25-ம் ஆண்டில் பெரியார் பிஞ்சு!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. இந்த மாத்திரை இளம் பிஞ்சுகளின் மூளைக்கு ஊட்டமளிக்கிறது. பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கிறது. மனிதநேயர்களாக மாற்றுகிறது. ஆக்கபூர்வமாகச் செயல்பட வைக்கிறது. எப்படி? இதழின் உள்ளடக்கம் அப்படி! இதழின் சாரங்கள் எல்லாம் பிஞ்சுகளின் இரத்த நாளங்களில் பெரியாரின் சிந்தனைகளை ஏற்றுகின்றன! இதழிலும் கொட்டிக்கிடக்கும் அறிவியல் தகவலகள், பிஞ்சுகளின் நியூரான்களில் வலுவேற்றுகின்றன! அவர்கள் அறிந்திருக்கும் ரோபோ போன்ற அறிவியல் உருவங்களுக்கு பொருள் தரும் கட்டுரைகள்! விளக்கம் தரும் குறிப்புகள்! அனைத்தும் சிறார்களின் மொழியில்! ‘சுடோகு’ எனப்படும் கணிதப்புதிர் பிஞ்சுகளின் மூளைகளைச் செயல்பட வைக்கின்றன. இதழில் இடம்பெறும் சிறார் கதைகள் சிந்தனைக்கு விருந்தாக மட்டுமல்ல, மருந்தாகவும் அமைகின்றன! சிறார்கள் பாடும் வகையிலும், புரிந்துகொள்ளும் வகையிலும் எளிய மெட்டுகளுடன் வரும் பாட்டுகள் தங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாக பல பிஞ்சுகள் கடிதங்களில் குறிப்பிடுகின்றனர். இன்னும் பிஞ்சுகளின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், ஓவியம் தீட்டுதல் போன்ற படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும் வகையிலும் பல அம்சங்கள்! ஒட்டுமொத்தமாக இந்தப் ‘பெரியார் பிஞ்சில்’ சிறார்கள் படித்து விளையாடலாம; நீந்தி மகிழலாம்; ஓடித் திளைக்கலாம்! இது ”பெரியார் பிஞ்சு”வின் வெள்ளிவிழா ஆண்டு! இன்று இதன் வாசகர்களாகத் துள்ளித் திரியும் பிஞ்சுகளின் பொன்விழா ஆண்டிலும், முத்துவிழா, மணிவிழா ஆண்டுகளிலும், பெரியார் பிஞ்சு அவர்களுக்குத் தேனாய்த் திகழும்!