தமிழ் தட்டச்சு
தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று சொன்னாலே, பலரும் எனக்குத் தெரியாது, தமிழில் அடிப்பது எளிதுமல்ல என்று சொல்வதுண்டு.
ஆங்கிலத்தில் 26 எழுத்துகளே உள்ளன. தமிழில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. மேலும், வடமொழியிலிருந்து வந்த சில முக்கியமான எழுத்துகளும் உள்ளன. நினைவில் வைத்துக் கொள்வது சிரமம் என்று பலர் புலம்பக் கேட்டிருப்போம்.
இப்படி நேற்றைய – இன்றைய இளைய தலைமுறையினரை மிரள வைத்த தமிழ்த் தட்டெழுத்துகள் எப்படி உருவாகி வளர்ந்தன?
ஆங்கிலேயர்கள் அரசியல் நிருவாகத்தில் கொடிகட்டிப் பறந்ததற்கும், ஆங்கில மொழிகள் உலக மொழியாக்கப்பட்டதற்கும் பல காரணங்கள் இருப்பினும், ஆங்கிலத் தட்டச்சு இயந்திரத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு எனலாம்.
ஆங்கில மோகத்தில் திளைத்த காலத்தில், தமிழ்த் தட்டச்சுகளும் உருவாக்கப்பட வேண்டும் என்ற வேட்கைத் தீ சிலருள் கொ-ழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. எனினும் பணம் நிறைய செலவாகும். அப்படியே பணம் செலவு செய்தாலும் தமிழ்த் தட்டச்சு இயந்திரங்கள் விற்பனை ஆகுமா? என்றெல்லாம் சந்தேகங்கள் தோன்றின.
பிரச்சினைகளையெல்லாம் மனதில் கொள்ளாமல், ஈழத்தமிழரான _ யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்த முத்தையா என்பவர் துணிந்து ஈடுபட்டார். இவரே தமிழ்த் தட்டச்சுகளின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
சிறுவயதில் பெற்றோரை இழந்த முத்தையா, 1907இல் மலேசியாவுக்குப் புறப்பட்டார். சிங்கப்பூரை அடைந்து, போர்னியாவுக்குப் போக நினைத்தபோது, டானியல் போதகர் என்பவர் அங்கேயே வேலை வாங்கித் தருவதாகக் கூறினார். இரயில்வே துறையில் வேலையும் வாங்கிக் கொடுத்தார்.
சிறிது நாள்களில் வேலையை விட்ட முத்தையா, அய்ல்ஸ்பெரி அண்ட் கார்லாண்ட் என்ற வர்த்தக நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, பதவி உயர்வு பெற்று 1930ஆம் ஆண்டுவரை வேலை செய்தார். வேலையிலிருந்து கொண்டே உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து போன்றவற்றைக் கற்றுத் தெரிந்துகொண்டார்.
1913ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் வாங்கினார். மேலும் ஆங்கில, தமிழ் இலக்கியங்கள், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் அனைத்தையும் கற்றுத் தெரிந்துகொண்டார்.
இவர் வேலை செய்த இடத்தின் நிருவாகத் திறமையும், ஒழுக்கமும் இவருக்கு வழிகாட்டியாக அமைந்தன. அங்கே ஒரு தமிழ்த் தட்டச்சு இல்லையே என்ற குறை அவரது மனதை வருத்தியது. முயற்சியில் ஈடுபட்டு, ஓர் அறையில் தனியாக இருந்து 247 எழுத்தின் வடிவங்களை ஒரு பக்கமும், தட்டச்சின் 46 விசைகளை மறுபக்கமும் வைத்துக்கொள்வார். எழுத்துகளை எப்படி விசையில் வைப்பது என்பது பற்றியே சிந்தித்து, கிடைத்த நேரத்தில் எல்லாம் ஆராய்ச்சி செய்தார்.
தமிழ் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு தமிழ்த் தட்டச்சு அமைப்பது பற்றிய கருத்துகளை விவாதித்தார். பலவகைகளில் சிந்தித்து ஆராய்ச்சி செய்தபோதும் 72 எழுத்துகளுக்குமேல் குறைக்க முடியவில்லை. இனியும் காலத்தையும் நேரத்தையும் வீணாக்கக் கூடாது என முடிவு செய்து, தட்டச்சை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டார்.
உருவாக்கிய தமிழ்த் தட்டச்சிற்கு ஸ்டாண்டர்ட் பெரிய தட்டச்சு என்று பெயரிட்டார். தமிழில் 247 எழுத்துகள் இருப்பதால், அனைத்து எழுத்துகளையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துகளுக்குப் பொதுவாக உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைக்க வேண்டும். பின்பு, அவற்றைத் தேவையான எழுத்துகளுடன் சேர்த்து அச்சடிக்கக்கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். எனவே, இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய முடியும்.
பலமுறை முயற்சி செய்து, இறுதியில் நகரா விசையைக் கண்டுபிடித்தார். இவர் கண்டுபிடித்த நகரா விசையே கடைசிவரை தட்டச்சு உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத் தட்டச்சுகளின் விசைப் பலகையானது தமிழ்த் தட்டச்சுகளின் விசைப்பலகை அமைப்பிலிருந்து வேறுபட்டு இருந்தது. ஒரு இயந்திரத்தில் பழகியவர் அதேமுறையில் வேறு இயந்திரத்தில் அச்சடிக்க இயலாது.
இந்த வேறுபாட்டை நீக்கி ஒரே அமைப்பு முறையைக் கொண்டுவர சென்னை அரசினர் ஒரு குழுவினை 1955 ஆம் ஆண்டில் அமைத்தனர். இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பிறரது கருத்துகளின் அடிப்படையிலும் விசைப் பலகையமைப்பில் ஒருமைப்பாடு கொண்டுவரப்பட்டது.
எனினும், முத்தையா அவர்கள் வடிவமைத்த முறையிலிருந்து பெரிய மாற்றம் எதுவும் புதிய முறையில் இல்லை. புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பம்சங்களைக் கொண்டது இவரது தட்டச்சு அமைப்பு.
இரண்டு கை விரல்களுக்கும் சமமாக வேலை கொடுக்காத தற்போதுள்ள சில தட்டச்சுகளில் உள்ள குறையை அப்போதே நீக்கிய பெருமைக்குரியவர் முத்தையா.
முதல் உலகப் போர் முடிந்ததும், விசைப்பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற நிறுவனத்திடம் கொடுத்து அச்சுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்தார்.
இருப்பினும், தாம் அமைத்த விசைப்பலகையில் சில குறைகள் இருப்பதை உணர்ந்தார். குறைகளைக் களையும் முயற்சியில் ஈடுபட்டார். குறைகளை நீக்க, பிஜோ, அய்டியல் என்ற ஃபோர்ட்டபிள் தட்டச்சுகளை வடிவமைத்தார். இவர் அமைத்ததைப் பின்பற்றியே எரிகோ, ஹால்டர், யுரேனியா போன்ற தட்டச்சுகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வழக்கத்தில் அதிகம் வந்துவிட்ட கணினிகளில் தமிழில் ஒளியச்சு செய்யும் முறைக்கு இந்த தமிழ்த் தட்டச்சு முறைதான் முன்னோடியாகும்.
– மேகா