புதிய பகுதி: கணக்கும் இனிக்கும்
உமாநாத் செல்வன்
பதின்வயதுக் குழந்தைகள் பலரிடம் கேட்கும்-போது “கணக்குதான் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத பாடம்” என்பார்கள். இதே பதில் 30, 40 வயதினரிடம் இருந்துகூட வரும். ஏன் என்று கேட்கும்போது அதற்கான காரணங்கள் பல என அடுக்குகின்றார்கள். சொல்லித்தரும் ஆசிரியர், கற்பிக்கும் முறை, ‘எங்க பயன்படுத்துகின்றோம் என்று தெரியல’, ‘சின்ன வயசுல சரியா கவனிக்கல’ என பட்டியல் நீளும். காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பலரும் குற்றவாளிகள் என்றே வைத்துக்கொள்வோம். இந்த ‘சிஸ்டத்தில் கோளாறு’ என்றும் வைத்துக்கொள்வோம். ஆனால், இப்படி காரணங்களைச் சொல்லித் தப்பித்துக்கொள்ளும் அளவிற்கான பாடமா அது?
கணிதம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. இன்னும் இன்னும் கலந்துகொண்டே இருக்கும். காலை எழுந்து பல் துலக்குகின்றோம். அதில் கேல்குலஸ் உண்டு, எழும் நேரம் கணிதம், தூங்கும் நேரம் ஒரு கணக்கு, பள்ளிக்குச் செல்லும் நேரம் (நடந்தோ சைக்கிளிலோ பேருந்திலோ) கணக்கு, 9:30க்குப் பள்ளி என்றால், எத்தனை மணிக்குக் கிளம்ப வேண்டும் என்பது கணக்கு, வீட்டில் வாங்கும் பாலின் அளவீடு கணக்கு, சமையலறை முழுக்கவே அளவீடுகள் நிறைந்த கணக்கு, வகுப்பறையில் மாணவர்களின் வருகை_ கணக்கு, வகுப்பறைகளும் கட்டடங்களும் கட்டும் கட்டுமானத்துறை முழுக்க கணக்கு, கைப்பேசிகள் முழுக்க எண்கள்_அது கணக்கு, அப்பா அம்மாவின் மாத வருவாய்_கணக்கு, சம்பளத்தில் சேமிக்கும் சதவிகிதம் _ கணக்கு, ஆடிக்கு தள்ளுபடி _ கணக்கு. கணக்கின் சூட்சுமம் தெரிந்தால்தான் வியாபாரம். இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் வாழ்வின் எந்தத் தருணத்தை எடுத்தாலும் அங்கு எல்லாமே கணக்கு உண்டு. என்ன… நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை.
இப்படி நம் வாழ்வில் கலந்த கணிதம் மட்டுமல்ல, இதன் அடிப்படைகளை அறிந்துகொள்வது எந்தத் துறையில் நுழைவதென்றாலும் மிக அவசியம். நாள்தோறும் பொருளாதாரத்தைப் புரிந்துகொண்டு வாழ்வினை நடத்துவதில் தொடங்கி, ராக்கெட் அறிவியலராகப் பரிணமிப்பதுவரையில் கணக்கு நமக்குக் கட்டாயம் தேவை. ஓர் ஆளுமையாக வளர, நேர மேலாண்மை தேவை என்பார்கள். அதற்கும் கணிதம் அவசியம்.
இத்தனைக் காலம் எப்படி இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல, இந்த நொடியில் இருந்தே மாற்றத்தை நோக்கிச் செல்வோம். இப்போது வாசிக்க ஆரம்பித்திருப்பீர்கள். வாசிப்பினைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாலே அனைத்தும் கைகூடும், வசப்படும்.
கணித அடிப்படைகள் தெரியவில்லை என்றால் முதலில் ‘எனக்குத் தெரியவில்லை’ என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “நான் கட்டாயம் இதனைப் பயில்வேன்” என்ற வேட்கையும் கூடவே வரவேண்டும். உங்கள் தம்பி தங்கைகளின் கணிதப் பாடப்புத்தகங்களை எடுத்து மீண்டும் படியுங்கள்.புரியவில்லையா அந்த வகுப்பு ஆசிரியரிடம் கேளுங்கள். தயக்கமே வேண்டாம். கட்டாயம் அவர்கள் மகிழ்வுடன் சொல்லித் தருவார்கள். உங்கள் பகுதியில் இருக்கும் அண்ணன்/அக்காவை நாடுங்கள். உங்கள் வகுப்பில் நன்கு புரிந்துகொண்ட நண்பர்களிடம் கேளுங்கள். உங்கள் வகுப்பு ஆசிரியரைக் கேளுங்கள்.
நாம் தான் கதவுகளைத் தட்ட வேண்டும். யாரோ ஒருவர் நமக்காகக் கதவுகளைத் திறந்து வைக்க மாட்டார்கள். வரலாறு முழுக்கவே அப்படித்தான். தனக்கு என்ன தேவை, வேண்டும் என்பதை முதலில் அறிதல் வேண்டும், அதன்பின்னர் அதனை எப்படி அடையவேண்டும் எனத் திட்டமிட வேண்டும். ‘இருக்கும் திசைகள் எல்லாம் உனக்கு எதிரானால் புதிதாய் திசையை உருவாக்கு.’ Out of the box thinking என்பார்கள். வகுப்பறைக்குள்ளேயே சிந்திக்க வேண்டாம், உங்களுக்குக் கணித அடிப்படைகள் (அல்லது எதுவோ) கற்றுக்கொள்ளவேண்டும், அதற்கான பாதைகளை நீங்கள்தான் அமைத்துக்கொள்ள வேண்டும். இதுவே வெற்றியின் முதல்படி. இதை நோக்கி நடந்தால் கணக்கு மட்டும்மல்ல வாழ்வும் இனிக்கும்.
(இனிக்க இனிக்க…)