நினைவில் நிறுத்துவோம்
யாரையும் ஏன் வெறுக்கனும்?
பெரியார் பிஞ்சுகள் மட்டுமல்ல, பிள்ளைகள், சிறுவர்கள் அனைவரும் இளம் வயதிலே ஒரு கருத்தை ஆழ உள்ளத்தில் பதிவு செய்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.
அது என்ன?
தனக்குள்ள உணர்வுகள் பிறருக்கும் உண்டு. நம் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருப்பதுபோலவே, பிறர் உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும், கடமையும் நமக்கு வேண்டும் என்பதே அக்கருத்து. இதுதான் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கை.
தன் மதிப்பு (சுயமரியாதை) என்பதன் விரிந்த பொருள் ஒவ்வொருவரும் மதிக்கப்பட வேண்டும் என்பதே. “இவர் உயர்ஜாதிக்காரர், இவர் உயர் குடும்பத்தில் பிறந்தவர், இவர் உயர் பதவியில் இருப்பவர் ஆகிய இவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்; கழிவு அகற்றும் பணியாளர், கூலி வேலை செய்பவர், ஏழைகள், கீழ்ஜாதிக்காரர் எனப்படுவோரை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்” என்ற எண்ணம் மதத்தின் பெயரால், சாஸ்திரங்களின் பெயரால் இந்த நாட்டில், இந்த சமுதாயத்தில் பல நூற்றாண்டு காலம் இருந்தது.
இதை அறவே ஒழிக்க பெரியார் கண்ட இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். “உன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அப்படி நீ பிறரிடம் நடந்துகொள்’’ என்றார் பெரியார். இது மனித நேய மலர்ச்சி. ஒழுக்கம் என்பதும், பண்பாடு என்பதும் இதுவே.
இந்தப் பண்பாடு இளம் வயது முதலே நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.
அண்மையில் அப்துல்கலாம் என்ற ஒரு சிறுவனைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. நமது தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் அச்சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அச்சிறுவனிடம், “உங்கள் வாழ்க்கையில் பிடிக்காத நபர்கள் இருக்கிறார்களா?’’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அச்சிறுவன், “யாரையும் பிடிக்காதுனு சொல்லாதீங்க. என்னையே எல்லோரும் ‘பல்லா’னுதான் கூப்பிடுவாங்க. அதுக்காக நான் ஏன் பிடிக்காதுனு சொல்லணும். எல்லோருமே நண்பர்கள்தான்.
நம் நாடு ஒற்றுமை நாடுனு சொல்றோம், உலகத்துல எல்லோருமே சமம், எல்லோருமே நம்மள மாதிரிதான், சிலருக்குக் கஷ்டம் இருக்கும். அதை வெளியில் காட்டமாட்டாங்க…’’ என மனிதநேயத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்திச் சொன்ன பதில் மாஸ் வைரலானது.
ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதே ஆன மாணவன் இந்த அளவிற்கு மனிதநேயத்தையும் ஒற்றுமை உணர்வையும் வற்புறுத்தியது பலரையும் கவனிக்க வைத்தது.
உடனே அந்த மாணவனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் அழைத்துப் பாராட்டினர்.
அப்போது முதலமைச்சரிடம் அப்துல்கலாமின் பெற்றோர், வீடு இல்லாமல் தவிப்பதைச் சொல்லி கோரிக்கை வைக்க, முதல்வரின் உத்தரவுப்படி அவருக்கு உடனடியாக நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட்டது.
அவனது அம்மா தில்ஷாத் பேகம், தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் இவன் பேசியது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த இச்சிறுவன்,
“இந்த உலகத்துல எல்லோருமே சமம். அப்புறம் ஏன் நாம சண்டை போட்டுக்கிறோம்…? இருக்கிறவரைக்கும் ஒற்றமையாவும் மனிதநேயத்துடனும் இருப்போம். யாரையும் வெறுக்க வேண்டாம். இதைத்தான் என் அப்பாவும், அம்மாவும், பள்ளி ஆசிரியர்களும் எனக்குக் கத்துக் கொடுத்தாங்க. அவங்ககிட்ட இருந்து நிறைய படிச்சிருக்கேன். அதையே யூடியூப்ல சொன்னேன்’’ என்றான்.
அப்துல்கலாம் என்ற இந்த மாணவன் மேலே சொல்லியவற்றுள் ஒன்றை, பிஞ்சுகளும் பெரியவர்களும் மறவாமல் மனதில் கொள்ள வேண்டும்.
அதாவது, “அப்பாவும், அம்மாவும், பள்ளி ஆசிரியர்களும் இதை எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள்” என்ற கருத்து முதன்மையானது. அவன் கூறியவர்களோடு பெரியவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்பாடுகளைக் கற்றுத் தர வேண்டும், பிள்ளைகள் அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும். பண்பாடு மட்டுமல்ல; வாழ்வியலையும் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரவேண்டும்.
எடுத்துக்காட்டாக, தனது மகளை பள்ளிக்கு நாள்தோறும் அழைத்துச் செல்லும் தந்தை ஒருவர் என்ன செய்தார் என்பதை அறிய கீழே படியுங்கள்…
“மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதும், பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போதும் வழியிலுள்ள கடைகளுள் ஏதாவது ஒரு கடையின் பெயர்ப் பலகையைக் காட்டி அவரைப் படிக்கச் சொல்வார். வீட்டிற்கு வந்ததும் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை மகளுக்கு விளக்குவார். அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறைகள் என்று மகளுக்கு விளக்கிக் கூறுவார்.
எடுத்துக்காட்டாக, ஒரு தேநீர்க் கடை என்றால்…
“என்னுடைய நண்பர்தான் இந்தக் கடைக்காரர். இங்கே 10 ஆண்டுகளா தேநீர்க்கடை வச்சிருக்கார். நாள்தோறும் காலையில் 5:00 மணிக்கே கடையைத் திறந்துவிடுவார். அதுக்காக, 4:00 மணிக்கே எழுந்துவிடுவார். இரவு 10:00 மணிவரைக்கும் கடை இருக்கும். ஒரு நாளைக்கு 17 மணிநேரம் வேலை செய்கிறார். அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேதான் இருப்பார்.
“நீ வகுப்புல உட்கார்ந்து பாடம் படிப்பாய். நானும் அலுவலகத்துல உட்கார்ந்து வேலை செய்வேன். ஆனால், இவர் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது. நின்ற–படியே வேலை செய்தால்தான் வேலை நடக்கும்.
சுறுசுறுப்பா தேநீர் கொடுக்கணும். டேஸ்ட்டும் நல்லா இருக்கணும்.” இப்படி ஆரம்பித்து, அதில் வரும் வருமானம், சவால்கள் என எல்லாவற்றையும் சொல்வார். அவர் செல்ல மகளும் இடையிடையே நிறைய கேள்விகள் கேட்பார். அவற்றுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்லுவார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடையைப் பற்றிச் சொல்வார்.
ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது நடந்த உரையாடலில், பூ விற்பவர் பற்றிய பேச்சு வந்தது. உடனே எழுந்த அந்தப் பெண், அதுபற்றித் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கோர்வையாகச் சொல்லிக்- -கொண்டே போனார்.
அது மற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அந்த வகுப்பு ஆசிரியருக்கும் தெரியாத பல செய்திகளை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைந்தது. அந்தத் தகவல்களுக்குள் ஒரு மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம், அவர்களின் பொருளாதாரச் சூழல் ஆகியவை வெளிப்பட்டன. இதன் மூலம் எல்லாப் பணிகளும் சிறந்த பணிகளே என்கிற எண்ணம் பிஞ்சுகள் மனதில் பதிந்தது. சில பணிகள் உயர்ந்தவை, சில பணிகளைச் செய்வோர் கீழானவர் என்கிற எண்ணம் வரக்கூடாது என்பதும் புரிந்தது.
இந்த உணர்வுகள் வந்தால் மற்றவர்களை மதிக்கும் பண்பாடும் தானே வரும்! ஒவ்வொருவரும் மற்றவரை மதித்து நடப்பர். இதனால் ஒற்றுமையும், நல்லிணக்கமும் வளரும்.