கோமாளி மாமா-30
மு.கலைவாணன்
கோமாளி மாமா… விடுமுறை நாளில் தோட்டத்தில் சொல்லும் கதையைக் கேட்பதற்காக வரும் மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூன்று பேரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்கள்.
கதை சொல்லும் கோமாளி மாமா நல்லதம்பியும் அதே நேரத்தில் வந்துவிட்டார்.
வழக்கமாக அவர்கள் அமரும் மரத்தடியில் அனைவரும் உட்கார்ந்தனர்.
“இன்னைக்கு எதைப் பத்தி கதை சொல்லப் போறிங்க மாமா?’’ என ஆர்வத்துடன் கேட்டான் செல்வம்.
“பார்த்ததா? படிச்சதா? கேட்டதா? என்ன கதை?” என்று கேள்வி கேட்டான் மாணிக்கம்.
“உம்… செல்போனிலே யூ டியூப்பில் பார்த்ததைப் பத்தி சொல்லப் போறேன்” என்றார் கோமாளி.
“கொரோனா வர்றதுக்கு முன்னே எங்களை மாதிரி பிள்ளைங்க செல்போனைத் தொடவே கூடாது. தொட்டா… கெட்டுப் போயிடுவீங்க அப்படி… இப்படின்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. கொரோனா வந்து ஆன்லைன் வகுப்பு நடத்த ஆரம்பிச்சதும் செல்போனைக் கீழே கூட வைக்க விடாம அதுலேயே படி படின்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க பெரியவங்க…” என்று தன் மன வருத்தத்தைச் சொன்னாள் மல்லிகா.
“அது என்னமோ உண்மைதான். செல்போனைத் தொட்டாலே விளையாடுவாங்க, கண்டபடி வர்ற தவறானதை குழந்தைங்க பாத்துக் கெட்டுப் போயிடுவாங்கன்னு பல பெரியவங்க இப்பவும் பயந்துக்கிட்டுதான் இருக்காங்க…” என்றான் மாணிக்கம்.
“எதையுமே அறிவுபூர்வமா தேவைக்கு ஏற்ப பயன்படுத்துனா எந்தக் கெடுதலும் வராது. மனிதர்களாகிய நாமதான் நல்லது கெட்டது எதுன்னு தெரிஞ்சு நடந்துக்கணும்” என்றான் செல்வம்.
“அடடே… நான் செல்போனிலே யூ டீயூப்லே வந்ததைப் பார்த்தேன்னு சொன்னதும் அதைப் பத்தி அருமையாப் பேசுனீங்க. நான் பார்த்ததைச் சொன்ன பிறகு அதைப் பத்தி விவாதிப்போம், சரியா?” என்றார் கோமாளி.
“சரி” என மூவரும் ஒப்புக் கொண்டனர்.
கோமாளி மாமா… தான் யூ டியூப்பில் பார்த்ததைச் சொல்லத் தொடங்கினார்.
“பெரிய சாலை… அதில் ஒருபுறம் பிள்ளையார் கோயில்.
அதன் வாசலுக்கு நேராக வந்து நின்றது ஒரு மோட்டார் சைக்கிள்.
அதை ஓட்டி வந்தார் அப்பா. சுமார் 50 வயது இருக்கும். பின்னால் அவர் மகள் _ சுமார் 20 வயது இருக்கும். புதிய உடை. அதுவும் பாவாடை, தாவணி அணிந்து வந்திருந்தார். கையில் பூஜைக்கான தேங்காய், பழம் பூவுடன் ஒரு கூடை வைத்திருந்தார்.
இருவரும் வேகவேகமாகக் கோயிலுக்குள் போனார்கள். போகும்போதே அப்பா கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தார்.
அதைப் பார்க்கும்போதே… அந்தப் பெண்ணுக்குப் பிறந்த நாள். காலையில் வேலைக்குப் போவதற்கு முன்பாக கோயிலுக்குக் கூட்டிச் சென்று விட்டுப் போகலாம்… எனத் திட்டமிட்டிருந்தது தெரிந்தது.
வேகவேகமாகக் கோயிலுக்குள் போனவர்கள் சற்று நேரத்தில் பூஜையை முடித்துக் கொண்டு வேகமாக வெளியே வந்தார்கள்.
அப்போதும் அப்பா மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தபடி மோட்டார் வாகனத்தில் ஏறினார். மகள் பூஜைக் கூடையுடன் வண்டியின் பின்னால் ஏறி பக்கவாட்டில் உட்கார்ந்தார்.
வண்டி வேகமாகப் புறப்பட்டது. கொஞ்ச தூரம்கூடப் போகவில்லை. மகள் அணிந்திருந்த புது தாவணி காற்றில் பறந்து பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.
“அப்பா!” என ஒரு பெரிய சத்தம். சட்டென வண்டியை ஓரமாக நிறுத்தினார் அப்பா.
அதற்குள் அந்தப் பெண்மேல் இருந்த தாவணி மொத்தமும் சக்கரத்தில் சிக்கி இருந்தது. பூஜைக் கூடையைக் கீழே போட்டுவிட்டு இரண்டு கைகளால் உடம்பை மூடியபடி அழுதபடி நிற்கிறாள் மகள். அப்பாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அந்த நேரம் சாலை ஓரம் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர், பர்தா அணிந்திருந்த ஒரு மனைவியும், குல்லா, ஜிப்பா லுங்கியுடன் வந்த அவள் கணவனும்.
தாவணியை இழந்து தவித்து நிற்கும் பெண்; என்ன செய்வதென்றே புரியாமல் நிற்கும் அப்பா. இவர்களைப் பார்த்ததும் ஓடோடி வந்தனர் அந்த இஸ்லாமியக் கணவனும் மனைவியும். வந்த வேகத்தில் தான் அணிந்திருந்த பர்தாவைக் கழட்டி அந்தப் பெண்ணுக்கு போட்டுவிட்டார் மனைவி.
கணவர்… அப்பாவுடன் சேர்ந்து சக்கரத்தில் மாட்டியிருந்த தாவணியை எடுத்தார். கந்தல் கந்தலாகி இருந்தது தாவணி.
ஓடோடி வந்து உதவிய கணவன் _ மனைவி இஸ்லாமியர்கள். கோயிலுக்குச் சென்று பிறந்த நாளன்று பூஜை செய்துவிட்டு வந்த அப்பா _ மகள் இந்துக்கள் என்போர்.
மதங்களைக் கடந்த மனிதநேயம். உடை இழந்த பெண்ணுக்கு உதவிய உள்ளங்கள் பாராட்டுக்கு உரியதுதானே…” என்று தான் பார்த்ததைச் சொல்லி முடித்தார் கோமாளி.
மதம், கடவுள் அனைத்தையும் கடந்து இஸ்லாமியப் பெண் சரியான நேரத்தில் வந்து உதவியதைப் பாராட்டினான் மாணிக்கம்.
ஆபத்து, சிக்கல், துன்பம் வரும்போது எந்தக் கடவுளும் வர்றதே இல்லே. மனிதர்கள்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துக்க முடியும் என்றான் செல்வம்.
“உடை என்பது அழகுக்கானது என்பதை விட நம்முடைய உடலை மறைக்கவும், நம் செயலுக்கு ஏற்றதாகவும் இருக்கிறதுதான் முக்கியம்” என்றாள் மல்லிகா.
“அதைவிட இரு சக்கர வாகனத்திலே போகும்போது துப்பட்டா, தாவணி, துண்டு, வேட்டி, புடவை இதையெல்லாம் கவனமா பார்த்துக்கணும். இல்லாட்டி இப்படித்தான் நடக்கும்” என்றான் மாணிக்கம்.
“நான் பார்த்ததை உங்களுக்குச் சொன்னேன். ஆனா, நீங்க அதுலே பல கருத்துகளைப் புரிஞ்சுக்கிட்டீங்க. மனிதன் எப்பவும் தனக்காக மட்டும் வாழாம மத்தவங்களுக்குப் பயன்படக் கூடிய பயனுள்ள வாழ்க்கை வாழணும்” என்றார் கோமாளி மாமா.
“செல்போனிலே பயனுள்ள தகவலைப் பார்த்து அதை எங்களுக்குப் கதையாய்ச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி” என்றபடி மூவரும் புறப்பட்டனர்.