்வுலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சார்ந்தே வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக செடி – கொடிகள், தேனீக்கள், மனிதர்கள் இம்மூன்றையும் எடுத்துக் கொள்வோம். மனிதன் உயிர்வாழ உணவு கட்டாயம். செடி, கொடிகள், பயிர்கள் மூலம் உணவு கிடைக்கிறது. மீன், ஆடு, மாடு போன்ற-வற்றிலிருந்தும் கிடைக்கிறது.
நெல், கம்பு, சோளம், கோதுமை, வரகு போன்ற தானியங்களாக இருந்தாலும், காய்கறிகள், பழங்கள், எள், கடலை போன்றவையாக இருந்தாலும் அவை உருவாக, அவற்றின் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டும். ஒரு பூவிலுள்ள மகரந்தம் தேனீக்கள் மூலம் இன்னொரு பூவை அடைந்தால்தான் காய், பழம் இவை கிடைக்கும். நெல், கொள், எள் போன்றவையும் கிடைக்கும்.
தேனீக்கள் இல்லையென்றால் இவை எதுவும் கிடைக்காது. இவை எதுவும் கிடைக்கவில்லை-யென்றால் நாம் உயிர் வாழ முடியாது. அதேபோல், தேனீக்கள் உயிர் வாழ பூக்களில் உள்ள தேன் கட்டாயம். ஆக, தேனீக்கள் செடி, கொடி, மரங்களுக்கு உதவுகின்றன. தேனீக்களுக்கு செடி, கொடி, மரங்கள் உதவுகின்றன. செடியும், கொடியும் மனிதனுக்கு உயிர் வாழ உணவு தருகின்றன. மனிதன் இவற்றைப் பயிரிட்டு வாழ்விக்கிறான். ஆக, ஒன்று மற்றொன்றைச் சார்ந்தும், உதவியும் உயிர் வாழ்கின்றன.
சூழல் கெட்டால் சூழும் கேடு
மனிதர்கள், விலங்குகள், செடி, கொடி, மரங்கள் உயிர் வாழ காற்று கட்டாயம். செடி, கொடி, மரங்களுக்கு கார்பன்_டை_ஆக்ஸைடு கட்டாயம் தேவை, மனிதர், விலங்குகள் உயிர் வாழ ஆக்சிஜன் கட்டாயம்.
தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதால்தான் மனிதர்களும், மற்ற விலங்கு, பறவைகளும் உயிர் வாழ்கின்றன. இப்படிப்பட்ட காற்று மாசுபட்டால், அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும். பல்வேறு நலக் கேடுகள் உருவா-கும்.
காற்றுக்கு அடுத்து உயிரினங்களுக்கு நீர் கட்டாயம். நீர் இன்றி அமையாது உலகு என்பது அனைவரும் அறிந்த உண்மை. காற்று இல்லாமல் சில மணித் துளிகள் கூட உயிர் வாழ முடியாது, நீர் இல்லாமல் சில மணி நேரம்கூட உயிர் வாழ முடியாது. நீர் இல்லாமல் உணவுப் பயிர்களும் விளையாது.
நீராதாரத்துக்கு மழை கட்டாயம், மழைப் பொழிவுக்கு காடுகள் கட்டாயம். எனவே, உயிரினங்கள் வாழ காற்று, நீர், காடுகள் கட்டாயம். காடுகள்தான் காற்றையும், நீரையும் தருகின்றன. அப்படிப்பட்ட காடுகள் வாழ மண் கட்டாயம். எனவே, நிலத்தைக் கெடாமல் பாதுகாக்க வேண்டும்.
காற்று கெட்டால் அது காற்று மாசு.
நீர் கெட்டால் அது நீர் மாசு.
மண் கெட்டால் அது மண் மாசு.
காற்று எப்படிக் கெடும்?
தேவையற்ற பொருள்களை எரிப்பது, தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை, இரசாயனங்கள், வாகனங்கள் வெளியேற்றும் புகை போன்றவற்றால் காற்று மாசு படும்.
நீர் மாசு:
கழிவுகளை நீரில் கலத்தல், தொழிற்சாலைக் கழிவுகளை நீரில் கலத்தல், குப்பைகளையும் உதவாத பொருள்களையும் நீரில் கொட்டுதல் போன்றவற்றால் நீர் மாசுபடும்.
மண் மாசு:
இரசாயனக் கழிவுகள், மக்காத பிளாஸ்டிக் பொருள்கள், நெகிழிகள் போன்றவற்றால் மண் வளம் கெடும். மண்ணின் வளத்தைப் பாதிக்கும் வேலிக்காத்தான், யூக்கலிப்டஸ் போன்றவற்றை வளர்ப்பதால் மண்ணின் வளம் அழியும்.
இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மண்ணின் வளம் கெடும். மரங்களை, செடிகளை அழிப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு மண் வளம் கெடும்.
சூழல் காப்போம்:
எனவே, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் கெடாமல் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பட்டாசு வெடித்தல், பழையன-வற்றைக் கொளுத்துதல் இவற்றைத் தவிர்க்க வேண்டும். நீரில் கண்ட பொருள்களைப் போடுதல், கழிவுகளைக் கலத்தல் கூடாது. மக்காத பொருள்களைப் பயன்படுத்தாது, மரங்களை நிறைய நட்டு வளர்க்க வேண்டும், இருக்கும் மரங்களைக் காக்க வேண்டும். வருங்காலத் தலைமுறையான பிஞ்சுகள் இவற்றை நெஞ்சில் நிறுத்தி சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும்.