சிறுகதை: குட்டிக் கரடியும் அணிலும்
அதிகாலையிலே கண்விழித்தது குட்டிக் கரடி. ஆனால், காலையில் எழுந்ததும் ஆச்சரியம் அந்தக் குட்டிக் கரடிக்கு. எப்பொழுதுமே இரவு பன்னிரண்டு மணி வரை செல்போனைப் பார்த்து விட்டுத் தூங்கும் பழக்கம் இருந்ததால் அந்தக் கரடிக்கு அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கம் இல்லாமல் இருந்தது. எப்படியாவது இந்தக் குட்டிக் கரடியை மாற்ற வேண்டும் என்று தாய்க் கரடி அன்று அதிகாலையிலேயே எழுப்பிவிட்டது.
அதிகாலையில் எழுந்த குட்டிக் கரடியும் தாய்க் கரடியும் சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தன. அதிகாலைப் பனிப் பொழிவையும் தாவரங்களின் மேல் பனித்துளி வீழ்ந்து தெறிப்பதையும் ரசித்தது குட்டிக் கரடி.
பறவைகள் அதனதன் திசை நோக்கிப் பறக்க ஆரம்பித்தன. முதியவர் ஒருவர் சில சுள்ளிகளை அடுக்கிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அங்கு சென்ற குட்டிக் கரடி, “இந்த வனப்பகுதியில் இதுபோல் கொளுத்தாதீர்கள். காடு தீப்பற்றிக் கொள்ளும்’’ என்று அறிவுரை கூறியது. அதைப் பார்த்த முதியவர் “மன்னித்து விடு குழந்தைக் கரடியே! என்னிடம் போர்த்திக் கொள்ள நல்ல போர்வை இல்லை. எனவேதான் சுள்ளிகளைக் கொளுத்தினேன்’’ என்றார்.
உடனே அந்தக் குட்டிக் கரடி அம்மா கரடியிடம், “அம்மா எப்படியாவது இந்த முதியவருக்கு நல்ல போர்வையை ஏற்பாடு செய்து தரவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டது. அம்மா கரடியும் ‘சரி’ என்று ஒத்துக்கொண்டது. உடனே குட்டிக் கரடி, “நாளைக்கே நான் உங்களுக்கு கனமான போர்வை எடுத்து வந்து தருகிறேன்’’ என்று உறுதி கூறியது.
உடனே அங்கிருந்து புறப்பட்டது. வழியில் தன் நண்பன் அணிலை மரத்தின் மேல் கண்டது. அந்த மரத்தில் அணில் தின்று பாதி பாதியாகத் தொங்கிக் கொண்டிருந்த கொய்யாப் பழத்தைச் சாப்பிடச் சொன்னது. அணில் தின்ற பாதிக் கொய்யாவை நன்றாகச் சுவைத்துச் சாப்பிட்டது. பழம் தந்ததற்காக அணிலுக்கு நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டது.
குட்டிக் கரடிக்கு இந்தக் காலைச் சூழல் நிறையவும் பிடித்துவிட்டது. கொஞ்சம் தூரம் நடந்து சென்றவுடன் நிறைய விதைகள் கீழே கிடந்தன. அம்மா கரடியைப் பார்த்து “இதெல்லாம் என்ன அம்மா?” என்றது குட்டிக் கரடி. “இனி வரும் காலங்களில் மரங்கள் நமக்கு நிறையத் தேவை. சுத்தமான காற்று, குடிநீர் மற்றும் மண் அரிப்பைத் தடுக்கும் மரங்கள்தான் இவை’’ என்றது. “இவற்றை நாம் மண்ணில் புதைத்தால் பெரிய மரமாக வளரும். அந்த மரம் பறவைகளுக்குப் பயன்படும், நிழல் தரும், பழங்களைத் தரும்’’ என்றது.
உடனே, தன் நண்பன் அணிலை அழைத்து விதைகளைப் பொறுக்கித் தரச் சொல்லியது குட்டிக் கரடி. அணிலும் விதைகளைப் பொறுக்க ஆரம்பித்தது. குட்டிக் கரடி பள்ளங்களைத் தோண்டி விதைகளை நட ஆரம்பித்தது. அம்மா கரடிக்கு ஆனந்தமாக இருந்தது. இப்படிச் செல்போனிலேயே மூழ்கி இருக்காமல் காட்டை உருவாக்கும் குட்டிக் கரடியின் அன்றாடப் பழக்கங்கள் இயற்கை சார்ந்து மாறின.
விதைகள் நட்ட பின் சில நாள்களில் சிறிது மழை பெய்தது. குட்டிக் கரடி நட்ட விதைகள் அனைத்தும் முளை விட்டுத் துளிர்க்க ஆரம்பித்தன. குட்டிக் கரடியும் அதன் நண்பன் அணிலும் துள்ளலாக அந்தச் செடிகள் வளரும் பகுதியில் ஓடி ஆடி விளையாடினார்கள். அப்பொழுதுதான் குட்டிக் கரடிக்கு முதியவர் ஞாபகம் வந்தது. நான் தாத்தாவிற்கு ஒரு போர்வை ஏற்பாடு செய்து தர உறுதி அளித்தேன். அவர் குளிரால் துன்பப்பட்டார் என்றது. “நான் அதைச் செய்தாக வேண்டும். என்ன செய்வது அணிலே?’’ என்று கேட்டது குட்டி கரடி.
அதற்கு அணில், “என்னிடம் இறந்த ஆட்டின் தோலில் செய்யப்பட்ட போர்வை ஒன்று இருக்கிறது. இதோ!’’ எனக் கொண்டு வந்து குட்டிக் கரடியிடம் கொடுத்தது. “நன்றி நண்பா’’ எனக் கூறியது குட்டிக் கரடி.
உடனே இருவரும் சென்று, முதியவருக்கு அந்தப் போர்வையை வழங்கினார்கள்.
குட்டிக் கரடி, அணிலின் செயல்களைக் கவனித்த முதியவர், இரண்டு பேருக்கும் நன்றி சொல்லி, நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். உதவும் குணமும், சமூக உணர்வும் தான் சிறந்த சூழலை உருவாக்கும் என்று சொல்லி அவர்கள் தந்த போர்வையைப் போர்த்திக் கொண்டே அவர்களோடு சேர்ந்து விதைகளை நட ஆரம்பித்தார்.<