மவுனத்தின் மிரட்டல்
விழியன்
“முத்தமிழு குதி, நான் இருக்கேன், பயப்படாத” அமுதனின் குரல் ரெட்டைக் கிணறு முழுக்க எதிரொலித்தது. கிணற்றின் மேலே முத்தமிழ் நின்று கொண்டிருந்தாள். ரொம்ப அதிகமான உயரம் எல்லாம் இல்லை. ரெட்டைக் கிணற்றின் ஒரு கிணற்றில் முக்கால் ஆள் ஆழம் மட்டுமே நீர் இருக்கும். பக்கத்தில் மூன்று ஆள் ஆழம் இருக்கும். முத்தமிழ் நன்றாகவே நீச்சல் அடிக்கக் கற்றுக்கொண்டாள். எல்லாம் அமுதனின் உதவியால்தான். இருவரும் ஒரே வகுப்பில் ஒரே பள்ளியில் படிக்கின்றார்கள். இந்தக் கொரோனா வந்தாலும் வந்தது… பள்ளியை மூடிவிட்டார்கள். ஆனால், இந்த இடைப்பட்ட காலத்திலேயே முத்தமிழ் நீச்சல் பழகிவிட்டாள். விடியற்காலையில் எழுந்ததுமே வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவி செய்துவிட்டு முத்தமிழ் ஓடிவந்துவிடுவாள். அதோடு வீட்டிலும் யாரும் இருக்கமாட்டார்கள். பெற்றோர் இருவருமே கூலி வேலைக்குப் போய்விடுவார்கள். பின்னர் நாள் முழுவதும் அமுதன் வீட்டிலும் அமுதனுடன் ஊர் சுற்றலிலும்தான்.
“பெரியப்பா, அமுதனை கொஞ்சம் நேரம் படிக்க விடுங்க” என்று முத்தமிழ் கெஞ்சுவாள். ஆமாம், பாதி நேரம் அமுதன் அவன் அப்பாவின் பட்டறையில் அவருக்குத் துணையாக இருப்பான். பட்டறையில் வேலை செய்தவர்கள் அங்கிருந்து வெளியூருக்குச் சென்றுவிட்டனர். திரும்பி வரவே இல்லை. அமுதன் வேலை செய்யும்போது புத்தகங்களை முத¢தமிழ் வாசிப்பாள். இடையிடையே அமுதன் திருத்துவான். “அதைச் சரியாப் பாரு முத்தமிழு, ஒலி ஆண்டு இல்ல, ஒளி. சின்ன ‘லி’ போட்டா சத்தம், பெரிய ‘ளி’ போட்டா வெளிச்சம்.’’
மாதம் ஒரு நாள் பள்ளிக்குச் சென்று உலர் பொருள்களை வாங்கி வருவார்கள். ‘எப்ப பள்ளி திறக்கும்’ என வாரத்தில் ஒரு நாள் சென்று பார்ப்பார்கள். படித்த பாடத்தில் சந்தேகம் என்றால் ரகசியா ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கேட்பார்கள். “மிஸ், எப்ப மிஸ் ஸ்கூல் திறப்பாங்க?’’ என்று ஏக்கமாகக் கேட்பான்.
இவர்களின் ஏக்கத்திற்கு ஏற்ப பள்ளியும் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்று சொல்லி இருந்தனர். அதையே காரணமாக்கி அமுதனின் அப்பா அவனைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. அமுதன் கெஞ்சினான். முத்தமிழ் கெஞ்சினாள்.
“பெரியப்பா..”
நாள்கள் நகர நகர மூர்க்கமானார். “படிச்சி என்ன கிழிக்கப்போறான். சோத்துக்கு வழியில்ல. இப்பவே இதைச் செஞ்சா தொழிலைக் கத்துப்பான்” என்றார். அமுதனைப் பள்ளிக்கே அனுப்பக்கூடாது என்ற முடிவுக்கே வந்துவிட்டார் என்பது உறுதியானது.
பள்ளியில் ஆசிரியர் ரகசியா மட்டும் எங்கே அமுதனைக் காணவில்லை என்று கேட்பார். “மிஸ், நீங்களாச்சும் வந்து அனுப்பச் சொல்லுங்க மிஸ்” என்றாள் தமிழ். ஆனால், ஆசிரியரால் பள்ளியில் இருந்து நகர முடியவில்லை. அரை நாள் தலைமை ஆசிரியரின் அறையின் முன்னால் நின்று அவரைப் பார்த்து, “சார், நீங்க வந்து பேசினீங்கன்னா அமுதன் அப்பா ஸ்கூலுக்கு அனுப்புவார் சார்” என்றாள்.
“இருக்கிற வேலையில இது வேறையாம்மா. கட்டாயம் வரணும்னு சொன்னா வந்து பேசறேன்” என்று மழுப்பிவிட்டார்.
“சார், இந்த வயசுல படிக்க வைக்க வேண்டியது உங்க கடமை இல்லையா சார்” என்றும் கெஞ்சிப் பார்த்தாள். வீட்டுக்கு வரும்போது அழுதுகொண்டே வந்தாள் தமிழ்.
“முத்தமிழு, குதி…” அமுதனின் குரல் அவளுக்குக் கேட்டது. ஏதாச்சும் செய்யணும் என பரபரப்பானாள். இரவு படுக்கும் முன்னர் ஒரு முடிவு செய்தாள் _ மிக நிதானமாக.
காலை சீக்கிரமாகக் கிளம்பி நேராக பெரியப்பாவின் பட்டறைக்குச் சென்றாள். காலையிலேயே வேலை துவங்கி இருந்தது. ‘கண்களால் என்ன?’ என்று கேட்டார் பெரியப்பா. அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அவர்கள் செய்வதை கால்மணி நேரம் நின்று பார்த்துவிட்டு, கிளம்பிவிட்டாள். மாலை பள்ளி முடித்து வரும்போதும் கால்மணி நேரம் நின்றாள். பள்ளியில் நடந்ததைச் சொல்லுவாள், பாடங்களைப் படித்துக் காட்டுவாள் என அமுதன் நினைத்தான். அவன் அம்மாவும், “உள்ள போய் உட்கார்ரது தானே தமிழு” என்பார். அவள் பதில் பேசவே இல்லை. வாசலிலேயே கால்மணி நேரம் நின்று கிளம்பிவிட்டாள். ஒரு வாரம் இப்படியே தொடர்ந்தது. வருவாள்; நிற்பாள்; அமைதியாகப் பார்ப்பாள்; கிளம்பிடுவாள்.
செல்வி இதனை கவனித்துக் கேட்டாள். “ஏய் தமிழு, இதோ உங்க வீட்ல இருந்து அஞ்சு நிமிஷத்துல ஸ்கூலுக்குப் போயிடலாம். ஏன் அமுதன் வீட்டு வரைக்கு சும்மானாச்சும் போய் சும்மானாச்சும் நின்னுட்டு வர்ற? எவ்ளோ தூரம் அவன் வீடு!’’ என்று கேட்டாள். “அவனை எப்படியாச்சும் ஸ்கூலுக்குக் கொண்டு வரணும் செல்வி. பள்ளி இருக்கிறதை நான் போய் நின்னு நினைவூட்டிகிட்டே இருக்கேன்” என்றாள்.
மறுநாள் தமிழுடன் செல்வியும் இணைந்து கொண்டாள். “அவன் எனக்கும் ஃப்ரண்டுதாண்டி.” ஒருத்தி மட்டும் முயற்சி செய்ததை இருவர் செய்தனர். அடுத்த நாள் செய்தி அறிந்து கனகாவும் வந்து நின்றாள். மறுநாள் ஜெயந்தன், முகிலன், செந்தாமரை என நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனாலும் அமுதனின் அப்பா அசரவில்லை. எட்டாம் வகுப்பு மொத்தமும் காலையில் அமுதன் வீட்டுமுன் வந்து நின்றது. வரிசையாகக் கையை மடக்கி நின்ற அந்தக் காட்சி அத்தனை மிரட்சியாக இருந்தது. இரண்டு வாரத்தில் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் இதே போல நின்றார்கள்.
“தனித்தனியாக வரவேண்டிய குழந்தைகள் ஏன் ஒன்றாக வருகின்றார்கள், எங்கே ஒன்றாகச் செல்கின்றார்கள்” என்று ஆசிரியர் ரகசியா மட்டுமே கேட்டார். அவர் அப்பா அசைவதாக இல்லை. நூறு குழந்தைகள் ஒன்றாக எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக பள்ளியில் இருந்து அமுதன் வீட்டுக்குச் செல்வதும், அங்கே கால்மணி நேரம் நிற்பதும், திரும்ப மாலை அதே போல நிற்பதும் ஊரில் பெரும் பேசுபொருளானது. ‘அவன் அப்பா செய்வது சரி’ எனவும், ‘இல்லை, படிச்சா முன்னேறலாம்’ என்றும் இரண்டாகப் பிரிந்து பேசினார்கள்.
மழை துவங்கியது. சனி, ஞாயிறு விடுமுறை. மிக கன மழை திங்கட்கிழமையும் தொடரும் என்று சொல்லி இருந்தார்கள். பள்ளிக்கு விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு வந்தது. வழக்கம்போல அமுதன் வீட்டுக்கு நடையைக் கட்டினார்கள். சில சிறுவர்கள் தலையில் கோணிப்பையும், சில சிறுவர்கள் கையில் குடை, சிலர் துண்டுடன் வந்தனர். அன்று ஆசிரியர் ரகசியாவும் இணைந்து கொண்டார். அமுதன் வீட்டு வாசலில் எல்லோரும் நின்றனர். லேசாகத் தூறிக்கொண்டு இருந்தது.
அங்கே..
பட்டறை சாத்தப்பட்டு இருந்தது.
பூட்டு தொங்கியது.
“வெளியூர் போயிட்டாங்க போல” என முத்தமிழ் அழத் துவங்கினாள். “இரண்டு நாள்களாக வரவில்லை. இதற்கு இடையே கிளம்பிவிட்டு இருக்கின்றார்கள்” எனப் புலம்பினாள். ஆசிரியர் ரகசியா அவளைத் தேற்றி, எல்லோரையும் பள்ளியை நோக்கி வழிநடத்தினார். பள்ளிக்கூட வாசலை நெருங்கும்போது தலைமை ஆசிரியரிடம் இருந்து அலைபேசி அழைப்பு “டீச்சர், இன்னைக்கு லீவ் விடச் சொல்லிட்டாங்க. நீங்க பசங்க வந்தா வீட்டுக்கு அனுப்….” அழைப்பினை ‘டக்’கென்று துண்டித்தார். பள்ளியின் வாசலில் அமுதனும் அவன் அப்பாவும் அமர்ந்துகொண்டு இருந்தனர். பெரும்படையாக மாணவர்கள் அவர்கள் முன்னர் நிற்க. அவன் அப்பா எழுந்தார். மாணவர்களை நோக்கி இரண்டு கைகளைக் கூப்பி நன்றியைத் தெரிவித்தார். ஏதோ ஒன்று அவரை அசைத்து இருக்கு. கை கூப்பியபடியே மாணவர்களுக்குள் புகுந்து வெளியே சென்றார்.
மழை கொட்டோ கொட்டெனக் கொட்டியது. குழந்தைகள் யாரும் நகரவில்லை. அமுதன் தேம்பித்தேம்பி அழுதுகொண்டு இருந்தான். படிப்பது என்றால் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.
“இன்னைக்கு விடுமுறையாம்” என்று ஆசிரியர் சொன்னாலும் யாரும் நகரவில்லை. அந்தத் தாழ்வாரத்திலேயே அனைவரும் அமர்ந்தனர்.
“கல்வி நமது உரிமை. கல்வியே நமக்கு விடுதலை தரும்…” என ஆசிரியர் கூற, அனைவரும் அதனைப் பின்தொடர்ந்து உரக்க முழக்கமிட்டனர். ஊர் முழுக்க இந்த உறுதிமுழக்கம் கேட்கட்டுமென மழையும் தனது ஆட்டத்தைக் கொஞ்சம் நிறுத்தியது.