எழுதினான்… எழுதிக்கொண்டே இருந்தான்!
விழியன்
எழில்மாறன் பள்ளிக்கூடம் செல்வதற்குத் தயாரானான். இன்று அவனுக்கு அரையாண்டுத் தேர்வு. “எழில், படிச்சிட்டியா?” என்று பாட்டி விசாரித்தார். அவன் நன்றாகப் படிப்பவன். எந்தக் கேள்வி கேட்டாலும் ‘டக் டக் டக்’கெனப் பதில் சொல்லுவான். வகுப்பில் யாருக்கு எந்த சந்தேகம் என்றாலும் அவனிடம் வந்து கேட்பார்கள். ஆறாம் வகுப்பிலேயே பல அறிவியல் புத்தகங்களை வாசிப்பான். ஆனால், ஒரு பெரிய சிக்கல் உண்டு. அவன் எழுத மாட்டான். எழுதவே மட்டான் என்று சொல்ல முடியாது. வழக்கமாக தேர்வு 30 மதிப்பெண்ணுக்கு வைக்கின்றார்கள் எனில், இவன் எட்டு மதிப்பெண்ணுக்குத்தான் எழுதுவான். 30 மதிப்பெண்ணுக்கும் பதில் அவனுக்கு தெரியும். மிகவும் மெதுவாக எழுதுவான். ‘அ’ போடவே ஒரு நிமிடம் எடுத்துக்கொள்வான். “அவனிடம் எந்தக் குறையும் இல்லை” என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். “அவன் ஒரு திறமைசாலி” என அவனுடன் பேசும் மருத்துவர்கள் எல்லோரும் சொல்லிவிட்டார்கள்.
பள்ளிக்குச் செல்லும் ஆட்டோ வந்தது. “பென்சில், எரேசர், ரைட்டிங் பேட், பென், அய்.டி. கார்டு எல்லாம் எடுத்துகிட்டியா?” என அம்மா குரல் கொடுத்தார். எழில் தன்னுடைய வலது கால்சராய் பாக்கெட்டினைத் தொட்டுப் பார்த்து “ஆமாம்மா. எடுத்துக்கிட்டேன்” எனக் கத்தினான். மெல்லிதாக தனக்குள் சிரித்துக்கொண்டான். ஆட்டோவில் தன்னுடைய வகுப்புத் தோழியும் வருவாள். புத்தகத்தில் இருந்து கண்ணையே எடுக்கவில்லை. ஆட்டோ பள்ளியைச் சேரும் வரையில் படித்துக்கொண்டே வந்தாள். “டேய், நீ படிச்சிட்டியா?” என்றாள். ம்ம்ம்… என்று பதில் கொடுத்தான். அவன் அடுத்த பருவத்துப் பாடங்களையே படித்துவிட்டான். “படிச்சிடுவே, ஆனா நீ வேகமா எழுதினா நீதான் முதல் மார்க் வாங்குவ” என்றாள். வகுப்பில் அநேகமான நண்பர்கள் வந்துவிட்டார்கள். ஒரே பரபரப்பாக இருந்தார்கள். பரபரப்பே இல்லாமல் இருந்தவன் எழில் மட்டுமே.
“ரோல் நம்பர் 1_-30 மட்டும் ஏழாம் வகுப்புக்குப் போங்க”. எழில்மாறன் ஏழாம் வகுப்பறைக்கு தேர்வு எழுதச் சென்றான். புதிதாகச் சேர்ந்திருந்த இசை ஆசிரியர்தான் அன்றைய தினம் அந்த வகுப்பில் கண்காணிக்க வந்திருந்தார். இரண்டரை மணி நேரத் தேர்வு. 150 நிமிடங்கள். சரியாக 9:30க்கு ஆரம்பித்து 12:00 மணி வரை தேர்வு. “தண்ணி குடிச்சிட்டு வரவங்க, யூரின் போறவங்க எல்லாம் முன்னாடியே முடிச்சிட்டு வாங்க” என்று கூறினார். இன்னும் 9:30க்கு சில நிமிடங்கள் இருந்தன. பாதிப்பேர் ஓடிப்போய் அவர் சொன்னதைச் செய்தார்கள். சிரித்தபடியே எழில் அமர்ந்து இருந்தான். அன்று அறிவியல் பாடத்தில் தேர்வு. அந்த வகுப்பிற்கு அறிவியல் ஆசிரியர் முத்துமீனாள் வந்து குறிப்பாக எழிலிடம், “தம்பி, வேகமா எழுதிடுடா” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
9:30 ஆயிற்று…
கடகடவென எல்லோரும் வினாத்தாளைப் படிக்க ஆரம்பித்தார்கள். சில வெளிறிய முகங்கள். சில மலர்ந்த முகங்கள். சிலர் ஸ்கேல் எடுத்து பார்டர்கள் போட ஆரம்பித்தார்கள். ‘சர்.. சர்.. சர்…’ என சத்தம் வந்தது. கால்மணி நேரம் கழித்து விடைத்தாளில் தன்னுடைய பெயர், வகுப்பு, பாடம், தேதி ஆகியவற்றை எழுதி முடித்திருந்தான். இசை ஆசிரியர் அவன் தாளினைப் பார்த்து “என்ன மாறா, இவ்ளோ நேரம் ம்யூசிக் போட்டுக்கிட்டு இருந்தியா?” என்று கிண்டலடித்துச் சென்றார். அதே வகுப்பில் சில ஏழாம் வகுப்பு மாணவர்களும் சில எட்டாம் வகுப்பு மாணவர்களும் இருந்தார்கள். அரை மணி நேரமானது. ஏதோ நினைவு வந்த எழில்மாறன் தன் கால்சராய்க்குள் கைவிட்டு சிரித்துக்கொண்டான். அன்றைய விடைத்தாளில் இரண்டு தட்டச்சுப் பிழை இருப்பதைக் கண்டுபிடித்திருந்தான். அதனை முதலிலேயே சுழித்தான்.
இன்னும் சில நிமிடங்களானது. இசை ஆசிரியர் குழம்ப ஆரம்பித்தார். இன்னும் சில நிமிடங்களானது. இன்னும் குழம்பினார். தன் கையில் இருந்த கைக்கடிகாரத்தை ஆட்டி ஆட்டிப் பார்த்தார். அணைத்து வைத்த தன் அலைபேசியை உயிர்ப்பித்தார். இன்னும் குழம்பினார். எட்டாம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேர் கைக்கடிகாரம் கட்டி இருந்தார்கள். அவர்களுடைய கைக் கடிகாரத்தைப் பார்த்தார். “உங்களுடையதும் ஓடலையா?” என்றார். “சார், புது வாட்ச்” என்றார்கள். பக்கத்து அறைக்குச் சென்றார். அங்கும் ஏற்கனவே குழப்பத்தில் இருந்தார்கள். அந்த வகுப்பிலும் கடிகாரம் ஓடவில்லை. கடிகாரம் 10:00 மணியைக் காட்டியது. விநாடி முள் சுற்றுகின்றது. ஆனால், நிமிட முள் சுற்றவில்லை. தலைமை ஆசிரியர் அறைக்கு ஒருவர் ஓடினார். அங்கும் அதே நிலைமை. அலைபேசி, கடிகாரம், கணினி என எல்லாமே பத்து மணியில் நின்றுவிட்டிருந்தன. மாணவர்கள் பெரும்பாலும் இதனைக் கவனிக்கவில்லை. தேர்வு எழுதிக்கொண்டே இருந்தார்கள்.
தலைமை ஆசிரியர் தன் நண்பர்களுக்கு எல்லாம் ஃபோன் அடித்தார். உலகம் முழுக்க இதே பிரச்சனை. குழப்பம் இப்போது அதிர்ச்சியாகி விட்டது. விஞ்ஞானிகளைப் பேட்டி எடுக்க முயல்கின்றார்கள், நாட்டுத் தலைவர்கள், முதலமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என எல்லோருக்கும் குழப்பம். என்ன நடக்குது என்றே புரியவில்லை. வகுப்பில் தேர்வு நடந்துகொண்டு இருந்தது. சிலர் வெளியே வந்து கழிவறைக்குச் சென்றனர். சிலர் தண்ணீர் வேண்டும் என்றார்கள். சிலர் எல்லாப் பதில்களையும் எழுதி முடித்துவிட்டார்கள். நேரம் சென்றுகொண்டே இருந்தது. ஆனால், மணி பத்தில் இருப்பதால் தேர்வினை முடிக்க முடியாது. எழில்மாறன் பத்துக் கேள்விகளில் நான்கிற்கு பதில் எழுதி இருந்தான். மற்றவர்கள் எப்போதோ முடித்துவிட்டு மூன்று முறை விடைத்தாளைச் சரிபார்த்துவிட்டார்கள். தலைமை ஆசிரியருக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.
சிலர் பசிக்குது என்று மதிய உணவை எடுத்து வந்து சாப்பிட்டனர். எழிலும் ஒரு பக்கம் தேர்வு எழுதிக் கொண்டும் ஒரு கையில் ஸ்பூன் வைத்து சாப்பிட்டுக் கொண்டும் இருந்தான். எழுதினான்… எழுதினான்… எழுதிக்கொண்டே இருந்தான். எல்லோரும் எழிலையே பார்த்தனர். இன்னும் அவன் மட்டும் எழுதிக்கிட்டு இருந்தான். கடைசிக் கேள்வியின் விடையை முடித்தான். தாளைக் கட்டினான். முக்கால்வாசிப்பேர் சாப்பிட்டுவிட்டு டேபிளில் தலைவைத்து தூங்கவே ஆரம்பித்து இருந்தனர். “சார், முடிச்சிட்டேன். வீட்டுக்குப் போகலாமா?” என்றான் மாறன். வகுப்பே அவனைப் பார்த்தது.
தலை குனிந்து தன் கால்சராய்க்குள் கைவிட்டு “Release”என இடதுபக்கம் இருந்த பொத்தானை அழுத்தினான். அந்தக் கருப்புக் கருவியில் இரண்டே இரண்டு பொத்தான்கள் இருந்தன. “Freeze” மற்றும் “Release”.. 10:01க்கு நேரம் மாறியது.