சிறார் கதை: ஒரு துளி ஒளி
கோவி. லெனின்
“ஓடி ஆடி விளையாடுவதுதான் உடலுக்கு நல்லது” என்று சொன்னார் தாத்தா.
“வீடியோ கேம்ஸ் ஆடுறோமே, அது நல்லதில்லையா?” என்று கேட்டான் பேரன் நீரன்.
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்றார் தாத்தா.
“அப்படின்னா?” என நீரன் கேட்டான்.
“அப்படின்னா, எதுவாக இருந்தாலும் அளவோடு இருக்கணும். இல்லைன்னா, அது உடம்புக்கும் மனசுக்கும் கெடுதல்தான்னு அர்த்தம்.”
“எந்நேரமும் வீடியோ கேம்ஸே விளையாடாமல், உடம்பில் வெயில் படுற மாதிரி வெளியிலே போய் விளையாடணும்னு சொல்றீங்க.. அதுதானே தாத்தா?” என்றான் நீரன்.
‘ஆமாம்’ என்பது போல தலையாட்டினார் தாத்தா.
தாத்தாவிடம் ஹைஃபை செய்து-விட்டு, வீட்டுக்கு வெளியில் வந்தான் நீரன். அவனுடைய நண்பர்களை அழைத்தான்.
விடுமுறை நாள்களில் கொஞ்ச நேரம் வெளியில் விளையாடலாம் என்பதைச் சொன்னான். நண்பர்-களும் அதை அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சொன்னார்கள்.
“மாலை நேர வெயிலில் விளையாடுவது நல்லது. பத்திரமா விளையாடணும். யாருக்கும் தொந்தரவு ஏற்படக்கூடாது” என்று சொல்லி அனுப்பினர் பெற்றோர்.
நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்கள். விளையாட்டுத் திடல் என்றால் கிரிக்கெட், கால்பந்து, பேட்மின்டன் என விளையாடலாம். அதற்கான வாய்ப்பு தெருவில் இல்லை. அதனால், ஒளிந்து பிடித்து விளையாடலாம் என்று முடிவு செய்தனர்.
“சாட்.. பூட்.. த்ரீ” போட்டனர்.
அதாவது, சாட்..பூட்.. த்ரீ என்று சொல்லிக்கொண்டே ஒரே நேரத்தில் எல்லாரும் இடது உள்ளங்கை மீது வலது உள்ளங்கையை வைக்க வேண்டும். நேராகவும் வைக்கலாம். தலைகீழாகவும் வைக்கலாம். எந்தப் பக்கம் அதிகமாக வைக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் வெளியேறிவிடுவார்கள். மிச்சமிருப்பவர்கள் சாட்..பூட். த்ரீ போடுவார்கள். இப்படியே ஒவ்வொருவராக வெளியேறியபின், யார் கடைசியாக இருக்கிறாரோ அவர்தான், கண்ணைப் பொத்திக் கொண்டு 20 வரை எண்ண வேண்டும். அதற்குள் மற்றவர்கள் போய் ஒளிந்து கொள்வார்கள்.
ஒளிந்தவர்களை ஒவ்வொருவராகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். எல்லாரையும் கண்டுபிடித்த பிறகு, முதலில் மாட்டியவர் எவரோ, அவர் அடுத்த முறை கண்டுபிடிக்க வேண்டும். மற்றவர்கள் ஒளிந்து கொள்வார்கள். இப்படியே ஆட்டம் தொடரும்.
மாலை நேரம் என்பதால் வெயில் மெல்ல மெல்ல மங்கி, இருட்டு வரத் தொடங்கும். அதுவரை விளையாடுவதற்கு, ஒவ்வொரு வீட்டிலும் அனுமதித்திருந்தார்கள்.
“எங்கே வேண்டுமானாலும் ஒளிந்து விளையாடலாம். மரத்துக்குப் பக்கத்தில் உள்ள வீட்டுப் பக்கம் மட்டும் போய் ஒளியக்கூடாது” என்று எச்சரித்திருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த வீட்டில் உள்ள பெண் நோயினால் இறந்து போய்விட்டார். அவர் இறந்தபிறகு, இறுதிச் சடங்குகள் செய்யாமல் எரித்துவிட்டார்களாம். அதனால், அந்தப் பெண் இரவு நேரத்தில், வெள்ளை நிறத்தில் ஆவியாக அந்த வீட்டுக்குள் அலைகிறார் என்று எல்லாரும் நம்பினார்கள். அதனால், இருட்டிய பிறகு, பெரியவர்களே அந்தப் பக்கம் போக மாட்டார்கள். சிறுவர்களையும் போகக்கூடாது என்று எச்சரித்தனர்.
அதை ஏற்று, ஒளிந்து பிடித்து விளையாடும்போது, மரத்துக்குப் பக்கத்தில் உள்ள வீட்டுக்குள் போய் ஒளியக்கூடாது என்று அவர்களுக்குள் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், நீரன் மட்டும் அதை மீறி அங்கே போய் ஒளிந்துவிட்டான். நீண்ட நேரம் கழித்தே அவன் அங்கு ஒளிந்திருப்பதை மற்ற சிறுவர்கள் கண்டுபிடித்தனர்.
விளையாட்டின் விதியை மீறியதால், “நீ இனிமேல் ஆட்டத்தில் கிடையாது” என்று அனுப்பிவிட்டனர். அவன் மிகவும் வருத்தத்துடன் வீட்டுக்கு வந்தான்.
அவனது முகத்தைப் பார்த்த தாத்தா, “என்ன ஆச்சு?” என்று விசாரித்தார். விவரத்தைச் சொன்ன பேரன், “தாத்தா.. அந்த வீட்டுல ஆவி சுத்துதா?” என்று கேட்டான்.
“நம்ம வீட்டில்தான் இட்லி அவிக்கும்போது ஆவி சுத்தும். ஆள் இல்லாத வீட்டுல, அடுப்பே எரிக்க மாட்டாங்களே, அப்புறம் எப்படி ஆவி இருக்கும்?” என்று சிரித்தபடி கேட்டார்.
“எல்லா பையன்களும் பயப்படுறாங்க தாத்தா. அவங்க வீட்டிலேயும் பயமுறுத்தியிருக்காங்க” என்றான் நீரன்.
“நாளைக்கு பஞ்சாயத்தைக் கூட்டி முடிவு பண்ணிடுவோம்” என்றார் தாத்தா.
மறுநாள் மரத்தடியில் பஞ்சாயத்து கூடியது. தெருவில் உள்ள மக்கள் எல்லாரும் வந்திருந்தனர்.
தாத்தாதான் எல்லாரைவிடவும் பெரியவர். அவர் பேசினார். “பக்கத்திலே இருந்த வீட்டிலே வாழ்ந்த பொண்ணு, வியாதி வந்து இறந்து போய்விட்டது.
அதற்காக அங்கே ஆவி சுத்துதுன்னு சொன்னீங்கன்னா சின்னப் புள்ளைங்க பயந்திடும். இந்த வயசிலே அவங்களுக்கு தைரியத்தை சொல்லிக் கொடுக்கிறதை விட்டுவிட்டு, இப்படி பயமுறுத்தலாமா?” என்று கேட்டார்.
கூட்டத்தில் ஒருவர், “அந்த வீட்டுக்குள்ளே ராத்திரி நேரத்திலே வெள்ளை நிறத்தில் ஆவி அலைவதைப் பார்த்திருக்கோம். அதனாலதான் பயமா இருக்கு” என்றார்.
“அதென்ன.. ஆவிக்கு வெள்ளை நிறம்தான் பிடிக்குமா? வேற கலர் இருக்காதா? தைரியமான ஆளுங்க என்கூட வாங்க. இன்னைக்கு ராத்திரி அந்த ஆவியைக் கூப்பிட்டு விசாரிச்சிடுவோம்” என்றார் தாத்தா.
“பெரியவருக்கு ரொம்ப துணிச்சல்தான்” என்றனர் தெருவாசிகள்.
அன்று அமாவாசை. இரவு வானத்தில் நிலா இல்லை. இருட்டாக இருந்தது. மரத்தடிக்கு தாத்தா வந்தார். அவர்கூட பேரனும் வந்திருந்தான். தெருமக்களில் ஆறேழு பேர் வந்திருந்தனர். போலீஸ்காரர் ஒருவரும் வந்திருந்தார்.
அந்த வீட்டுக்குச் சென்றனர். லேசாகத் திறந்திருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். இருட்டில் வெள்ளையாக எதுவோ அசைந்து கொண்டிருந்தது.
“தாத்தா.. பார்த்தீங்களா, வெள்ளை நிறத்தில ஆவி அலையுது. இப்பவாவது நம்புங்க” என்றனர் மற்றவர்கள்.
“சரிப்பா.. பூட்டை உடைத்து, கதவை திறந்து, ஆவிகிட்டேயே விசாரிச்சிடுவோம். அதுக்குத்தான் போலீஸையும் வரச் சொல்லியிருக்கோம்” என்றார் தாத்தா.
போலீஸ் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டது. எல்லாரும் பயந்திருந்தனர். தாத்தா தைரியமாக இருந்தார்.
“செல்போன் வச்சிருக்கிறவங்க. டார்ச் லைட்டை ஆன் பண்ணுங்க” என்றார். டார்ச் லைட் எரிந்தது.
கதவைத் திறந்தார் தாத்தா. உள்ளே.. ..
அந்தப் பெண்ணின் வெள்ளை நிற உடை காயப் போடப்பட்டிருந்தது. அதுதான் இருட்டில் அசைந்து கொண்டிருந்தது.
எல்லாருக்கும் உண்மை தெரிந்தது.
அவர்களைப் பார்த்து தாத்தா, “நம்ம மனசு இருட்டா இருந்தால் பயம் கூடு கட்டும். அதில் பேய், பிசாசு, ஆவி குடியேறும். துணிச்சல் என்கிற வெளிச்சத்தை ஏத்தி வச்சா பேய், ஆவி எல்லாம் போயிடும். உண்மை என்னன்னு தெரியும்” என்றார்.