எது வீரம்
கோபி.பத்மாநாபன்
அந்த வகுப்பு மாணவர்களிடையே, சந்துரு, உருவத்தில் அனைவரையும் விடப் பெரியவனும், வசதியான குடும்பத்துப் பையனுமாவான். கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியுடன் கூடிய அவனது சட்டைப் பையில் எப்போதும் நூறு ரூபாயாவது இருக்கும். வீட்டில் செல்லமாக வளர்வதாலோ என்னவோ, எப்போதும் யாருக்கும் அடங்காமல் நடப்பதும், எல்லா மாணவர்களையும் மிரட்டுவதும், அடிப்பதும், காதைத் திருகுவதுமாக, தான் எதற்கும் பயப்படாத பெரிய தைரியசாலி என்றும், வீரன் என்றும் கூறித் திரிவான். அதனால் எல்லா மாணவர்களும் அவனைக் கண்டாலே பயந்து ஒதுங்கிப் போவார்கள்.
அதே வகுப்பில் படிக்கும் மிகவும் ஏழையான அறிவன், உருவத்தில் மிக மிகச் சிறியவன். வறுமையால் அவன் உடல் மெலிந்தும் இளைத்தும் இருக்கும். சந்துரு அவனை எப்போதும் ‘சுண்டெலி’ என்று கேலி செய்து துன்பப்படுத்தினாலும், அறிவன் மிகவும் அமைதியாக அதைப் பொறுத்துக்கொள்வான்.
ஒருநாள், பள்ளி முடிந்து சாலையில் சந்துரு போய்க் கொண்டிருந்தபோது, அவன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கண்ட ஒரு திருடன், சுற்றுமுற்றும் யாரும் அருகில் இல்லாத நேரத்தில், அதைப் பறிக்க முயன்றபோது, ’வீர’னான சந்துரு மிகவும் பயந்து, முகமெல்லாம் வேர்த்து விறுவிறுத்து, இரு கைகளாலும் தனது கழுத்தைப் பொத்தி, ‘அய்யோ, அய்யோ’ என்று அழ ஆரம்பித்தான்.
எதேச்சையாக அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த அறிவன், நிலைமையைக் கண்டு ஓடிவந்து, திருடனிடம், “அண்ணே, அது ‘கவரிங்’ செயின் அண்ணே. ஆனா, அவன்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. அதை அவன் எங்கே ஒளிச்சு வச்சிருக்கான்னு ரகசியமா உங்க காதுல சொல்றேன். கொஞ்சம் குனிங்க’’ என்றான்.
திருடன் சந்துருவை ஒரு கையால் பிடித்து வைத்தபடி, அறிவன் ரகசியமாகக் கூறுவதைக் கேட்க அவனருகே குனிந்தவுடன், அவன் எதிர்பாராதவாறு, அவனது முகத்தில் மூக்கை நோக்கி அறிவன் தன் எலும்புக் கையை முஷ்டியாக மடக்கி, தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி ஒரு குத்து குத்தினான். மூக்கில் இரத்தம் வழிய, வலி பொறுக்க முடியாமல் திருடன் மல்லாந்து விழுந்தான். உடனே சந்துருவைத் திருடனின் வயிற்றின் மீது ஏறி உட்காரும்படி கூறி, அறிவன் உதவிக்காகக் கூவியதும், ஓடிவந்த சிலர், திருடனைப் பிடித்துக் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
‘வீர’னான சந்துருவின் பயம் தெளிந்து, அவன் அறிவனிடம், “ரொம்ப நன்றி, அறிவா. நான் ரொம்பப் பயந்துட்டேன்’’ என்று வெட்கத்துடன் கூறினான்.
அப்போது அறிவன், “சந்துரு, உடலிலே பலம் இருக்குன்னு போலியா ‘வீர’னாகப் பாவனை செய்யக் கூடாது. அமைதியா இருக்கிறவங்க எல்லாருமே கோழைங்கன்னும் நினைக்கக் கூடாது. வீரத்தோட விவேகமும் வேணும். அதை வேண்டிய இடத்துல மட்டும்தான் காட்டணும். அமைதியாக இருக்கிறதுதான் வீரம். அட்டகாசமாக இருப்பதெல்லாம் ஆணவம்’’ என்று கூறி, சந்துருவின் தோள் எட்டாததால், அவனது இடுப்பை அன்புடன் சுற்றியணைக்க, சந்துருவும் நட்புடன் அவனை அணைத்தான்.