கோமாளி மாமா-28: கண்மூடிப் பழக்கம்
மு.கலைவாணன்
தோட்டத்தில் கதை சொல்வதற்காக சரியான நேரத்திற்கு கோமாளி மாமா வந்துவிட்டார். ஆனால், கதை கேட்க வரும் மாணிக்கம், மல்லிகா, செல்வம் யாரும் வரவில்லை. வெகுநேரம் காத்திருந்த கோமாளி மாமாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
எப்போதும், தான் வருவதற்கு முன்பாகவே வந்து காத்திருக்கும் குழந்தைகள் இன்று ஏன் இவ்வளவு நேரமாகியும் வரவில்லை என நினைத்தபடி தோட்டத்தின் வாசலைப் பார்த்தார்.
மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் வேகவேகமாக வந்து கொண்டிருந்தனர்.
மூச்சு வாங்க முன்னால் வந்த செல்வம், “மாமா உங்களை ரொம்ப நேரம் காத்திருக்க வச்சுட்டோம். மன்னிச்சுக்குங்க’’ என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தான்.
“மாமா! வர்ற வழியில ஏதோ ஒரு சாமியாரை பல்லக்குல வச்சி சில பேரு தோளுல தூக்கிக்கிட்டு வந்தாங்க. அதுக்கு, போற வர்ற வண்டிகளை-யெல்லாம் நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசெல்லாம் போட்டு….’’ என வழியில் நடந்த நிகழ்வை விளக்கமாகச் சொன்னாள் மல்லிகா.
“மாமா… ஒரு சாமியாரு ஒரு இடத்துலயிருந்து இன்னொரு இடத்துக்குச் சாமி கும்பிடப் போறாரு. அதுக்கு அவரை, பல்லக்குல தூக்கிக்கிட்டு போனாங்க. அதனால நாங்க வர்றதுக்கு நேரமாயிடுச்சு. அவ்வளவுதான்’’ என்றான் மாணிக்கம்.
“சரி… சரி… எனக்குப் புரிஞ்சுடுச்சு… சாமியாரு எப்பவுமே இப்படி பல்லக்குலேயா போவாரு? நல்ல வசதியான காருலதானே போவாரு. இப்ப மட்டும் அடுத்தவங்க தோளுல போறாரு. பக்கமா இருக்கவே இப்படி பல்லக்குல போறாரு. ரொம்ப தூரப் பயணமா இருந்தா இப்படி இன்னொருத்தர் தூக்கிட்டுப் போற பல்லக்குல போவாரா?” என்று கோமாளி மாமா கேட்டு முடிப்பதற்குள்…
“அப்படிப் போனா எப்ப போய்ச் சேருவாரு? அதுக்கெல்லாம் ஏசி காருல சொகுசாத்தான் போவாங்க’’ என்று பதில் சொன்னாள் மல்லிகா.
”மனுஷனை வச்சு மனுஷன் இழுக்கிற கைரிக்ஷா இருக்கிறதே சமூகக் கேவலம்னு ஒழிச்ச நம்ம நாட்டுல இப்படி நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கு’’ என்றார் கோமாளி.
“அறிவியல் வளர்ச்சி அதிகமாகி அதையும் பயன்படுத்திக்கிட்டே, இப்படி மூடநம்பிக்கையிலே மூழ்கிப் போறவங்களை நினைச்சா சிரிப்புதான் வருது’’ என்றான் செல்வம்.
“மாமா… இந்த மூடநம்பிக்கையெல்லாம் எப்படி நம்ம மக்கள்கிட்டே பரவுது?’’ என தன் சந்தேகத்தைக் கேட்டான் மாணிக்கம்.
“வாங்க… நாம ஒரு விளையாட்டு விளையாடுவோம். அதுக்குப் பிறகு இதைப் பத்திப் பேசுவோம்.’’ என்று தன் சட்டைப் பையில் இருந்து சாக்பீசை எடுத்து பக்கத்தில் இருந்த தோட்டத்துச் சுவரில் படம் ஒன்றை வரைந்தார் கோமாளி.
கொஞ்ச நேரத்தில் அழகான யானைப் படம் வரைந்து முடித்தார்.
“மாமா… யானைக்கு வால் போடலே… என்றான் செல்வம்.
“இருடா… மாமா வரைவாங்க’’ என்றாள் மல்லிகா.
“கொஞ்சம் பொறுங்க! யார்கிட்ட கைக்குட்டை இருக்கு…’’ என்றார் கோமாளி.
“மாமா இந்தாங்க’’ என தன்னிடம் இருந்த கைக்குட்டையை நீட்டினான் செல்வம்.
“உங்கள்ல யாராவது ஒருத்தர் இங்கே வாங்க!’’ என்றார் கோமாளி.
மல்லிகா, “நான் வர்றேன்…’’ என்று முன்னால் போய் நின்றாள்.
“மல்லிகா… நான் உன் கண்ணை இந்தக் கைக்குட்டையாலே கட்டி மூடிடுவேன்… உங்க வலது கையிலே சாக்பீஸ் தருவேன். இடது கையை முதுகுப் பக்கம் பின்னால வச்சிசுக்கிட்டு, யானைக்கு சரியான இடத்துல வால் வரையணும்.
தொட்டுத் தடவிப் பாத்தெல்லாம் வரையக் கூடாது. நீங்க சரியா வால் வரையிறதுக்கு மாணிக்கமும், செல்வமும் ஆலோசனை சொல்வாங்க. அதை நீங்க கேட்டுக்கலாம், புரிஞ்சுதா?” என்று சொல்லியபடி மல்லிகாவின் கண்களை கைக்குட்டையால் கட்டி மூடினார் கோமாளி.
மல்லிகாவை ஒரு சுற்றுச் சுற்றி, யானைப் படத்தின் அருகில் நிற்க வைத்தார். கண்கள் கட்டப்பட்ட மல்லிகா வலது கையில் சாக்பீசைப் பிடித்தபடி சுவரின் அருகில் சென்றாள்.
“இன்னும் கொஞ்சம்… இந்தப் பக்கம் வா… மேலே… கொஞ்சம் கீழே…’’ என மாணிக்கமும் செல்வமும் குரல் கொடுத்தபடி இருந்தனர்.
கோமாளி சிரித்தபடி, மல்லிகா யானைக்கு வால் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தட்டுத்தடுமாறி யானையின் வயிற்றுப் பகுதியில் வாலை வரைந்தாள் மல்லிகா.
மாணிக்கமும் செல்வமும் கை கொட்டிச் சிரித்தனர்.
“கண்ணைத் திறந்து பாருங்க’’ என்றார் கோமாளி. கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்துப் பார்த்த மல்லிகாவும் சிரித்தாள்.
மல்லிகா கையிலிருந்த சாக்பீசை வாங்கிக் கொண்ட கோமாளி, “அடுத்தது யார் வால் போடுறீங்க?’’ என்றார்.
செல்வம், “மாமா நான் வரையிறேன், குடுங்க’’ என்று சாக்பீசை வாங்கிக் கொண்டான்.
“நீங்க சரியா போட்டுடுவீங்களா செல்வம்?’’ என்றார் கோமாளி.
“அய்யா எப்படிப் போடுறேன்னு பாருங்க! மாமா கண்ணைக் கட்டுங்க’’ என்றான் செல்வம்.
செல்வத்தின் கண்களைக் கைக்குட்டையால் கட்டி ஒரு சுற்றுச் சுற்றி படத்தின் அருகில் நிற்க வைத்தார் கோமாளி.
“செல்வம்… இடது கையை பின்னாலே வை’’ என்றாள் மல்லிகா.
பக்கவாட்டில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நகர்ந்த செல்வம், “சரியா இருக்கா மாணிக்கம்’’ எனக் கேட்டபடி படத்தை விட்டு சற்றுத் தள்ளி வாலை வரைந்தான்.
“ஏ!…’’ என மாணிக்கமும், மல்லிகாவும் குரல் கொடுத்தனர்.
கைக்குட்டையை அவிழ்த்துப் பார்த்த செல்வம், “ச்சே… கொஞ்சம் தள்ளிப் போயிட்டேன்’’ என்றான்.
“கொஞ்சமில்லே… ரொம்பவே தள்ளிப் போயிட்டே’’ என்றான் மாணிக்கம்.
“எங்கே.. நீ சரியாய்ப் போடு….’’ என்றான் செல்வம்.
“மாணிக்கம்… சாக்பீசை வாங்கி நீங்க சரியாய் வால் போடுங்க பார்ப்போம்’’ என்றார் கோமாளி.
செல்வத்தின் கையிலிருந்த கைக்குட்டையை வாங்கி, “மாமா என் கண்ணைக் கட்டுங்க… நான் சரியாய் வால் போடுறேன் பாருங்க’’ என்றான் மாணிக்கம்.
கோமாளி மாமா சிரித்தபடி மாணிக்கத்தின் கண்களைக் கைக்குட்டையால் கட்டி ஒரு சுழற்றுச் சுற்றி படத்தின் அருகில் நிற்க வைத்தார்.
சாக்பீசை நீட்டியபடி சுவரின் அருகில் சென்ற மாணிக்கம். சட்டென வால் வரைந்தான் அது யானைப் படத்தின் காது அருகில் இருந்தது.
“வால் எங்கே இருக்கு பாருங்க’’ என்றபடி மாணிக்கத்தின் கண் கட்டை அவிழ்த்தார் கோமாளி.
“பின்னாடி இருக்க வேண்டிய வாலை முன்னாடிப் போட்டுட்டேன்’’ எனச் சிரித்தான் மாணிக்கம்.
“ஏன் உங்களால சரியாய் வால் வரைய முடியல்ல?’’ என்று கேள்வி கேட்டார் கோமாளி.
“கண்ணைக் கட்டிட்டதாலே வால் சரியாய்ப் போட முடியல்ல’’ என்றாள் மல்லிகா.
“மல்லிகாவுக்கு மட்டும் நான் கண்ணைக் கட்டி விட்டுட்டு வால் போடச் சொன்னேன்.
செல்வத்தையும், மாணிக்கத்தையும் கையில சாக்பீஸ் குடுத்து வால் போடுங்கன்னு சொன்னப்ப, “மாமா, என் கண்ணைக் கட்டுங்கன்னு’’ வலிய வந்து கண்ணை கட்டச் சொன்னீங்க… அப்படிச் சொல்லாம நான் சொன்னதைக் கவனமாக் கேட்டு, உடனே போய் வால் போட்டிருக்க முடியுமா… முடியாதா?” என்றார் கோமாளி.
“அட, ஆமா! மல்லிகாவுக்குக் கட்டுன மாதிரியே எனக்கும் கண்ணைக் கட்டுங்கன்னு நானேதான் போயி மாட்டிக்கிட்டேன்’’ என்றான் செல்வம்.
“நானும் அப்படித்தான்’’ என்றான் மாணிக்கம்.
“இப்படித்தான் மனிதர்கள் அறிவியல் வளராத காலத்துல நடந்துகிட்ட மாதிரியே இப்பவும் நடந்துக்கிறாங்க. அதனாலதான் இதை கண்மூடிப் பழக்கம்னு சொல்றாங்க’’ என்றார் கோமாளி.
“இந்த கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகணும்னா நாம ஒவ்வொருத்தரும் கவனமா இருக்கணும்’’ என்றான் செல்வம்.
“நாம மட்டும் கவனமா இருந்தாப் போதாது மத்தவங்களையும் கவனமா இருக்கச் சொல்லுவோம்” என்றாள் மல்லிகா.
கட்டிய கண்களை மட்டுமில்லாது… மன இருளையும் அகற்றிய மகிழ்ச்சியில் புறப்பட்டார் கோமாளி மாமா.
– மீண்டும் வருவார் கோமாளி