பாராட்டு
கவிஞர் மு.முருகேசுக்கு பால சாலக்கிய புரஸ்கார் விருது -2021
ஒன்றிய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி, ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய நூல்களுக்கு ‘பால சாகித்திய அகாதெமி விருது’ உடன் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையையும் வழங்கி சிறப்பித்து வருகிறது.
மு.முருகேஷ் எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறைக் குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூலை, 2021ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’க்குத் தேர்வு செய்தனர்.
அதற்கான விருது வழங்கும் விழா, கொல்கத்தா தேசிய நூலகத்திலுள்ள பாஷா பவன் அரங்கில் ஜூலை 30 அன்று மாலை நடைபெற்றது.
சாகித்திய அகாதெமியின் செயலாளர் கே.சீனிவாசராவ் அனைவரையும் வரவேற்றார். சாகித்திய அகாதெமியின் துணைத்தலைவரும் எழுத்தாளருமான மாதவ் கவுசிக், விருது மற்றும் பரிசுத் தொகையினை வழங்கிச் சிறப்பித்தார். மூத்த வங்க எழுத்தாளர் சர்ஷெந்து முகோபாத்யாயா வாழ்த்துரை வழங்கினார். விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ் குறித்த பாராட்டுக்குறிப்பும் வாசிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேஷ், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன் நிறுத்தும் படைப்புகளை எழுதி வரும் மு.முருகேஷ், தமிழில் ஹைக்கூ கவிதைகளை ஓர் இயக்கம் போல் பரவலாகக் கொண்டு சென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
பால சாகித்திய புரஸ்கார் விருதினைப் பெற்ற பிறகு கவிஞர் மு.முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்கு புதிய உத்வேகத்தைத் தரும் வகையில் இந்த விருதினைப் பெற்றுள்ளேன். இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய படைப்பாளிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்” என்றார். இவரைப் பற்றி நம் ஆசிரியர் தாத்தா தனது கடிதத்தில் எழுதி, இந்தக் கதையையும் உங்களுக்காகப் பெரியார் பிஞ்சு இதழில் வெளியிட்டாரே, நினைவிருக்கிறதா? நம் பிஞ்சு வாசகர்கள் சார்பில் எழுத்தாளர் மு.முருகேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!