இது புதிது! : சிகரம்
எலுமிச்சம் பழம் தொடுத்த பொது நலவழக்கு!
“கடைக்காரரே, எலுமிச்சம் பழம் என்ன விலை”?
“பத்து ரூபாய்க்கு ரெண்டுங்க”
“சரி பத்து பழம் கொடுங்க.”
பழத்தைப் பெற்றுக்கொண்டு நடந்த பழனிவேலின் கையிலிருந்த எலுமிச்சம் பழங்கள் பையோடு நழுவி விழுந்தன. அதில் ஒரு பழம் தரையில் உருண்டோடியது. சட்டென்று குனிந்து பழத்தை எடுக்கப்போனார் பழனிவேல்,
“தவறினால் தங்கம்!” என்றது தப்பியோடிய ஓர் எலுமிச்சை.
“உனக்கும் பழமொழி தெரியுமா?”
பழனிவேல் கேட்டார்.
“பழமொழியோடு கூடுதலாகவும் தெரியும்” எலுமிச்சை கூற, “அது என்ன?” என்று கேட்ட பழனிவேலிடம், “தவறாட்டி பங்கம்!” என்று பதில் சொன்னது.
“பங்கமா? எப்டி?”
“என்னை எதுக்கு வாங்கிட்டுப் போறீங்க!”
“புதுசா ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கியிருக்கேன். அதை வெள்ளோட்டம் விடும்போது அதன் சக்கரங்களின் அடியில் வைத்து நசுக்கி ஓட்டத்தான்!” – பழனிவேல் பதில் சொன்னார்.
“அதனால்தான் தவறினால் தங்கம்; தவறாட்டி பங்கம் என்றேன்.”
“அது எப்படி?”
“தவறி உங்ககிட்டேயிருந்து தப்பி ஓடினால், மோட்டார் சைக்கிளில் நசுங்காமல், யாருக்காவது சாப்பிட பயன்பட்டிருப்பேன். தவறாம உங்ககிட்ட மாட்டி நசுங்கினா நாசந்தானே!” எலுமிச்சை எதார்த்தமாகப் பதில் சொன்னது.
பழனிவேல் பழத்தை எடுத்து, பையில் போடப் போனார்.
“என்னை பையில் போடாதீங்க! நான் காவல் நிலையம் போகணும்” எலுமிச்சை கூறியதைக் கேட்ட பழனிவேல் திகைத்துப் போய்,
“என்ன! காவல் நிலையமா? எதுக்கு?” எனக் கேட்டார்.
“உணவுக்குப் பயன்படும் என்னை தரையில் போட்டு நசுக்கிப் பாழாக்கினால் குற்றம்தானே? குற்றவாளியைக் காவல் நிலையத்தில்தானே ஒப்படைக்கணும்!”
“பக்தியால் காவு கொடுக்கிறேன்! அது எப்படி குற்றம்?”
“பக்தின்னா என்ன?”
“கடவுளை நம்பி அதை வணங்குவது!”
“கடவுளை வணங்க என்னை ஏன் காவு கொடுக்கணும்?”
“உன்னைக் காவு கொடுத்தா வாகனத்தில் போறப்போ எனக்கு விபத்து இல்லாமல் இருக்கும்!”
“என்னைக் காவு கொடுத்தா விபத்து நடக்காதா?”
“அப்படித்தான் எல்லாரும் நம்பிச் செய்றாங்க!”
“எல்லாரும் நம்பிச் செய்தா, நீங்களும் அப்படி நம்பிச் செய்யணுமா?”
“பின்ன என்ன செய்யணும்?”
“கேள்வி கேட்கணும்! எலுமிச்சையைப் பலி கொடுத்தால் விபத்து நடக்காதா? என்று மத்தவங்ககிட்ட கேட்கணும்!”
“அவங்களக் கேட்டா, எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன்னு சொல்லுவாங்க! எல்லோரும் செய்வதை நானும் செய்யறதுல என்ன தப்பு?”
“அதுதான் தப்பு” எலுமிச்சை குரலை உயர்த்தி அழுத்தமாய்க் கூறியது.
“எப்படி?” பழனிவேல் கேட்டார்.
“எல்லாரும் என்றால் யார் யார்?”
“அதெப்படிச் சொல்லமுடியும்? ஊர்ல நாட்டில எல்லாரும் செய்றாங்க?”
“அமெரிக்காவில், ரஷ்யாவில், இங்கிலாந்தில் உள்ளவங்களும் இப்படி காவு கொடுக்கிறாங்களா?”
“இல்ல”
“அப்ப எல்லாரும் கொடுக்குறாங்கன்னு சொல்றது தப்புதானே?”
“ஆமாம்!”
“அந்த நாட்டிலெல்லாம் வண்டி ஓடாமலா இருக்கு! அங்க ஏன் காவு கொடுக்கல? அவுங்க நம்மள விட நிறையப் படிச்சிருக்காங்க! காவு கொடுக்கிறது சரியின்னா அவங்களும் கொடுப்பாங்கல்ல!”
“அப்ப நாம செய்யறது தப்பா?”
“தப்புதான்!” எலுமிச்சை இன்னும் அழுத்தமாகக் கூறியது.
“அவங்க பழக்கம் வேற, நம்ம பழக்கம் வேற. நம்ம பழக்கத்தை நாம செய்யறோம்!”
“அவங்க ஓட்ற வண்டியும் நீங்க ஓட்ற வண்டியும் ஒரே மாதிரியான வண்டிதானே! அவுங்க காவு கொடுக்காம இருக்கிறதால, அவுங்க எல்லாம் விபத்திலா சாகுறாங்க!”
பழனிவேல் அமைதியாய் இருந்தார்.
“பழனிவேல், பதில் சொல்லுங்க!”
பழனிவேலின் அமைதி தொடர்ந்தது.
“நம் நாட்டில் வாகனம் வாங்குற எல்லாரும் காவு கொடுத்துட்டுத்தானே வண்டியெடுக்குறாங்க?”
“ஆமாம். நூத்துக்கு தொண்ணூத்தியொம்பது பேர் அப்படித்தான் செய்றாங்க.”
“காவு கொடுத்தா விபத்து நடக்காது, கொடுத்த வங்களுக்கு அடிபடாது, சாவு வராது என்றால் 99 சதவிகித வாகனங்களுக்கு விபத்தே வரக்கூடாது அல்லவா?”
“ஆமாம்”
“காவு கொடுத்து ஓட்ட ஆரம்பிச்ச வாகனத்திற்கு விபத்து வருதில்ல, அத ஓட்டறவங்க அடிபட்டு இறந்து போறாங்கல்ல.”
“ஆமாம்”
“காவு கொடுத்தா கொடுத்தவனுக்கு விபத்து வராது என்றால், சாவு வராது என்றால், காவு கொடுத்த ஆயிரக்கணக்கானவர் விபத்துல சாவது எப்படி?
எலுமிச்சையைக் காவு கொடுத்தால் அது காப்பாத்தும் என்றால், காவு கொடுத்தவர்களை ஏன் காப்பாத்தவில்லை?” எலுமிச்சை எடக்கு மடக்காய்க் கேட்டது.
பழனிவேல் அமைதியாகவே நின்றார். “என்ன பழனிவேல், என்ன எடக்குமடக்கா கேட்கிறேன்னு நினைக்கிறீங்களா? நான் சரியாத்தான் கேட்கிறேன். பதில் சொல்லுங்க!”
பழனிவேலுவிடம் மீண்டும் அமைதி.
“வாகனம் என்பது இரும்பு, பிளாஸ்டிக், செம்பு, கண்ணாடி என்று பல சேர்த்து உருவாக்கப்படுவது. மனிதன் உருவாக்குவது. அதற்கு மூளை இல்லை; உணர்வு இல்லை; சிந்தனையில்லை; விருப்பம் இல்லை. அப்படியிருக்க அது எப்படி காவு கேட்கும்?
விபத்து ஏற்படும்போது வாகனமும் சேர்ந்து தான், சேதமாகிறது, உடைகிறது, சிதறுகிறது. வாகனத்தில் செல்கிறவருக்கு மட்டும் பாதிப்பு வந்தால் வாகனம் காவு வாங்கிவிட்டது என்று கூறலாம். எலுமிச்சைப் பழத்தை வாகனத்தின் சக்கரத்தில் வைத்து நசுக்கினால், அது விபத்தை எப்படித் தடுக்கும்?
விபத்து என்பது தற்செயலாய், சூழ்நிலையால், எதிர்பாராமல், மனிதத் தவற்றால், அல்லது வாகனப் பழுதால், அல்லது சாலை சரியில்லாததால், ஏற்படுகிறது. அதை எலுமிச்சம் பழத்தை நசுக்குவதால் எப்படித் தடுக்க முடியும்?
ஆடு, கோழி, மனிதனைப் பலி கொடுத்தால் நமக்கு நல்லது வரும், கேடு நீங்கும் என்பது எப்படி அறியாமையோ… அப்படிப்பட்ட அறியாமைதான் இது.
ஒன்றை அழிப்பதால் நமக்குள்ள கஷ்டம் எப்படி நீங்கும்? நமக்கு எப்படி நன்மை வரும்?
நரபலி கொடுத்த எவனுக்காவது நன்மை வந்திருக்கா? நரபலி கொடுத்த பின்தான் அவனுக்கு அழிவு வருகிறது. கொலைக் குற்றவாளி ஆகி, வாழ்நாள் முழுவதும் சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறான். நரபலி நன்மை தரவில்லையே! அக்குற்றச் செயலால் கேடுதானே வந்தது? இவனுக்குக் கேடு வந்ததோடு, ஓர் அப்பாவிக் குழந்தை அநியாயமாய்க் கொல்லப்படுது.
என்ன பழனிவேல், நான் சொல்றது சரிதானே! சரின்னா என்னைச் சக்கரத்துல வச்சு நசுக்காதீங்க”
பழனிவேல் சரியென்று தலையசைத்தார்.
“அப்போ எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?” – எலுமிச்சை கேட்டது.
“என்ன செய்யணும்” – பழனிவேல் கேட்டார்.
“என்னை ஒரு வக்கீல் வீட்டிற்கு அழைத்துப் போகணும், செய்வீங்களா?”
“ஏன்?” – பழனிவேல் கேட்டார்.
“வழக்குப் போடப்போறேன்.”
பழனிவேல் அதிர்ச்சியுடன், “என்மேலயா?” என்றார்.
“ச்சோ! அதுதான் நீங்க திருந்திட்டிங்களே! உங்கபேர்ல ஏன் வழக்குப் போடணும்! உங்க பேர்ல வழக்கு இல்ல. பொதுநல வழக்குப் போடணும்”னு எலுமிச்சை கூற,
எலுமிச்சம் பழத்தோடு வக்கீல் வீடு நோக்கிச் சென்றார் பழனிவேல்.
(வழக்கு… இனிமேல் தான்)