தலைகீழ் உலகம்
-விழியன்
திடீரென அது நிகழ்ந்துவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்படி நிகழும். அப்படி என்ன நிகழும்? சில மணி நேரங்கள் மனிதர்கள் பறக்க ஆரம்பித்துவிடுவார்கள். பறவைகளால் பறக்க முடியாமல் நடக்க மட்டுமே முடியும். ஆனால், அதில் ஒரு சின்ன சிக்கலும் இருக்கின்றது. இப்படி தலைகீழாக மாறிவிட்டாலும் இதனை சரி செய்ய பறவைகள் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். பத்திரமாகப் பாதுகாக்கப்படும் ஒரு சாவி உள்ளது. அதை பரோபரபன் மலையில் இருக்கும் ஒரு குகைக்குள் சென்று ஒரு கதவில் இருக்கும் பூட்டில் நுழைக்க வேண்டும். இருட்டுவதற்குள் அதனைச் செய்யாவிட்டால் நிரந்தரமாக உலகம் தலைகீழாகவே மாறிவிடும்.
திசு மற்றும் பாசு இருவரிடம்தான் அந்தச் சாவி இருக்கின்றது. இரண்டும் அழகிய பறவைகள். அந்தக் குகை மலையின் மேலே இருக்கின்றது. வழக்கமான நாள் என்றால் எளிதில் பறந்து சென்றுவிடுவார்கள். ஆனால், இன்றோ மலை மீது நடந்துதான் செல்லவேண்டும். பாசு தன் கழுத்தில் அந்தச் சாவியை மாட்டிக்கொண்டது. சாவி என்றால் பெரிய சாவி எல்லாம் இல்லை. வீட்டில் இருக்கும் பூட்டுக்குப் போடும் சாவியின் அளவுதான். பறவைகளுக்கோ அது பாரமாக இருந்தது. ஒவ்வொரு பறவையாக மரத்தில் இருந்து பறக்க முயன்று “தொப் தொப்’’ என விழுந்தன.
“வா திசு வேகமாக நடக்கலாம்’’ என்று கத்தியது பாசு.
வேகமாக இரண்டும் நடந்தன. அவற்றால் ஓட முடியவில்லை. கொஞ்ச தூரம் சாவியை பாசு சுமந்து வந்தது, கொஞ்ச தூரம் திசு சுமந்து சென்றது. மற்ற பறவைகளின் உதவியை நாடக்கூடாது. அதே போல மற்ற பறவைகள் அல்லது மனிதர்கள் சாவியைத் தொடக்கூடாது. போன மாதம்கூட இருவரும் அந்தக் குகையின் வாசலில் நின்றபடி நகரத்தைப் பார்த்திருக்கின்றார்கள். எப்போது உலகம் தலைகீழாகும் என்று தெரியாது, ஆனால் இப்படி மாறினால் சாவியை பொருத்த வேண்டியது இவர்கள் இருவரின் பொறுப்பு. அதனால் அடிக்கடி இங்கு வந்து குகை, கதவு மற்றும் பூட்டைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள்.
வேக வேகமாகப் பாடிக்கொண்டே நடந்து மலையின் அடிவாரத்தை இருவரும் அடைந்துவிட்டனர். “பாசு, அதோ அந்த பாதி தூரம் வரைக்கும் நான் சாவியை மாட்டிக்கிட்டு வரேன்’’ என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டது திசு. பாவம், ரொம்ப பாரமாக இருந்தது போல. சூரியன் தலைக்கு மேலே இருந்தது, இருட்டாவதற்குக் கொஞ்ச நேரம் இருந்தது. ஆனாலும் இந்தக் காரியத்தைச் செய்து முடிக்கவில்லை என்றால் தலைகீழ் உலகம் தலைகீழ் உலகம்தான்.
எனவே, பொறுப்புடன் நடக்கத்துவங்கின. இருவரும் வழக்கமாகப் பறந்து செல்வதால், பாறைகளில் நடந்து சென்றதே இல்லை. வெயிலின் சூடு கால்களைச் சுட்டெரித்தது.
பாதி தூரம் வந்ததும் சாவி கை மாறியது. இல்லை, தலை மாறியது. அப்போது திசுவின் ஒரு காலில் முள் குத்திக்கொண்டது. அச்சோ! இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. திசுவைத் தான் தனியே விட்டு பாசு மட்டும் போக முடியாது. இதுவரையில் வந்த வேகத்தைவிட பாதியாகக் குறைந்தது.
“மெல்ல… மெல்ல…’’
குகை இருக்கும் இடத்தை நெருங்கினர். அப்போதுதான் திரும்பவும் மலைக்குக் கீழே இருக்கும் ஊரைப் பார்த்தார்கள். ஆஹா! ஆஹா! ஆஹா! மனிதர்கள் பறந்துகொண்டு இருந்தார்கள். உற்சாகமாகப் பறந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டும் இருந்தது. அவர்களால் ஆயிரம் அடிக்கு மேல் பறக்க முடியாது.
“வேடிக்கை பார்த்தது போதும் பாசு, இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு. சாவியைப் போட்டுத் திறக்க வேண்டும்’’ என்றது திசு.
பாசு நகராமல் நின்றுகொண்டு இருந்தது. பாசு பார்த்த திசையைத் திசு பார்த்தது. அங்கே ஒரு நீல நிறச்சட்டை போட்ட சிறுவன் ஆயிரம் அடிக்கு மேலே பறந்துகொண்டு இருந்தான்.
“அவனைத் தெரியுதா திசு? நாம ஊருக்குள்ள போகும்போது நமக்கு தானியத்தை வைப்பானே அதே சிறுவன் தான் அவன். மற்றவர்கள் எல்லாம் தானியத்தை வீசுவார்கள். ஆனால் அவன் மட்டும்தான் தொட்டி மேல பத்திரமா எளிதா சாப்பிடும்படி தானியங்களை வைப்பான். அவன்கிட்ட மட்டும் அவ்வளவு பாதுகாப்பா உணர்வேன். அவன் மட்டும் பாரு ரெண்டாயிரம் அடி வரை பறக்கின்றான்.’’
“அந்த நடக்க முடியாத, சக்கர நாற்காலியில போற பையன என்னால எப்படி மறக்க முடியும் பாசு.’’
“இரு அவன் பறக்கட்டும்.”
இருவரும் இருட்டுவதற்கு ஒரு நிமிடம் இருக்கும்வரையில் அந்தச் சிறுவன் உற்சாகமாகப் பறப்பதை ரசித்துக்கொண்டே இருந்தார்கள். கடைசி நிமிடம் குகைக்குள் புகுந்து பூட்டுக்குள் சாவியைச் செலுத்தினார்கள். உலகம் இயல்பு நிலைக்கு மாறியது.
குகைக்கு வெளியே இருவரும் வந்தனர். பறந்துகொண்டிருந்த மனிதர்கள் எல்லோரும் தரையில் நடக்கத் துவங்கிவிட்டனர். ஆனால்…. ஆனால் … அந்தச் சிறுவன் மட்டும் வானிலே பறந்துகொண்டு இருந்தான். பாசுவும் திசுவும் அவன் பறந்துகொண்டிருந்த திசையை நோக்கிப் பறந்தனர்.