நினைவில் நிறுத்துவோம்: நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்குமா?
‘அங்கே ஒரு சாமி அற்புதங்களை அப்படிச் செய்தார்’, ‘இங்கே ஒரு சாமி இப்படிச் செய்தார்’ என்று நாம் செய்திகள் கேள்விப்படுகிறோம். அவையெல்லாம் என்ன?
அவர்கள் செய்வதெல்லாம் ஒருவகை யோக சக்தியால்தான் என்கின்றனர் சிலர். யோகத்தாலா? சித்தி என்கிறார்களே அப்படியா? அல்லது மந்திரத்தாலா? மை வித்தையாலா? அல்லது தந்திரத்தாலா? சிந்தித்து, சோதித்து முடிவுக்கு வரவேண்டும்!
ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்கும் இயற்கையாகவும், பழக்கத்தினாலும் திறமையில் வித்தியாசம் இருக்கலாம்; ஆனால், யாராலும் செய்ய முடியாத ஒன்றை இன்னொருவர் செய்கிறார் என்பதையும், அதற்கு அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதையும் யாரும், எந்தச் சூழ்நிலையிலும் நம்பக் கூடாது. காரணம் அது உண்மையல்ல!
ஆம், அற்புதங்கள், மந்திர வித்தைகள் எனப்படுபவை அனைத்தும் தந்திர வித்தைகளே! அத்தந்திரங்கள் நமக்குத் தெரியாத வரை, மந்திரங்களாக நம்பப்படுகின்றன. அவற்றை நாம் தெரிந்துகொண்டு விட்டால் அவை வெறும் தந்திரங்களே என்பது தெளிவாய் விளங்கும்.
மந்திரத்தால் மாங்காய் வரவழைத்தல்
மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியு-மென்றால், நாட்டில் மாங்காய்ப் பஞ்சமே இருக்காதே! நாட்டில் அரிசிப் பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் மந்திரத்தால் அரிசி உற்பத்தி செய்து கொள்ளலாமே! நமக்குத் தேவையானவற்றை நாம் ஏன் உழைத்து உற்பத்தி செய்து கொண்டிருக்க வேண்டும்?
மந்திரங்களை விட்டு, மலைமலையாய் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியதுதானே?
மந்திரத்தால் மண்ணைச் சர்க்கரையாக்கி விடலாம் என்றால், கரும்பு பயிர் வைப்பது ஏன்? சர்க்கரை ஆலைகள் கட்டுவதேன்?
மந்திரத்தால் வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக மாற்ற முடியும் என்றால், மந்திரவாதிகள் அல்லவா உலகத்தில் பணக்காரர்களாக இருப்பார்கள்?
ஆனால், இவற்றையெல்லாம் மந்திரத்தால் செய்ய முடியவில்லையே? அது ஏன்? மந்திரம் என்பது உண்மையானால் இவற்றையும் செய்ய முடியுமே! காரணம், மந்திரம் என்றொரு சக்தியில்லை. அதனாலே இவற்றைச் செய்ய முடிவதில்லை!
கண்ணெதிரே வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக மாற்றுகிறானே, அது பொய்யா? என்று சிலர் கேட்கக் கூடும். ஆம் அது பொய்தான்!
மந்திரத்தால் வெள்ளைத்தாள் ரூபாய் நோட்டாக மாறும் என்றால், வெள்ளைத்தாளை நம் கையில் கொடுத்துவிட்டு, அதை ரூபாய் நோட்டாக (நம் கண்ணெதிரே) மாற்றிக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்! அதுதான் முடியாது! பின் என்ன மந்திரம் கிழிக்கிறது? மறைத்துச் செய்வதே இதிலுள்ள தந்திரம்.
ஒரு கடிகாரத்தை ஒரு துணியில் சுருட்டி அதை ஒரு தடியால் அடித்து உடைத்து விட்டு, பிறகு அதை உடையாத கடிகாரமாகக் காட்டுகிறான்.
ரூபாய் நோட்டை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு, பிறகு மீண்டும் அதே நோட்டாகக் காட்டுகிறான். இவையெல்லாம் மந்திரத்தால் என்று எண்ணு-கிறார்கள் மக்கள்.
மந்திரத்தால் உடைந்த கடிகாரத்தையும், எரிந்த ரூபாய் நோட்டையும் மீண்டும் நல்லதாக ஆக்கிவிடலாம் என்றால், பொருள்கள் உடைவது பற்றியும், பணம், பத்திரங்கள் எரிந்து போவது பற்றியும் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒரு மந்திரவாதியை அழைத்து வந்து, மீண்டும் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே! முடியுமா?
அது மட்டுமல்ல, ‘மந்திரம்’ செய்கின்றவர்களே இவையெல்லாம் தந்திரம்தான் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். எப்படித் தந்திரமாக இவற்றைச் செய்தோம் என்று விளக்கியும் காட்டுகிறார்கள். மந்திர சக்தியில்லை என்பதை இது உறுதி செய்கிறது.
பாம்புக்கடி மந்திரம்
மந்திரத்தால், உடலில் ஏறிய விஷத்தை இறக்க முடியுமென்றால், ஒரு விஷமுள்ள நல்ல பாம்பை விட்டு, ஆட்டுக்குட்டியைக் கடிக்கச் செய்து, அந்த ஆட்டுக் குட்டியின் உடலில் ஏறிய விஷத்தை மந்திரத்தால் இறக்கி, அதைச் சாகாமல் தடுக்க எந்த மந்திரவாதியாவது தயாரா? நிச்சயம் முடியாது!
கடித்தது விஷப் பாம்போ அல்லது விஷம் இல்லாத பாம்போ, விஷம் ஏறிற்றோ இல்லையோ, பாம்பு கடித்தவுடன் பயத்தினாலே கடிபட்டவர்களுக்கு மயக்கம் வந்து விடுகிறது. பயத்தினாலே மார்பு அடைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
கால் மணியிலிருந்து அரைமணி நேரத்திற்குள் பாம்பு கடிக்கப் பெற்றவன் இறக்கவில்லையானால், அவனைக் கடித்தது விஷப்பாம்பு இல்லை. பெரும்பாலும் மந்திரவாதி வீட்டுக்கு வருகிறவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகித்தான் வருவார்கள். கடிபட்ட இடத்திலிருந்து மந்திரவாதி இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லக் குறைந்தது அரைமணி நேரமாவது வேண்டுமல்லவா?
கடித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது என்பது தெரிந்ததுமே, அவனைக் கடித்தது விஷப் பாம்பல்ல; பயத்தினாலே மயங்கிக் கிடக்கிறான் என்பது மந்திரவாதிக்குப் புரிந்துவிடும். மந்திரம் ஓதி அவர்களுக்கு துணிவை உண்டாக்கி, மயக்கத்தைத் தெளியச் செய்வர்.
மந்திரத்தால் விஷம் இறங்கிவிட்டது என்ற நம்பிக்கையில், கடிபட்டவன் பயம் தெளிந்து, மயக்கம் நீங்கி, வீட்டிற்குச் செல்கிறான். இதுவே உண்மை. விஷமுள்ள பாம்பு கடித்திருந்தால் உடனடியாக முறிவு மருந்து கொடுப்பர்.
சில பாம்புகள் கடித்தால் உடனடியாகச் சாக மாட்டார்கள். இரண்டு மூன்று நாள்கள் உடலிலே விஷம் சேர்ந்து, மெள்ள மெள்ள உடலைக் கெடுத்து, ஆளைக் கொல்லும். எனவே, எந்தப் பாம்பு கடித்தாலும் மருத்துவரிடம் சென்று விஷம் ஏறியுள்ளதா? என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப மருந்து சாப்பிட வேண்டும். அல்லது விஷ முறிவு மருந்து ஏற்றிக் கொள்ள வேண்டும்.
நடக்கப்போவதைக் கூற முடியுமா?
நடக்கப் போவதைச் சாமியார்கள் அறிவிக்-கின்றனர் என்றால், தேர்தல் முடிவுகளையும், கிரிக்கெட் போட்டி முடிவுகளையும் முன்கூட்டியே அவர்கள் அறிவிப்பார்களா?
மை போட்டுப் பார்த்தல்:
காணாமல் போனவர் அல்லது காணாமல் போன பொருள் இருக்கும் இடத்தை மை போட்டுப் பார்த்துச் சொல்ல முடியும் என்றால், புலனாய்வுத் துறை எதற்கு? சிந்திக்க வேண்டும்.
நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்குமா?
மந்திரத்தால், பூசை செய்வதால் புதையல் கிடைக்கும் என்று சில சாமியார்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இன்னும் சில சாமியார்கள் மனிதனைப் பலியிட்டால் புதையல் கிடைக்கும் என்று ஆசை காட்டி, சிறு பிள்ளைகள், அல்லது ஏமாந்தவர்களை நரபலி கொடுக்கின்றனர். பின், புதையல் கிடைக்காமல் ஏமாந்து, கொலை வழக்கில் சிக்கி வாழ்நாள் முழுவதும் சிறையில் கிடக்கின்றனர். ஒருவரைப் பலி கொடுத்தால் புதையல் எப்படி கிடைக்கும்? சிந்திக்க வேண்டாமா?
எனவே, எந்த ஒன்றையும் அப்படியே நம்பாமல், பகுத்தாய்ந்து,, உண்மை அறிந்து ஏற்க வேண்டும்; நம்ப வேண்டும். அறிவியலுக்கு ஒவ்வாத எந்த ஒன்றையும் நம்பக் கூடாது; செய்யக் கூடாது. அதுவே படிக்கின்ற மாணவர்களுக்கு அழகு! அறிவுள்ள மனிதர்களுக்கு அழகு!