கோமாளி மாமா-31
நாம் யார்
மு.கலைவாணன்
கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்பதற்காக மாணிக்கமும், மல்லிகாவும் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். செல்வம் வரவில்லை.
கோமாளி மாமா நல்லதம்பியும் வந்துவிட்டார்.
“மாணிக்கம்! செல்வம் எப்பவும் உன் கூடதானே வருவான். இன்னைக்கு என்ன ஆச்சு? செல்வத்தைக் காணோமே…” என்று கேட்டாள் மல்லிகா.
“நான் வரும்போது செல்வம் வீட்டுக்குப் போயிட்டுத்தான் வர்றேன். செல்வத்தோட அத்தை பையன் அகிலனுக்கு நேத்து பிறந்த நாளு, அதுக்காக அத்தை வீட்டுக்குப் போயிருக்கானாம். அவன் நேரா இங்கேதான் வருவான்னு நான் நினைக்கிறேன்” என்றான் மாணிக்கம்.
“சரி… சரி… கொஞ்ச நேரம் காத்திருப்போம். எப்படியும் செல்வம் வந்துடுவான்” என்று சமாதானம் சொன்னார் கோமாளி.
அவர் சொல்லி முடிப்பதற்குள் தோளில் பெரிய பை ஒன்றை மாட்டிக்கொண்டு வேக வேகமாக தோட்டத்திற்குள் வந்து கொண்டிருந்தான் செல்வம்.
“என்ன செல்வம்… மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு கதை கேக்க வந்திருக்கியா?” என்று சிரித்தபடி கேட்டாள் மல்லிகா.
செல்வம்… “இந்தப் பையே பெரிய கதைதான். நேத்து எங்க அத்தை பையன் அகிலனுக்கு பிறந்த நாளு. அதுக்கு முறுக்கு, லட்டு எல்லாம் செய்தாங்க. அதைச் செய்யிறதுக்காக… எங்க வீட்டுலயிருந்து வாங்கிட்டுப் போன ஜல்லிக்கரண்டி, சல்லடை எல்லாத்தையும் பையில போட்டு, “நீ வீட்டுக்குத்தானே போறே… இதைக் கொண்டு போயிடுன்னு குடுத்தனுப்பிட்டாங்க.” என்றான்.
“அதை எடுத்துக்கிட்டு நேரா இங்கே வந்துட்டே, அதானே சேதி… சரி வா… கதையைக் கேட்போம்” என்றான் மாணிக்கம்.
“சல்லடை, ஜல்லிக் கரண்டிக்கா இத்தா பெரிய பையி…” என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மல்லிகா.
“பையில நம்ம எல்லோருக்கும் முறுக்கு, லட்டு எல்லாம் இருக்கு” என்றபடி பையிலிருந்து பெரிய பொட்டலத்தை எடுத்து நீட்டினான் செல்வம்.
எல்லாரும் பொட்டலத்தில் இருந்த முறுக்கு, லட்டு என தேவையான பலகாரத்தை எடுத்துச் சாப்பிட்டனர்.
‘செல்வம்… அகிலனுக்கு எங்களோட வாழ்த்துகளையும் சொல்லு” என்றார் கோமாளி
“ரொம்ப நல்லாருக்கு. முறுக்கு, லட்டு எல்லாம் யார் செய்தது?” என்றான் மாணிக்கம்.
“அத்தையும், மாமாவும் சேந்து செய்தது.” என்றான் செல்வம்.
“சாப்பிட்டது போதும் கதை கேப்போம்” என்றாள் மல்லிகா.
“வாங்க… மரத்தடியிலெ உக்காரலாம்’’ என்றார் கோமாளி.
“மாமா! ஒரு நிமிடம் இந்த ஜல்லிக் கரண்டியையும் சல்லடையையும் பையில போட்டுட்டு வர்றேன்” என்றான் செல்வம்.
“அதை பையில வைக்க வேண்டாம். அதை இங்கே கொண்டு வா செல்வம்’’ என்றார் கோமாளி.
ஜல்லிக் கரண்டியையும், சல்லடையையும் கையில் எடுத்துக்கொண்டு பையை தோளில் மாட்டியபடி மரத்தடியில் மற்றவர்களோடு உட்கார்ந்தான் செல்வம்.
“செல்வம்… இன்னைக்கு நீ கொண்டு வந்த ஜல்லிக்கரண்டி, சல்லடை இதை வச்சுதான் கதை”… என்றார் கோமாளி.
“அட… இந்தப் பையே பெரிய கதைன்னு செல்வம் சொல்லும் போதே கோமாளி மாமா இந்தப் பையை வச்சுதான் ஏதோ கதை சொல்லப்போறாருன்னு நெனச்சேன்” என்றான் மாணிக்கம்.
“கொஞ்சம் அமைதியா இரு மாணிக்கம். கோமாளி மாமா சொல்லட்டும்” என்றாள் மல்லிகா.
“நாம யார்?… இதான் என்னோட கேள்வி. ஆனா அதுக்கு பதிலை நீங்க வெளியிலே தேட வேண்டாம். செல்வம் வச்சிருக்கிற இந்த ரெண்டு பொருளை வச்சுதான் பதில் சொல்லணும். அதாவது நீங்க ஜல்லிக்கரண்டி மனிதர்களா? அல்லது சல்லடை மனிதர்களா? சொல்லுங்க பார்ப்போம்?” என்றார் கோமாளி மாமா.
மாணிக்கம் மல்லிகா, செல்வம் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“கோமாளி மாமா… எங்களுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்” என்று கொஞ்சலாக கேட்டாள் மல்லிகா.
“சரி… இது ரெண்டும் எதுக்குப் பயன்படுற பொருள்கள்?” என்று கோமாளி மாமா கேட்டதும்,
“அட… இது ரெண்டுமே சமையல்கட்டுல இருக்கிற-_ தின்பண்டம் செய்ய உதவுற பொருளுங்க” என்றான் செல்வம்.
“சரியா சொன்னாய் செல்வம். சல்லடை என்ன செய்யும்? ஜல்லிக்கரண்டி என்ன செய்யும்?” என்று கோமாளி கேட்டதும்…
“சல்லடை மாவு சலிக்க உதவும், ஜல்லிக்கரண்டி எண்ணெயிலெ போட்டு சுட்ட பலகாரத்தை எடுக்க உதவும்” என்று சட்டெனப் பதில் சொன்னாள் மல்லிகா.
“அருமையா சொன்னே மல்லிகா. சல்லடையிலே மாவைச் சலிச்சதும்… அதுல என்ன இருக்கும்?” என்று மாணிக்கத்தைப் பார்த்தார் கோமாளி.
“சல்லடையிலே… சரியா அரைபடாத மாவு, தவிடு, கல்லு, மண்ணு… இது மாதிரி ஏதாவது இருக்கும்” என்றான் மாணிக்கம்.
“எண்ணெயில பலகாரம் சுடும்போது ஜல்லிக் கரண்டியைப் போட்டு எடுத்தா அதுல என்ன இருக்கு?” என்று செல்வத்தைப் பார்த்தார் கோமாளி.
“ஜல்லிக்கரண்டியில சுட்ட பலகாரம் இருக்கும்.” என்றான் செல்வம்.
இந்த ரெண்டு பொருளுமே ஓட்டை ஓட்டையா உள்ள பொருளுங்கதான். ஆனாலும் சல்லடை _ தேவையில்லாத பொருளை தன்கிட்ட வச்சுக்கிட்டு நல்ல மாவை கீழேவிட்டுடுது.
ஜல்லிக்கரண்டி தேவையான பலகாரத்தை தன்கிட்ட வச்சுக்கிட்டு தேவையில்லாத எண்ணெயைக் கீழே விட்டுடுது. இப்ப சொல்லுங்க? நாம யாரா இருக்கணும்?” என்று கோமாளி கேட்டு முடிப்பதற்குள் மல்லிகா சட்டென “சல்லடை மாதிரி இல்லாம ஜல்லிக்கரண்டி மாதிரி இருக்கணும்” என்றாள்.
“ஆமாமா… கோபம், பொறாமை, மூடநம்பிக்கை, சுயநலம், இதுமாதிரி கெட்ட எண்ணங்களைச் சுமக்குற சல்லடை மனிதர்களா இல்லாம அன்பு, சமத்துவம், தன்னம்பிக்கை, சுயமரியாதை இதுமாதிரி நல்ல எண்ணங்களைக் கொண்ட ஜல்லிக்கரண்டி மனிதர்களா நாம இருக்கணும்” என்றான் மாணிக்கம்.
“சல்லடையும், ஜல்லிக்கரண்டியும் நம்ம தேவைக்காக உள்ள பொருள்கள். அதுபோல மனிதன் தனக்காக மட்டும் வாழாம, தன்னைச் சுற்றியுள்ள மற்றவர் நலத்துலேயும் அக்கறை உள்ளவங்களா வாழுறதுதான் மனித வாழ்வின் சிறப்பு” என்றார் கோமாளி.
“சில பேரு நல்லதை நழுவ விட்டுட்டு கெட்டதை மட்டும் புடிச்சுக்குவாங்க. அதனால அவங்களும் கெட்டு மத்தவங்களையும் கெடுத்துடுவாங்க.
சில பேரு நல்லதை மட்டும் வச்சுக்கிட்டு கெட்டதை விட்டு விலகிடுவாங்க. அவங்க மத்தவங்களுக்கு எடுத்துக்காட்டா வாழ்வாங்க” என்றாள் மல்லிகா.
“கோமாளி மாமா… நல்லது கெட்டதை சலிச்சு, பிரிச்சுக்காட்டுற சல்லடையும் பயனுள்ள பொருள்தானே மாமா…?” என்று கேட்டான் செல்வம்.
“ஆமாமா… அதுக்காக அது வேண்டான்னு விட்டுட்டுப் போயிடாதே… பத்திரமா வீட்டுக்குக் கொண்டு போ…” என்று சிரித்தார் கோமாளி. க்ஷ்க்ஷ்எப்போதும் நாம் யாராக இருப்பது என்பதில் தெளிவு பெற்ற மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் மகிழ்ச்சியா வீட்டுக்குப் புறப்பட்டனர்.
(மீண்டும் வருவார் கோமாளி)