ஜோதிட நம்பிக்கையே சுத்த நத்திகம்!
திரைப்பட இயக்குநர் திரு. பாக்கியராஜ் அவர்கள் சென்னை சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் ஒரு விவாத அரங்கு நடத்தி ஒளிப்பதிவு செய்தார்.
ஜோதிடத்தை எதிர்த்து நானும், ஜோதிடத்தை ஆதரித்து நடிகர் திரு. ராஜேஷ் மற்றும் பருத்திவீரன் படத்தில் நடித்த திரு. சரவணன் போன்றோரும் வாதிட்டோம். அப்போது, நான் முன்வைத்த ஒன்பது கேள்விகளுக்கு ஒருவராலும் பதில் சொல்ல இயலவில்லை. அதில் முதல் கேள்வியை இங்குக் குறிப்பிட்டால் உங்களுடைய சிந்தனைத் தூண்டலுக்குத் துணை நிற்கும் என்பதால் அதை விளக்க விரும்புகிறேன்.
ஜோதிடத்தை, வாஸ்துவை, இராசிக்கல்லை ஆதரித்து அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த நான், இறுதியில் அக்கேள்வியைக் கேட்டேன்.
ஜோதிடத்தை ஆதரித்துப் பேசும் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? என்றேன். எங்கள் நெற்றியைப் பார்த்தாலே தெரியவில்லையா? நாங்களெல்லாம் பழுத்த பக்தர்கள்! என்றனர்.
ஆனால், நீங்கள்தான் சுத்த நாத்திகர்கள் தெரியுமா? என்று கேட்டேன். அனைவரும் அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் என்னைப் பார்த்தனர்.
ஆம், ஜோதிடத்தை யாரெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள்தான் அசல் நாத்திகர்கள் என்று ஆணித்தரமாய் மீண்டும் சொன்னேன்.
அதெப்படி? அனைவரும் சேர்ந்து கேட்டனர்.
உண்மையான கடவுள் தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறப்பதற்கு முன் அவன் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அவன் வாழ்வை, தலையெழுத்தாக நிர்ணயித்து, அவனைப் பிறக்கச் செய்து, அவனை வாழச் செய்கிறது கடவுள் என்கின்றது.
அதன்படி பார்க்கின், ஒருவனது வாழ்க்கை அவன் சென்ற பிறவிகள் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப, இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது என்பது பொருள்.
ஆனால், ஜோதிடம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறக்கும்போதுள்ள கிரகங்களின் நிலையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறது.
அப்படியாயின் ஒருவன் வாழ்வை கிரகங்கள் தீர்மானிக்கின்றனவே தவிர கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது. அதன்படி பார்த்தால் கடவுளுக்கே வேலை இல்லை. அப்படியாயின் கடவுளே இல்லை என்று ஆகிறது.
ஆக, ஜோதிடத்தை மறுக்கிறவன் கடவுளை மறுக்கிறான். எனவே அவன் நாத்திகன்தானே!
வாஸ்துவை நம்புகிறவன் அதைவிடப் பெரிய நாத்திகன். காரணம், வாசக்காலை மாற்றி அமைத்தால் வாழ்வே மாறுகிறது என்றால் வாழ்வை கடவுளும் தீர்மானிப்பதில்லை. கிரகங்களும் தீர்மானிப்பதில்லை; வாசலும் ஜன்னலும் இருக்கும் இடங்களே தீர்மானிக்கின்றன என்றாகிறது. அதன்படி, வாஸ்துவை நம்புகிறவன் கடவுளையும் மறுக்கிறான். ஜோதிடத்தையும் மறுக்கிறான் என்றுதானே பொருள்?
எல்லோரையும்விட இராசிக்கல்காரன் மகாபெரிய நாத்திகன். காரணம், வாழ்வை கடவுளும் தீர்மானிப்பதில்லை; கிரகங்களும் தீர்மானிப்பதில்லை; வாஸ்துவும் தீர்மானிப்பதில்லை; அணிகின்ற கல்லைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது என்கிறான்!
எனவே, எல்லாமே ஒன்றுக்கொன்று முரண். முரண்பட்டவை எதுவும் உண்மையல்ல என்பது பொருள். ஆக கடவுளும் இல்லை; ஜோதிடமும் பொய்; வாஸ்து சுத்தப் பொய்; இராசிக்கல் இணையில்லாப் பொய் என்பது விளங்குகிறது அல்லவா?
எனவே, பிஞ்சுப் பிள்ளைகள் இவற்றைக் கொஞ்சம் சிந்தித்தாலே மடமையில் இருந்து மீண்டு அறிவு வழியில் செம்மையாய் வாழலாம்; சிந்திக்கலாம்! பெரியவர்கள்கூட இதனை ஆழமாகச் சிந்தித்தால் மடமை நீங்கி அறிவுடன் வாழலாம்! அச்சம் தவிர்க்கலாம்!
– சிகரம்