நினைவில் நிறுத்துவோம் : நாட்டு நடப்புகளை நாம் அறிவது கட்டாயம்!
சிகரம்
சிறுவர்களும், இளைஞர்களும் கல்வியில் கவனம் செலுத்தி, கற்பது கட்டாயம் என்பது போலவே, நம்மைச் சுற்றிலும், நாட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை நாம் அறிய வேண்டியதும் கட்டாயமாகும்.
கல்வியைப் போலவே பொது அறிவும் முதன்மையானது, தேவையானது. மூன்று வயது முதலே கல்வி கற்பிக்கப்படுகிறது. கற்பிப்பது என்பது ஒரு கலை, ஒரு திறன், ஒரு நுட்பம். புத்தகத்தில் உள்ளதை விளக்கிச் சொல்வது மட்டும் கற்பித்தல் என்ற எண்ணம் பல பெற்றோரிடமும், ஆசிரியரிடமும், கல்வி நிறுவனங்களிடமும் உள்ளது. இது சரியானது அல்ல.
பிஞ்சு உள்ளங்கள் சுமையாக உணராமல், ஆர்வத்தோடு பெறுவதாய் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். மூன்று வயது முதல் அய்ந்து வயது வரை ஆடல், பாடல், விளையாட்டு, செயல் விளக்கம், சிந்தனைத் தூண்டல், வினாக்களுக்கு விடைகளைச் செய்தல் என்று ஆசிரியர் _ மாணவர் கருத்துப் பரிமாற்ற கலந்துறவாடல், கலந்துரையாடல் முறையில் அமைய வேண்டும்.
அப்படி விளையாட்டாய் பாடம் கற்பிக்கப்படும்போது, பிஞ்சுகளுக்குத் தேவையான வாழ்வியல் செய்திகளையும் நாள்தோறும் கூற வேண்டும். உறவுமுறை, உணவுமுறை, உதவும் முறை, செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, பார்க்கக் கூடியவை, பார்க்கக் கூடாதவை பற்றி நாள்தோறும் கூற வேண்டும்.
ஆறு வயது முதல் பதிமூன்று வயது வரை பாடங்களின் அடிப்படைகளை அய்யமறக் கற்பிக்க வேண்டும். குறிப்பாக, படிக்க, எழுத, கணக்கிட, எந்தத் தடையுமில்லாப் பயிற்சி வேண்டும். இந்த அடிப்படை வந்துவிட்டால் எந்த வகுப்புப் பாடத்தையும் அவர்களால் படிக்க முடியும், புரிந்துகொள்ள முடியும்.
அப்படி அடிப்படைகளைக் கற்பிக்கும்போதே, அக்குழந்தைகளுக்கு வாழ்வியல்சார் செய்திகளையும் கற்பிக்க வேண்டும். பிள்ளைகளுக்குப் பாதிப்பு எவற்றால் வரும், அவற்றைத் தவிர்ப்பதும், எதிர்கொள்வதும் எப்படி என்றும் கற்பிக்க வேண்டும். உடன் பழகுகின்றவர்களிடம் எப்படியெல்லாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பது பற்றியும் குழந்தைகளுக்குக் கூற வேண்டும். அவற்றோடு, நாட்டில் நடக்கும் அன்றாட முக்கிய நிகழ்வுகள், தட்பவெப்பநிலை, அவற்றிற்கு ஏற்ப எப்படி வாழ வேண்டும், எவற்றை உண்ண வேண்டும், எவற்றை உண்ணக் கூடாது, யாரோடு பழக வேண்டும், யாரோடு பழகக் கூடாது போன்றவற்றையும் கூற வேண்டும்.
பதின்மூன்று முதல் பதினைந்து வயது வரையுள்ள மாணவர்களுக்கு உளவியல் அணுகுமுறையும் கட்டாயம். உடல் சார்ந்தும், உள்ளம் சார்ந்தும் பல்வேறு மாறுதல்களைப் பிள்ளைகள் அடையும் பருவம் அது என்பதால், அவர்களை மென்மையாக, ஆதரவுடன் நடத்த வேண்டும். உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த, உணர்வு சார்ந்த அறிவுரைகளைத் தர வேண்டும்.
ஆசிரியர், பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை மாணவர்கள் தயக்கமின்றிக் கூற ஊக்கமளிக்க வேண்டும். இந்தப் பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை விளக்குவதோடு, அவற்றை எச்சரிக்கையாய் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்க வேண்டும். சமுதாயத்தில் எப்படிப்பட்டவர்கள் வாழ்கிறார்கள், அரசியல், மதம், உறவுகள், நட்புகள் எப்படியெல்லாம மாணவர்களைப் பாதிக்கும் என்பதையும் விளக்கவேண்டும்.
மேல்நிலை வகுப்பு மாணவர்களும் கல்லூரி மாணவர்களும், படிப்போடு, சரிசமமாக வாழ்வியலையும், உலகவியலையும், அரசியலையும் அறிய வேண்டும்.
மோசடி, வஞ்சகம், ஏமாற்று, சூழ்ச்சி, நம்பிக்கைத் துரோகம் போன்ற சுற்றுச்சூழல் கேடுகளையும் விளக்க வேண்டும், அவர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
பிறருக்கு உதவுதல், இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது இடங்களில் நடந்துகொள்ளும் முறை, கூட்டங்களில், சாலைகளில், வாகனங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பன போன்ற-வற்றையும் அறிவுறுத்த வேண்டும்; அறிந்துகொள்ள வேண்டும்.
உலக அறிவும் பொது அறிவும்
அய்ந்து வயது முதலே உலக அறிவும் பொது அறிவும் மாணவர்களுக்கு வேண்டும். அந்தந்த வயதுக்கு ஏற்ப, அவை கற்பிக்கப்படவும் கற்கப்படவும் வேண்டும். ஆனால், நடைமுறையில் கல்வியென்பது பாடங்களைப் படித்தல் என்ற அளவோடு, மதிப்பெண் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செய்யப்படுகிறது. குறிப்பாக ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் உலக அறிவு பற்றியும், பொது அறிவு பற்றியும் கூறுவதே இல்லை.
அய்.ஏ.எஸ் போன்ற உயர் பதவிகள் மற்றும் துறை வாரியான பணிகள் செய்ய ஆள்களைத் தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்வுகளில் பொது அறிவும், உலக அறிவும் முதன்மை இடத்தைப் பெறுகின்றன.
நிறைய மதிப்பெண் பெற்றவர்களைக் காட்டிலும், உலக நடப்புகளை அதிகம் அறிந்தவர்களையே தேர்வு செய்து பணியமர்த்துகிறார்கள். எனவே, நாளேடுகள், சமூக ஊடகங்களில் கிடைக்கும் தரமான, உண்மையான, உலக அனுபவங்கள் போன்றவற்றை ஒவ்வொரு இளைஞரும் கற்க வேண்டும். இவ்வுலகில் ஒருவரை வாழத் தகுதிப்படுத்த இவையே உதவும்.
அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்:
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் பாடப் புத்தகங்களைப் படிப்பதோடு சரி. நாளேடுகள், பொது அறிவுப் புத்தகங்கள், உலக அறிவு தரும் இணையச் செய்திகளை அதிகம் பார்ப்பதில்லை, படிப்பதில்லை என்று அண்மை ஆய்வு கூறுகிறது. இது மிகவும் கேடான, வருந்தத்தக்க நிலை.
செல்போனில் விளையாடுவது, ஆபாசக் காட்சிகளை ஆர்வத்துடன் தேடுவது, பார்ப்பது அதிகம் நடக்கிறது. மாறாக, ஆளுமையை வளர்க்கும், அறிவு வளர்க்கும், விழிப்பூட்டும் செய்திகள் பார்க்கப்படுவதில்லை. இது இளைய தலைமுறையின் மேம்பாட்டுக்குக் கேடானது.
போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல், தீய செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றை இவை ஊக்குவிக்கும்.
எனவே, தொடக்கக் கல்வி பயிலும் போதே பொது அறிவும், உலகஅறிவும், அன்றாடச் செய்திகளும் அறிய வேண்டியது கட்டாயம். சமூக ஊடகங்களில் தரமான, தேவையானவற்றைத் தேடி அறிதலும் கட்டாயம்.