நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன்
சிகரம்
பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்கிலச் சொல் Personality. பர்சனாலிட்டி என்பதை பலரும் உடல் தோற்ற மிடுக்கு என்றே எண்ணுகின்றனர். வட்டசாட்டமான, உயரமான, மிடுக்கான, கவர்ச்சியான உடல் அமைப்பு Personality அல்ல. ஆளுமை என்பது எண்ணம், செயல், இயல்பு சார்ந்தது.
ஆளுமை உடல் சார்ந்தது அல்ல. அறிஞர் அண்ணா மிகவும் குள்ளம். கவர்ச்சியான உருவம் அவருக்கு இல்லை. ஆனால், அவர் உலகில் சிறந்த ஆளுமையாளர்களுள் ஒருவர். கல்வி, அறிவு, பேச்சு, தலைமைப் பண்பு, ஆட்சித்திறன், கருணை, சமத்துவம், நேர்மை என்று பலவும் அவரிடம் இருந்தன. அதனால்தான் அவரை 1967 -இல் தமிழ்நாட்டு மக்கள் அவரை ஆட்சியில் அமர்த்தினர். அவர் 1969இல் இறந்த போது தமிழகமே கலங்கியது, சென்னை மாநாகரமே மக்களால் நிரம்பி நின்றது. லட்சக் கணக்கானோர் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அது ஓர் உலக சாதனைப் பதிவானது.
அதேபோல் நமது ஆசிரியர் தாத்தாவின் ஆளுமையும் அனைவராலும் வியக்கத்தக்க பன்முகத்திறன் வாய்ந்தது. ஆசிரியர் தாத்தா 10 வயதுச் சிறுவனாகப் பள்ளியில் படிக்கும் போதே பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். 11 வயதிலே மாநாடுகளில் பேசும் தகுதியையும், ஆற்றலையும் பெற்றார். ஆசிரியர் தாத்தாவும் உருவத்தால் வாட்டசாட்டமானவர் அல்லர். குள்ளமான உருவம். ஆனால், அந்த உருவத்திற்குள் ஓராயிரம் ஆற்றல், ஆளுமைகள் இருப்பதைக் கண்டு இன்று உலகத் தமிழர்கள் வியக்கின்றனர்.
சிறுவனாக இருந்த போதே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோருடன் பழகும் தெளிவும், துணிவும், தகுதியும் அவருக்கு இருந்தது.
அவர் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தான் என்றாலும், தன்னுடைய முயற்சியால் பல்வேறு திறமைகளையும், தகுதிகளையும் உருவாக்கிக் கொண்டார். பள்ளிப்படிப்பின் போதே சிறப்புக் கல்வி உதவித் தொகையைத் தன் திறமையால் பெற்றார். அவரது கல்வித்திறம் கண்டு வியந்த மாவட்டக் கல்வி அலுவலர் இந்த உதவித் தொகைக்கு ஆணையிட்டார்.
பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் படிப்பில் சாதனை புரிந்தார். இரயில் வண்டியில் தினம் 30 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து படித்தாலும் எம்.ஏ. முதுகலைப் படிப்பில் (பொருளாதாரம்) முதல் தகுதிக்காகத் தங்கப் பதக்கங்கள் பெற்றார்.
அவரது, இந்தச் சிறப்புகளுக்குக் காரணம் படிப்புதான். அண்ணாவாக இருந்தாலும், ஆசிரியர் தாத்தாவாக இருந்தாலும். இருவரும் நிறைய நூல்களைத் தொடர்ந்து படிக்கும் பழக்கம் உடையவர்கள். ஆசிரியர் தாத்தா நாள்தோறும் நூல்களைப் படிக்கும் பழக்கம் உடையவர். ஆயிரக்காணக்கான நூல்களைப் படித்தவர், இன்னும் படித்துக் கொண்டிருப்பவர்.
எனவே, பிஞ்சுகள் முதலில் தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ள நிறைய நூல்களைப் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மட்டும் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அறிவியல், பொது அறிவு, தலைவர்கள் வரலாறு, சாதனையாளர் வரலாறு, பகுத்தறிவுச் சிந்தனை வளர்க்கும் நூல்கள், நல்லொழுக்கம், நீதிநெறி நூல்கள் என்று தங்கள் வயதுக்கு ஏற்றவற்றைத் தேர்வு செய்து நாள்தோறும் படிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, நல்ல உணவு உண்ணுதலும், நாள்தோறும் உடற்பயிற்சி தவறாது செய்தலும் வேண்டும். நல்ல உடல் நலம் அறிவுத் திறனுக்கு அடிப்படையாய் அமையும். நல்ல உணவு என்பது விலை உயர்ந்த உணவுகள் அல்ல. மலிவான கீரை, பழம், காய்கறிகளில் ஏராளம் இருக்கிறது. செயற்கை உணவுகளைத் தவிர்த்து இயற்கை உணவுகளை உண்ண வேண்டும்.
மூன்றாவதாக, சிறந்த தலைவர்கள், உயர் தகுதிபெற்ற மாணவர்கள் எப்படிப் படிக்கிறார்கள், எப்படிப் பழகுகிறார்கள், எப்படி நடந்து கொள்-கிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்களைப் பின்பற்றி நீங்களும் நடக்க வேண்டும். யாராவது ஓரிருவரை ‘Role Model’ ஆகவும் நீங்கள் கொள்ள வேண்டும்.
நான்காவதாக, அறிவாளிகளின் நல்ல உரைகள், இதழ்களில் வரும் சிறந்த படைப்புகள், தொலைக்காட்சியில் காட்டப்படும் பயனுள்ள நிகழ்வுகளைத் தேர்வு செய்து கேட்டு, படித்து, பார்த்து அவற்றின் மூலம் பல்வேறு கருத்துகளை நீங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு கருத்துகளை நீங்கள் புதிது புதிதாய் அறிகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் அறிவு வளரும். இதைத்தான் கற்றனைத்தூறும் அறிவு என்றார் வள்ளுவர்.
அய்ந்தாவதாக, தேர்ந்தெடுத்த _ உங்களுக்கு விருப்பமான இரண்டு மூன்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேச்சாற்றல், ஓவியம், இசை, விளையாட்டு, அறிவியல், கைவினைப் பொருள்கள் செய்தல் போன்றவற்றுள் உங்களுக்கு ஆர்வமுள்ளவற்றில் உங்கள் திறமையை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பையும் தாண்டி உங்கள் வாழ்வில் உங்களை உயர்த்த, உலகிற்குக் காட்ட அது பயன்படும்.
ஆறாவதாக, நேரந்தவறாமையும், காலத்தே செய்தலும் ஆளுமையை வளர்க்க உதவும் அடிப்படைப் பண்புகளாகும். எந்த வொன்றையும் நாளை நாளை என்று தள்ளிப்போடக்கூடாது. எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்துவிட வேண்டும். உரிய நேரத்தில் உரிய இடத்தில் இருந்து செய்ய வேண்டியதைச் செய்துவிட வேண்டும்.
ஏழாவதாக, பயிற்சி. ஆளுமைக்கு வலுசேர்க்கக்-கூடிய முதன்மையான செயல் பயிற்சி. எந்த ஒன்றிற்கும் பயிற்சி கட்டாயம். எந்த அளவிற்குப் பயிற்சி செய்கிறீர்களோ அந்த அளவிற்கு அச்செயலை நீங்கள் சிறப்பாக, சரியாக, செம்மை-யாகச் செய்ய முடியும்.
எட்டாவதாக, நன்னடத்தை. நம்பகத்தன்மை உங்களின் ஆளுமைக்கு வலுசேர்க்கும். உங்களுடைய நல்ல செயல்கள் சமுதாயத்தில் உள்ளவர்களை உங்களை விரும்பச் செய்யும். உங்களுடைய நேர்மை, வாய்மை, நம்பகத் தன்மை உங்களை பிறர் ஏற்கும்படிச் செய்யும்.
ஒன்பதாவதாக தன்னம்பிக்கை. ஒரு மனிதனை ஆளுமை மிக்கவனாக, தலைமைக்குத் தகுதியுடையவனாக, திறமையுடைவனாக, சாதனை செய்பவனாக ஆக்குவது அவனுடைய தன்னம்பிக்கைதான். மூடநம்பிக்கை எந்த அளவிற்கு விலக்கப் படவேண்டுமோ அந்த அளவிற்குத் தன்னம்பிக்கை வளர்க்கப்பட வேண்டும். தன்னம்பிக்கைதான் ஆளுமைக்கு அடிப்படை. என்னால் முடியும்; எனக்கு அத்தகுதி உள்ளது; நான் அதை வளர்த்துக் கொள்வேன்; அதைச் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உங்களுக்குள் ஆழமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை உங்களுக்குப் பாதி வெற்றியைத் தரும்.
பத்தாவதாக, திட்டமிடல். எந்தவொன்றையும், திட்டமிட்டுச் செய்தால் அது சிறப்பாக நிறைவேறும், ஆணவம், பதட்டம், அவசரம், படபடப்பு, தாழ்வுமனப்பான்மை இவை ஆளுமையின் எதிரிகள். அஞ்சாமை, நெஞ்சுறுதி, உங்களைப் பற்றிய உயர் எண்ணம் ஆகியன உங்கள் ஆளுமையை வளர்க்கக் கூடியவை.
எனவே, பிஞ்சுகள் ஆசிரியர் தாத்தாவின் 90 ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் இந்த சிறப்பான நாளில், அவரைப் பின்பற்றி மேற்கண்ட வழிகளில் உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே ஆசிரியர் தாத்தா உங்களிடம் விரும்புவது!<