சாதனைப் பிஞ்சுகள்
பல்துறை கவுதமன்
தேனி மாவட்டம் பெரியகுளம். நகரைச் சார்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும். ஏழு வயதுச் சிறுவன் கவுதமன். இவனுடைய தந்தையார் பெயர் ரமேஷ்குமார் _ ஆசிரியர், தாயார் பெயர் தாழையம்மாள்.
கவுதமன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
திருக்குறள் ஒப்பித்தல், கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டரங்கம், மாறுவேடப் போட்டிகள் எனப் பலவற்றில் கலந்துள்ளார்.
அண்ணல் காந்தி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், விவேகானந்தர், பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கல்வி வள்ளல் காமராஜர், அக்கினிச் சிறகுகள் அப்துல் கலாம், வள்ளலார், நேரு, கவிஞர் மு.மேத்தா, கவிஞர் வைரமுத்து மற்றும் தேசியத் தலைவர்களின். வரலாற்றை _ நிகழ்வுகளை தமிழில் சரளமாகப் பேசுவதும் இவருக்குக் கைவந்த கலை. இளம் வயதில் இத்தனை நினைவாற்றல் _ பேச்சாற்றல். இவரது பேச்சுகள் தொலைக்காட்சிகளிலும் வலைதளங்களிலும் பரவிவருகின்றன.
இவர் வேந்தர் தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி, சூரியத் தமிழ் தொலைக்காட்சி, தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி ஆகியவற்றில் பேசியுள்ளார்.
வானொலியிலும் பேசியுள்ளார். அன்பு வானொலி, தமிழருவி வானொலியிலும் பேசியுள்ளார். நம் நாட்டில் மட்டுமல்லாமல் மேலை நாடுகளிலும் சிங்கப்பூர், லண்டன், நியூஜெர்சி, ஹாம்பர்க், நெதர்லாந்து நாடுகளில் இணையதளம் வழியாக தமிழ் மொழியின் சிறப்புகளைப் பற்றிப் பேசியுள்ளார். 16 உலகச் சாதனை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளார்.
இவர் பெற்ற விருதுகளும் ஏராளம். பல்வேறு அமைப்புகள் இவரைப் பாராட்டி மகிழ்ந்த போதிலும் பெரியகுளம் கவுதமன் என்னும் பேராற்றல் மிக்கோனைப் பெரியார் பிஞ்சு பாராட்டி மகிழ்கிறது.
மகிழ்வுடன்,
– அன்புக்கரசன், பெரியகுளம்
ஊர் திரண்டு பாரட்டியது
கிருட்டினகிரி மாவட்டம் ஒசூர் முனீஸ்வர் நகரைச் சேர்ந்த சிவன் என்பவர், ஒசூர் டைட்டன் நிறுவனத்தில் பணிசெய்து வருகிறார். மாற்றுத்திறனாளியான அவருடைய மகள் ஒசூர் ‘S&S BATMINTON ACADEMY’ இல் பயிற்சி பெற்று, பக்ரைனில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற‘ASIAN YOUTH PARA GAMES’ இல் இந்தியாவிற்காக தங்கப் பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்று தங்க மகளாக இந்தியா திரும்பிய செல்வி நித்யஸ்ரீக்கு அப்பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில் மகிழுந்தில் (Car) நிற்க வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, முனீஸ்வர் நகர் சமுதாயக் கூடத்தில் உள்ள பெரியார் மன்றத்தில் பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்போர் சங்கத் தலைவர் ரவிகுமார் தலைமையில் பாராட்டுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நித்தியஸ்ரீக்கு சால்வை அணிவித்து பூச்செண்டு வழங்கி பாராட்டி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி குடியிருப்போர் சங்க மேனாள் தலைவரும் ஒசூர் கழக மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு.வனவேந்தன் மற்றும் மகளிர் பாசறைத் தலைவர், மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சால்வை போர்த்தி பெரியார் நூல்களை அளித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் குடியிருப்போர் சங்க நிருவாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அரசியல் கட்சியினரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.