புரியாத புதிர் அல்ல!
நியூசிலாந்தில் ஒரு யானை மலை!
சரவணா ராஜேந்திரன்
மூன்று சகோதரிகளும் யானைப் பாறையும்
இது நியூசிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.
நியூசிலாந்தின் ஹமில்டன் பகுதியில் தங்கபருது தரன்கி கடற்கரையில் பல பாறைகள் தனித்தனியாக உள்ளன. அவற்றைப் பார்க்கும் போது நின்று கொண்டு இருக்கும் பெண்கள் போலத் தோன்றும். அவற்றில் தனித்து ஒரு பாறை யானையைப் போன்றே இருக்கும்.
உருவான விதம்
பூமியின் நிலப்பரப்பு பிரியும்போது ஆஸ்திரேலியாவிலிருந்து நீண்ட மலைத்தொடர் ஒன்று பிரிந்து கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதுதான் நியூசிலாந்து தீவுகள். இந்த மலைத்தொடர்கள் பல கோடி ஆண்டுகளாக தெற்கிலிருந்து வீசும் கடுமையான குளிர்காற்று மற்றும் கடற்சீற்றம் போன்ற இயற்கைக் காரணங்களால் கரையத் துவங்கின. எளிமையாகப் பாறைகள் அனைத்தும் கரைந்து மணலாக மாறிவிட்டன. கரையாத அதன் உறுதியான பாகங்கள் மட்டும் இவ்வாறு பல தோற்றத்தில் இருக்கும், உலகின் பல பகுதிகளில் இது போன்று உண்டு.
இந்தப் பாறைகள் பார்ப்பதற்கு மனித உருவங்கள் போலத்தெரிவதால் அங்கு வாழ்ந்த பாலினீசியப் பழங்குடியின மக்கள் தமது முன்னோர்கள் இப்படி பாறையாக மாறி தங்களுக்கு உதவுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டனர். அதற்குப் பல கதைகளும் கட்டிவிட்டனர். ஒரு கதை அல்ல, பல கதைகள் உண்டு. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி (கைடு)கள் வேறு வேறு கதைகள் சொல்வார்கள். அதில் ஒரு கதை…
பாலினீசியப் பழங்குடிகளுக்கு பெரும்பாலும் பெண்வழித் தலைவர்கள் தான் உண்டு, அதாவது தாய்வழி முறை.
அப்படி ஒரு குடும்பமாக வாழ்ந்த போது அக்குடும்பத்தின் தலைவியைத் தேர்ந்தெடுக்க, யார் உலகை முதலில் சுற்றி வருகிறாரோ அவரைத் தங்களின் பழங்குடியினத் தலைவி என்று அறிவித்தனர். அக்காலத்தில் பெண்களும் கடலோடினார்-கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு, அப்படி ஒரு குடும்பத்தில் 4 சகோதரிகள் படகுகளை எடுத்துக்கொண்டு உலகைச் சுற்றிவரப் புறப்பட்டனர். ஒரு சகோதரி மட்டும் புத்திசாலித்தனமாக காற்றின் போக்கில் படகைச் செலுத்தி உலகைச் சுற்றிவந்து விட்டார். அதாவது தனது குறிக்கோளில் கவனமாக இருந்ததால் வென்று விட்டார். மற்றவர்கள் பொழுதைப் போக்கிக்கொண்டு சென்ற இடத்தில் உள்ள தீவுகளில் சில காலம் வாழ்ந்து அந்த மக்களின் மொழியைக் கற்றுக்கொண்டு அப்படியே மாறி மாறி பல்வேறு இடங்களுக்குச் சென்றனர், இதனால் அவர்கள் தங்களது சொந்தத் தீவை மறந்து போயினர். சிலோன் தீவிற்கு வந்த அவர்கள் அங்கு உள்ள யானைகளைப் பார்த்து வியந்தனர். அது போன்ற உயிரினத்தை தாங்கள் பார்த்ததில்லை என்றும், ஒரு யானையை தங்களுக்குக் கொடுத்து விடுங்கள் என்றும் கேட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று சிலோன் தீவு மக்கள் ஒரு யானையைக் கொண்டு செல்ல அனுமதித்தனர். அவர்களும் பெரும் நிலப்பரப்பைக் (ஆஸ்திரேலியா) கடந்து சென்று தங்களது தீவிற்கே வந்துவிட்டனர். அவர்கள் தாங்கள் சிலோனில் இருந்து யானை ஒன்றை பெரும் நிலப்பரப்பைக் கடந்து கொண்டுவந்தோம் என்று அந்தத் தீவு மக்களிடம் கூறினார்களாம்.
ஆனால், இவர்களின் சகோதரியான மகாராணி தங்கள் சகோதரிகள் தங்களது குறிக்கோளை மறந்து கடமையைச் செய்யாமல் ஊரைச்சுற்றியும், தங்களது நிலத்திற்கு ஒவ்வாத ஒரு பெரிய விலங்கையும் கொண்டுவந்தார்கள் என்றும் கோபம் கொண்டு அவர்கள் தீவிற்குள் வரக்கூடாது என்று தடுத்துவிட்டாராம். அவர்களும் பல காலம் காத்திருந்து அப்படியே சிலையாகிவிட்டார்களாம். அவர்களோடு வந்த பாவத்திற்கு அந்த யானையும் சிலையாகிவிட்டதாம்.
அந்த யானைபோன்ற பாறையின் துதிக்கைப் பாகம் 2016ஆம் ஆண்டு வீசிய கடுமையான புயல்காற்றில் பெயர்ந்து விழுந்துவிட்டது, ஆகையால் இன்று நீங்கள் சென்றால் துதிக்கை இல்லாத யானைப் பாறையைப் பார்க்கமுடியும். இதுவே சில நூற்றாண்டுகள் கழித்துப் பார்த்தால் அங்கு பாறைகள் இல்லாமல் கூட போகக் கூடும். அங்கு கூறிய கதைகள் அனைத்தும் யானைப் பாறையின் துதிக்கை உடைந்து போன பிறகு நகைச்சுவைக் கதையாகிவிட்டன. சுமார் 70க்கும் மேற்பட்ட கதைகள் அந்தப் பாறை குறித்து உள்ளன. அதில் மேலே கூறிய இந்தக் கதை பிரபலமானது. ஏதோ ரசிக்கும்படி அழகாகக் கதைகட்டி உள்ளனர்.
இதே போன்று ஒரு பாறை அட்லாண்டிக் கடலின் வடதுருவத்தின் கீழே உள்ள அய்ஸ்லாந்து தீவிலும் அசல் யானையைப் போல துதிக்கை மற்றும் கண்கள் உள்ளதைப் போன்ற வடிவம் கொண்ட பாறை உள்ளது. துவக்க காலத்தில் அங்கு சென்ற வைகிங் கடல் பயணிகள் அதை வியப்பாகப் பார்த்தனர். ஆனால் கதையை உருவாக்கவில்லை. காரணம், வைகிங்குகள் வாழ்ந்த 4000 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்ப் பகுதிகளில் யானைகள் இருந்ததில்லை. ஆகையால் அவர்கள் யானைப்பாறை குறித்து கதை ஒன்றும் சொல்லவில்லை. இன்றும் அது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது.
நமது ஊரில் இதே யானை வடிவில் ஒரு மலை உள்ளது. மதுரை மாநகருக்குள் நுழையும் முன்பு நமது கண்ணில் தெரிவது யானைமலைதான், முன்பு யானைமலை இருக்கும் ஒத்த கடையும் மதுரையும் வேறு வேறாக இருந்தன, இன்றோ நகரப் பெருக்கத்தில் மதுரை மாநகரம், மேலூர் வரை நீண்டுவிட்டது, இந்த யானைமலைக்கு நம்மவர்கள் வைத்த கதை இந்திரன் மீனாட்சியுடன் போர் செய்ய அனுப்பிய அவனது அய்ராவதம் என்ற வெள்ளை யானையை மீனாட்சி கல்லாக மாற்றிவிட்டார் என்பது. அதை நம்பும் கூட்டம் இன்றும் உள்ளது.
அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை. பல கோடி ஆண்டுகளாக காற்றின் வேகத்தில் சிறுகச் சிறுகக் கரையும் பெருமலைகள்தான் இவ்வாறு யானையைப் போன்றோ, வேறு விலங்குகளைப் போன்றோ, நமக்குத் தெரிந்த வடிவத்தில் இருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்கிறோம்.. ஆகவே, நாம் எந்த ஒரு கதையையும் நம்பாமல் அதன் உண்மைத் தன்மையை , “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’’ (குறள் _ 355) என்னும் குறள்வழி ஆராய்வோம்.