உயிர்வதை செய்யாதே!
கல்லை எறிந்து நாயினையும்
காக்கை யையும் விரட்டாதே!
தொல்லை பூனை செய்தாலும்
துரத்தி அடிக்க எண்ணாதே!
தும்பி வாலில் நூல்கட்டித்
துன்பு றுத்தி மகிழாதே!
தம்பி! பட்டுப் பூச்சியினைத்
தீப்பெட் டிக்குள் அடைக்காதே!
எறும்பு செல்லும் வரிசையிலே
எந்தத் தடையும் செய்யாதே!
சுறுசுறுப் புடைய வண்டினையும்
குப்பிக் குள்ளே அடைக்காதே!
உயர்வு தாழ்வு என்றெந்த
உயிரிலும் இல்லை இவ்வுலகில்!
தயவு செய்து மற்றுயிரை
வதைக்கும் கொடுமை செய்யாதே!
– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர், கோவை