சிறார் கதை : பழுத்த இலை உதிரும்
சுகுமாரன்
ஒரு காட்டில் ஒரு குட்டி யானை தனது அப்பா, அம்மா, தாத்தா யானைகளுடன் வாழ்ந்து வந்தது.
குட்டி யானைக்குத் தாத்தாவை ரொம்பப் பிடிக்கும். குட்டி யானையிடம் ஒருநாள் அம்மா யானை கேட்டது ‘அப்பு’ உனக்கு அம்மாவைப் பிடிக்குமா? அப்பாவைப் பிடிக்குமா?’ குட்டி யானை சொன்னது, “எனக்கு தாத்தாவைத்தான் பிடிக்கும்.”
“தாத்தா உனக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கிறாங்க, அதுதான் காரணம்” என்று அம்மா யானை சொன்னது.
எப்போதும் தாத்தா யானை அப்புவை ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிக்க வைக்கும். ஆற்று நீரைத் தும்பிக்கையால் உறிஞ்சி அப்பு மீது அடிக்கும். அப்புவுக்கு அது ரொம்பவும் பிடிக்கும்.
அப்புவை நாள்தோறும் கரடி வாத்தியார் பள்ளிக்கூடத்திற்குத் தாத்தாதான் அழைத்துச் செல்லும். அப்பு என்ற தன் பெயரை குட்டி யானை எழுதக் கற்றுக்கொண்டது.
பள்ளிக்கூடத்தில் தான் அப்புவுக்கு நண்பர்கள் கிடைத்தனர். கரடிக்குட்டி, குரங்குக்குட்டி, முயல் குட்டி, அணில் குட்டி எல்லாம் அப்புவின் நண்பர்கள். இவர்களோடு சேர்ந்து தாத்தாவும் விளையாடும். அதனால் அவர்களுக்கும் அப்புவின் தாத்தாவைப் பிடிக்கும்.
காட்டுக்குள் குடை போல் ஒரு மரம் இருந்தது. அந்தக் குடைமரத்தின் கீழே தான் தாத்தா யானை எப்போதும் படுத்துக்கிடக்கும். குட்டி யானை தாத்தாவிடம் கதை கேட்கிற இடமும் அதுதான். கதை கேட்டுக் கொண்டே சில நேரம் குட்டி யானை தூங்கிவிடும். கதை சொல்லிக் கொண்டே தாத்தாவும் தூங்கிவிடும்.
இப்படித்தான் ஒருநாள் தாத்தா யானை கதை சொல்லிக் கொண்டே தூங்கிவிட்டது. கதை முழுவதும் முடியவில்லை. குட்டி யானையும் தூங்கிவிட்டது. திடீரென்று குட்டி யானைக்கு விழிப்பு வந்தது. மீதிக் கதையைச் சொல்லு என்று தாத்தாவை எழுப்பியது. ஆனால் தாத்தா எழுந்திருக்கவில்லை.
“தாத்தா… தாத்தா…” என்று கூப்பிட்டு, குட்டி யானை தொடர்ந்து எழுப்பியது. தாத்தா எழுந்திருக்கவில்லை.
அப்பா, அம்மா வந்தார்கள். தாத்தா இறந்துவிட்டதாகக் கூறி அங்கிருந்து அப்புவை அழைத்துச் சென்றார்கள். திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அப்பு கவலையோடு சென்றது.
அடுத்த நாள் அப்பு தாத்தாவைத் தேடிக்-கொண்டு வந்தது. தாத்தாவைக் காணவில்லை. வனத்துறையினர் தாத்தா யானையின் உடலை அப்புறப்படுத்தியது அப்புவுக்குத் தெரியாது.
அப்பு தாத்தாவை அங்குமிங்கும் தேடியது. தாத்தாவை எங்கும் காணவில்லை.
அப்பு அம்மாவிடம் வந்து ‘தாத்தாவைத் தேடினேன்… காணவில்லை…’ என்று அழுதது.
‘தாத்தா இறந்துவிட்டார். இறந்து போனவர்-களெல்லாம் இப்படித்தான் காணாமல் போய்-விடுவார்கள்’ என்றது அம்மா யானை.
அம்மா சொன்னது அப்புவுக்குப் புரியவில்லை. ‘தாத்தா வேணும்’ என்று தொடர்ந்து அழுதது.
அடுத்தநாள் அப்பு பள்ளிக்கூடம் போகவில்லை. தாத்தா கூட்டிட்டுப் போனால்தான் போவேன் என்று கூறிவிட்டது. அப்புவின் நண்பர்களான குரங்குக்குட்டி, கரடிக்குட்டி, மான்குட்டி, அணில், முயல் குட்டிகளும் பள்ளிக்கூடம் போகவில்லை. அவை நண்பனின் துக்கத்தைப் போக்க முயற்சிகள் செய்தன.
“தாத்தாவை எப்படி மறக்க முடியும்?” என்று அப்பு கேட்டது.
அப்புவும், அப்புவின் நண்பர்களும் பள்ளிக்-கூடம் போகாததால் கரடிவாத்தியார் தேடிக்கொண்டு வந்துவிட்டது.
‘அப்பு… ஏன் பள்ளிக்கூடம் வரவில்லை?’ என்று வாத்தியார் கேட்டார்.
‘தாத்தா சொன்ன கதையை முடிக்கவில்லை, தாத்தாகிட்ட கதை கேட்கப் போறேன்’ என்றது அப்பு.
‘தாத்தா சொன்ன கதை முடியாது. தாத்தா கதை முடிந்துவிட்டது’ என்று கரடி வாத்தியார் சொன்னது அப்புவுக்குப் புரியவில்லை.
“சரி, நாளைக்குப் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும்” என்று கூறிவிட்டு கரடி வாத்தியார் சென்றது.
அடுத்த நாள், அப்பு பள்ளிக் கூடத்துக்குப் போகாமல் குடைமரம் இருக்குமிடத்திற்கு வந்தது. வழக்கமாகத் தாத்தா படுத்திருக்கும் இடத்தில் தாத்தாவை நினைத்துக்கொண்டு படுத்தது. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
மாலையில் அப்புவைத் தேடி நண்பர்கள் வந்தனர். அவை நண்பனின் துக்கத்தைப் பார்த்து வருந்தின. அப்புவை அம்மாவிடம் கொண்டு போய்விட்டனர்.
அடுத்த நாளும் அப்பு பள்ளிக்கூடம் போகவில்லை. குடை மரம் இருக்குமிடத்திற்கு வந்து படுத்துக்கொண்டது. தாத்தா அங்கிருப்பதாக நினைத்தது. சிறிது நேரத்தில் நண்பர்களும் வந்தனர்.
அப்பு மூன்றாவது நாளும் பள்ளிக்கூடம் போகவில்லை என்பதைக் கேள்விப்பட்டு அப்பா யானை தேடி வந்தது. அப்பாவைப் பார்த்ததும் அப்பு எழுந்து நின்றது.
அருகில் நின்றிருந்த கரடிக்குட்டி ‘அப்புவுக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். தாத்தா சொர்க்கத்தில் இருக்கிறார். கவலைப்படாதே என்று சொன்னோம்” என்றது.
‘சொர்க்கம் -_ நரகம் எல்லாம் கிடையாது. அது கற்பனை. என்ன நடந்தது என்பதை அப்புவுக்குப் புரியவைத்தால் போதும்!’ என்று கூறிய அப்பா யானை அப்புவிடம் ஒரு கேள்வி கேட்டது.
‘தாத்தாவை நினைத்துக் கொண்டிருக்கிறாயா…?’
‘ஆமாம்’ என்று அப்பு தலையாட்டியது.
‘தாத்தாதான் உன் நினைவில் இருக்கிறாரே! பிறகு இல்லை என்று ஏன் வருத்தப்படுகிறாய்?’
அப்பு மவுனமாக நின்றது.
“இறப்பு இயற்கை! பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பார்கள். குடை மரத்தைப் பார். மரத்திலிருந்து பழுத்த இலை உதிருவதைப் பார்… பழுத்த இலை போல் தாத்தா உதிர்ந்துவிட்டார்” என்றார் அப்பா.
அப்போது பலத்த காற்று அடித்தது. மரத்திலிருந்து பழுத்த இலைகள் உதிர்ந்தன. தரையில் கிடந்த சருகுகள் பறந்து காணாமல் போயின. அப்பு அவற்றைப் பார்த்தது. அதற்கு லேசாகப் புரிய ஆரம்பித்தது.
அப்புவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிவது நின்றது. அது அப்பாவுடன் பள்ளிக்குப் புறப்பட்டது.