மானிட மாண்பு
ஜூலை 15-கல்வி நாள்-காமராசர் பிறந்த நாள்
எண்ணும் எழுத்தும் கற்றாலும்
எதிலும் உண்மை காண்பதுதான்
மண்ணில் உயர்ந்த கல்வியென
மனதில் ஏற்றுக் கற்றிடுக!
கண்ணில் காணா ஒன்றன்மேல்
கதைக்கும் பொய்யை நம்பாமல்
உண்மை தன்னை உணர்ந்தறிதல்
உயர்ந்த கல்வி என்றறிக!
பெண்ணும் ஆணும் சரிநிகராய்ப்
பெறலாம் கல்வி என்றதனால்
விண்ணில் கூடப் பறக்கின்றார்
வெற்றி யோடே பெண்களும்தாம்!
கண்ணைப் போன்ற கல்வியினைக்
காசில் லாத ஏழைக்கும்
உண்ணும் உணவோ(டு) ஈந்திட்டார்
உயர்ந்த காம ராசர்தான்!
நண்ணிக் கல்வி கற்றிடுக;
நமது தமிழில் கற்றுயர்க;
எண்ணித் துணியும் அறிவுக்காய்
ஏற்ற கல்வி கற்றிடுக!
கண்ணும் கருத்து மாய்க்கற்று
கற்ற தெல்லாம் பகுத்தறிந்து
மண்ணில் புகழோ(டு) உயர்தல்தான்
மானி டர்க்கு மாண்பாகும்!
– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை