கோமாளி மாமா-29
தாய்சொல்
மு.கலைவாணன்
விடுமுறை நாளில் கதை கேட்க தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர் மாணிக்கமும், மல்லிகாவும். அவர்களைத் தொடர்ந்து வந்த செல்வம் தன் கையில் வைத்திருந்த சான்றிதழைக் காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்தபடி வந்த கோமாளி… “என்ன செல்வம்… போட்டியிலே உனக்குத்தான் வெற்றியா?” என்றார்.
“ஆமா மாமா! ஒப்புவித்தல் போட்டியிலே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதையைச் சிறப்பா சொன்னதுக்காக எனக்குப் பள்ளிக்கூடத்திலே முதல் பரிசு ரூ.5,000மும், இந்தச் சான்றிதழும் கொடுத்தாங்க மாமா…”
“மாமா! உண்மையிலேயே இவனுக்கு இந்தப் பரிசு தந்திருக்கக் கூடாது…” என்றான் மாணிக்கம்.
“இவன் கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி ரொம்ப நல்லா சொன்னதுனாலேதானே இவனுக்குப் பரிசு கிடைச்சுது. அப்புறம் எப்படி இவனுக்குத் தந்திருக்கக் கூடாதுன்னு சொல்லுவே…?” என உடனே கேட்டாள் மல்லிகா.
“இவனுக்குப் பதிலா இவன் அம்மாவுக்குத்தான் இந்தப் பரிசைத் தந்திருக்கணும் மாமா” என்றான் மாணிக்கம்.
“மாணிக்கம் சொல்றது சரிதான் மாமா… அம்மாதான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் புத்தகத்தைத் தேடிக் கண்டுபுடிச்சு வாங்கிட்டு வந்து கொடுத்து, எப்படிச் சொல்லணும்னு ஒவ்வொரு வரியா அழகா சொல்லிக் கொடுத்தாங்க. நான் சரியாச் சொல்லணும்னு விடாம முயற்சி எடுத்து எனக்காக அதிகக் கவனம் செலுத்துனது எங்க அம்மாதான் மாமா” என்றான் செல்வம்.
“ஆக நாம வாழ்த்துச் சொல்லணும்னா செல்வம் வீட்டுக்குப் போயி அவங்க அம்மாவைப் பாத்துத்தான் வாழ்த்து, பாராட்டெல்லாம் சொல்லணுமா?” எனக் கேட்டாள் மல்லிகா.
“அப்படியும் செய்யலாம்! ஆனா போட்டியிலே கலந்துக்கிட்டு அம்மா சொல்லிக் கொடுத்ததை சரியாச் சொன்னது செல்வம்தானே… அதனாலே முதல்ல செல்வத்தைப் பாராட்டுவோம்” என்றபடி செல்வத்துக்குக் கை குலுக்கி வாழ்த்துகள் சொன்னார் கோமாளி.
மல்லிகாவும், மாணிக்கமும் கை குலுக்கிப் பாராட்டினார்கள்.
“சரி… வாங்க… கதை சொல்றேன்” என்றபடி மரத்தடியில் உட்கார்ந்தார் கோமாளி. மூவரும் அவரைச் சுற்றி அமர்ந்தனர்.
“தாமஸ் ஆல்வா எடிசன் உங்களுக்கு நல்லா தெரிஞ்ச விஞ்ஞானி. அவர்தான் மின்சார பல்பைக் கண்டுபிடிச்சவர். அதோட ஆயிரக்கணக்கான கண்டுபுடிப்புகளை உலகுக்குக் கொடுத்த ஆற்றலாளர்.
அவரைப் பத்தி ஒரு சிறப்பான செய்தியைத்தான் இன்னைக்குச் சொல்லப் போறேன். 1847லே பிப்ரவரி 11ஆம் நாள் அய்க்கிய அமெரிக்க நாட்டுலெ ஓஹியோ மாநிலத்தில் உள்ள மிலன் நகரில் பிறந்தவர். தந்தை _ சாமுவேல் ஓக்டென் எடிசன், தாய்_ நான்சி மேத்தீவ்ஸ் எலியட்.
நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி ஆசிரியை அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, “இதை வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாது. உன் அம்மாவிடம் கொண்டு போய்க் கொடு” என்று சொல்லுகிறார்.
ஆசிரியை கொடுத்த கடிதத்தை தன் அம்மாவிடம் கொடுக்கிறான் சிறுவன் தாமஸ் ஆல்வா எடிசன். அதை வாங்கி, பிரித்துப் படித்த அவன் அம்மா ஓவெனக் கதறி அழுகிறாள்.
ஒன்றும் புரியாமல் நின்ற சிறுவன், ‘என்னம்மா என்ன எழுதியிருக்கு… எதுக்காக அழறீங்க?’ என்று கேட்டான்.
ஒரு நொடி நின்று நிதானித்த அம்மா நான்சி, “மகனே! உலகத்திலேயே புத்திசாலி நீதானாம். உனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இந்த ஊரிலேயே பள்ளிக் கூடம் இல்லையாம். உனக்குக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு ஆசிரியர்களும் இல்லையாம். அதனால் நாளையிலேயிருந்து நிறைய புத்தகங்கள் இருக்கும் நூலகத்துக்கு அழைத்துப் போய் நானே ஆசிரியராக இருந்து கற்றுக் கொடுக்கப் போகிறேன். அதை நினைச்சேன். அதனாலே வந்த ஆனந்தக் கண்ணீர் இது…” என்கிறாள்.
அப்படியே இதை நம்பிவிடுகிறான் சிறுவன் தாமஸ் ஆல்வா எடிசன்.
அடுத்த நாள் மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்லுகிறாள் அம்மா நான்சி. வெளியிலே சிறுவனை நிறுத்திவிட்டு வகுப்பறைக்குள் போய் ஆசிரியையைப் பார்க்கின்றார்.
அந்த ஆசிரியை அம்மாவைப் பார்த்து, “உன் மகனுக்கு மூளை இருக்க வேண்டிய இடத்தில் அழுகிப் போன முட்டை இருக்கின்றது. இந்த அமெரிக்காவில் உள்ள எந்தப் பள்ளியிலும் உன் மகனால் படிக்கவே முடியாது. இந்தாங்க டி.சி. அவனைக் கூட்டிக்கிட்டுப் போயிடுங்க” என்றார்.
“என்னுடைய மகன் அமெரிக்காவில் உள்ள எந்தப் பள்ளியிலும் படிக்க முடியாது என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள்… இருக்கட்டும். ஆனால், என்றைக்காவது ஒரு நாள் என் மகனை இந்த உலகமே ஏற்றுக் கொண்டாடும் நாள் வரும்!” என்று ஆவேசமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அம்மா நான்சி.
பல ஆண்டுகளுக்குப் பிறகு 1888ஆம் ஆண்டு பன்னாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் காட்சி அமெரிக்காவில் நடைபெற்றது.
அதில் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைக் காட்சிப் படுத்தி இருந்தனர். அந்தக் கண்டுபிடிப்புகளைத் தங்கள் நாட்டுக்குக் காப்புரிமை பெற பல நாட்டவர்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.
அக்காட்சியில் தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய கண்டுபிடிப்பான ஒலியைப் பதிவு செய்து மீண்டும் தேவைப்படும்போது கேட்கக் கூடிய கிராமபோன் கருவியை ஓர் அரங்கில் காட்சிப்படுத்தி இருந்தார். அதைப் பார்க்கக் கூட்டம் அலைமோதியது.
அதைக் கண்ட மற்ற நாட்டு அறிவியல் அறிஞர்கள் இதுபோல் செய்ய முடியாது. இது ஏதோ ஏமாற்று வேலை. மேஜிக் போல செய்து காட்டும் இதை ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு என ஒப்புக் கொள்ள முடியாது. இதை காட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனக் கூறி காட்சியிலிருந்தே வெளியேற்றிவிட்டனர்.
அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத தாமஸ் ஆல்வா எடிசன், காட்சி நடைபெறும் இடத்துக்கு அருகிலிருந்த காலி மைதானத்தில் ஓர் அரங்கை அமைத்து அங்கே கிராமபோன் கருவியைக் காட்சிப்படுத்தியிருந்தார்.
பன்னாட்டு அறிவியல் கண்டுபிடிப்புக் காட்சிக்கு வந்தவர்களைவிட இதைக் காண வந்தவர்கள்தான் அதிகம்.
இதைப் பார்த்த அமெரிக்க அரசு சில அறிவியல் அறிஞர்களை அனுப்பி கிராமபோன் கருவி உண்மையான கண்டுபிடிப்புதானா என ஆய்வு செய்யச் சொன்னது.
கிராமபோன் கருவி உண்மையான கண்டுபிடிப்புதான் என சில ஆய்வுகளுக்குப் பின் அறிவியல் அறிஞர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
உண்மை தெரிந்ததும் அமெரிக்க அரசு தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களைப் பாராளுமன்றத்திற்கு அழைத்து சபாநாயகருக்கு அருகில் சரிசமமாக அமர வைத்துப் பாராட்டிப் புகழ்ந்தது. அப்போது தாமஸ் ஆல்வா எடிசன் மகிழ்ச்சி அடையாமல் சோகமாக அமர்ந்திருந்தார். இவரைப் பாராட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஏன்? என்ன ஆச்சு? எனக் கேட்டனர்.
“என்னை ஏன் இந்த அமெரிக்கப் பாராளுமன்றம் பாராட்டுகிறது? என்று வியந்து நிற்கிறேன். இந்தப் பாராட்டுக்குக் கொஞ்சமும் தகுதியில்லாதவன் நான். இந்தக் கண்டுபிடிப்புக்காக நீங்கள் ஏன் என்னைப் பாராட்ட வேண்டும்? என்னை இந்த அமெரிக்கப் பள்ளிகள் உருவாக்க-வில்லை. என்னை உருவாக்கியது என்னுடைய அம்மா. ஏழ்மையில் வாடிய என் அம்மா இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இங்கிலாந்து பாராளுமன்றம் செய்ய வேண்டியதை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?” என தன் கருத்தை உரக்கப் பேசினார். பாராளுமன்றமே அதிர்ந்து போனது.
“என் தாயின் கடுமையான முயற்சியே என்னை இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளைச் செய்யத் தூண்டியது. என் அம்மாவின் கடுமையான முயற்சிதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது” எனத் தன் தாய்ப் பாசத்தை வெளிப்படுத்தினார்.
பாராட்டிப் புகழ்ந்த பாராளுமன்றத்தினர் அனைவரும் வெட்கத்தில் தலைகுனிந்தனர். தாமஸ் ஆல்வா எடிசனின் அம்மா செய்த செயலை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் என்றும் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.
குழந்தையாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசனிடம் ஆசிரியை கொடுத்த கடிதத்தில், “உங்கள் மகன் பெரிய முட்டாளாக இருக்கிறான். அவனுக்கு அமெரிக்காவில் உள்ள எந்தப் பள்ளிக்கூடத்திலும் பாடம் சொல்லித்தர முடியாது. அவனைப் பள்ளியை விட்டு அழைத்துச் செல்லுங்கள்” என்று எழுதியிருந்தது என்றும், ‘இல்லை, இப்படிக் கடிதம் தந்து அனுப்பவில்லை. ஆனால், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் அப்படித் திட்டியதைக் கேட்ட எடிசன், தன் தாயிடம் சொல்ல, வெகுண்ட அவர், தானே கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்’ என்றும் இரு விதமாகச் சொல்கிறார்கள். எப்படியெனினும், எடிசனைக் குறைத்து மதிப்பிட்ட சொற்களையே தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தையாக அம்மா மாற்றியதால்தான் நமக்கெல்லாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் கிடைத்தன.
“இது 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையில் நடந்த காட்சி. அம்மா, அப்பாவின் உதவி குழந்தைகளை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் என்பதற்கு இதுவே சாட்சி” எனச் சொல்லி முடித்தார் கோமாளி.
தாய்ப் பாசத்தைப் புரிந்து கொண்ட மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் தன்னம்பிக்கையோடு புறப்பட்டனர்.