மூழ்காக் கப்பல்
விழியன்
தூறல் அதிகரித்தது. குடுகுடுவென ஓடி அல்லி ஓர் ஓட்டு வீட்டின் வாசலில் ஒதுங்கினாள். தூறல் அதிகரித்து கன மழை பெய்யத் துவங்கியது. அல்லியின் கையில் பள்ளிப் பை தவிர வேறு எதுவும் இல்லை. ஒரு துண்டோ, ஒரு குடையோ எதுவுமே இல்லை. அங்கிருந்து பள்ளி இன்னும் இருநூறு மீட்டர் தூரத்தில்தான் இருக்கும். எப்படியும் அவள் வகுப்பு நண்பர்கள் அல்லது பள்ளி நண்பர்கள் வருவார்கள், அவர்களுடன் குடையில் போய்விடலாம் எனக் காத்திருந்தாள். மேட்டுப்பட்டி, கரசமங்கலம் பகுதி பசங்க இந்த வழியாத்தான் வரவேண்டும். சிலர் நடந்து வருவார்கள், சிலர் சைக்கிளில் வருவார்கள். மூன்று பேரை மட்டும் அவங்க உறவினர்கள் வண்டியில் கூட்டிவந்து விடுவார்கள். எப்படியும் யாருடனாவது போய்விட வேண்டும் எனக் காத்திருந்தாள். அரைமணி நேரமானது. கொஞ்சம் மழைவிட்டாலும் கடகடவென ஓடிவிடலாம் என்று நி¢ன்றிருந்தாள்.
சாலையில் மழைநீர் ஓடிக்கொண்டே இருந்தது. கப்பல் செய்து மழைநீரில் விடலாம் என நினைத்தாள். ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே அவள் கற்றுக்கொண்டாள். அக்கா ஒருவர் அவளுக்குச் சொல்லிக்கொடுத்தார். ஒரு சிறிய தாள் கிடைத்தாலும் போதும், உடனே கப்பல் செய்துவிடுவாள். கத்திக்கப்பலும் நீர்முழுகிக் கப்பலும் செய்யத் தெரியும். நீர் செல்லும் பாதையைக் கவனித்தாள். வளைந்து நெளிந்து சென்றது. கப்பல் விட்டால் அருமையாகச் செல்லும். அது செல்லும் பாதையைக் கற்பனை செய்து பார்த்தாள் அல்லி. அவள் முழுப்பெயர் அல்லிமலர்.
சடாரென அவள் ஒதுங்கி இருந்த வீட்டின் கதவு திறந்தது. கை வைத்த பனியன் மட்டும் அணிந்திருந்த முதியவர் ஒருவர் வெளியே வந்தார். அல்லி இருப்பதை அவர் கவனிக்கவில்லை. வானத்தைப் பார்த்தார். அப்போதுதான் அதனைக் கவனித்தாள் அல்லி. அவர் கைகளில் சில வண்ணத்தாள் கப்பல்கள் இருந்தன. செய்தித்தாள்களால் செய்த சில கப்பல்களும் இருந்தன. முட்டியை மடக்கி அமர்ந்தார். ஒரு கப்பலை மட்டும் நீரில் விட்டார். அது டொபக்கடீர்ன்னு கவிழ்ந்து மூழ்கிவிட்டது. அடுத்ததாக ஒரு கப்பலை விட்டார். சிகப்பு நிறத்தில் இருந்தது. அது எல்லாவற்றையும் சமாளித்து பயணத்தைத் தொடர்ந்தது. வீட்டின் பக்கம் திரும்பி “கோமு…” என்று குரல்கொடுத்தார். அப்போதுதான் அல்லி இருப்பதைக் கவனித்தார்.
“கப்பல் விடுறியா?” என்று கேட்டா
ர். யார் நீ, இங்க ஏன் நிக்கிற என்று எதுவும் கேட்கவில்லை.
“உம்” என்று தலையாட்டினாள்.
புத்தகப் பையைப் பத்திரமாக வைத்துவிட்டு கப்பலின் முனைகளைக் கூராக்கினாள். அவள் விட்ட கப்பல் எங்கும் கவிழாமல் நல்லபடி சென்றது.
“கோமு, பாரு இங்க, ஒரு பாப்பா அருமையா கப்பல் விடுறா”
தன் பையில் இருந்து ஒரு தாளை எடுத்து சில நிமிடங்களில் கத்திக் கப்பல் செய்தாள். முதலில் அமர்ந்தது போலவே அசையாமல் அமர்ந்திருந்தார் பெரியவர். கத்திக் கப்பலைப் பார்த்ததும் அவர் கண்கள் அகல விரிந்தன.
“விடலாமா?” என்றார்.
‘ம்ம்…’ என்று அல்லி கத்திக் கப்பலை நீரில் விட்டாள். அழகாக ஆடி அசைந்து சென்றது கப்பல்.
“கோமு, பாரு இந்தக் குழந்தை அருமையா ஒரு கத்திக் கப்பல் செஞ்சிருக்கா”
அல்லி திரும்பி கதவுப் பக்கம் பார்த்தாள். பாட்டிக்கு உருவம் கொடுத்து கற்பனை செய்தாள். ஆனால் யாரும் வரவில்லை. வானத்தில் இருந்து பெய்யும் மழையும் நிற்கவே இல்லை.
“ஆமா பாப்பா, நீ யாரு?” என்றார். அல்லி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். அருகே இருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவி என்றாள். மழைக்கு ஒதுங்கினேன் என்று கூறினாள். காலையே அப்பாவும் அம்மாவும் கோணிப் பை கொங்காணி மாட்டிக் கொண்டு வேலைக்குச் சென்றுவிட்டார்கள் என்றாள். “யாராச்சும் ஸ்கூலுக்கு குடையுடன் போனா நானும் அவங்களோட போயிக்கறேன்” என்றாள் பரிதாபமாக.
சரியாக அப்போது பூக்காரப் பார்வதி தொப்பலாக நனைந்தபடி சாலையில் கடந்தார். “பெருசு நீதான் கப்பல் விட்டு விளையாடுறியா? அது யாரு குழந்தை? இன்னைக்கு மழைக்கு ஸ்கூல் எல்லாம் லீவு விட்டுட்டாங்களே” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
‘அச்சோ பள்ளிக்கு விடுமுறையா? இப்ப வீட்டுக்குத்தான் போகணுமா? பையை இங்கே வைத்துவிட்டு நனைஞ்சுக்கிட்டே போய்விடலாமா’ என்று யோசித்தாள்.
“மழை நிக்கட்டும் பொறுமையாப் போவோம்” என்றார் பெரியவர்.
வாசற்படியில் அல்லி அமர்ந்துகொண்டாள். சட்டை மாட்டிக்கொண்டு வந்தார் பெரியவர். என்ன வகுப்பு படிக்கிற? கூட்டாளி பேரு எல்லாம் என்ன’ன்னு வரிசையாக் கேட்டுக்கொண்டே இருந்தார். திடீரென “என் பேரை எழுதிக் காட்டுறியா?” என்றார். பெயரைச் சொன்னார்.
“நீங்க படிச்சதே இல்லையா?” என்று கேட்டாள் அல்லி.
“அப்ப எல்லாம் படிக்கணும்னே தெரியாதும்மா”
“மா…ரி.. இதான். இவ்ளோ சின்னப்பேரா?”
“முழுசா மாரிமுத்து. சுருக்கி மாரின்னுதான் கூப்பிடுவாங்க”
“மா..ரி..மு..த்..து..”
“அப்படியே கோமுன்னும் எழுதித் தா பாப்பா”
“கோ…மு”நோட்டினை வாங்கி தன் விரல்களால் அந்த வரியினை வருடினார்.. கோமு.. கோமு.. என் கோமு…என விம்மினார். பேனா பிடித்து கோமுவை எழுதப் பழகினார். மணி பதினொன்று ஆனது.
“தாத்தா… வீட்ல குடை இருக்கா?”
“இல்ல குழந்தை. வீட்டுக்குப் போகணுமா?”
“இல்ல பள்ளிக்கூடத்துக்கு…”
“அதான் இன்னைக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்களே, அப்புறம் ஏன்மா?”
“பசிக்குது தாத்தா. சத்துணவு போடுவாங் களான்னு பார்த்துட்டு வரேன். காலைலையே சாப்பிடல, பள்ளியில காலை உணவு போடுவாங்கன்னு சீக்கிரமே வந்துட்டேன்…” என இழுத்தாள்.
பதறினார் பெரியவர். “அய்யோ, புள்ளைக்கு எதுவும் தராமலே உட்காரவெச்சிட்டேனே” என புலம்பினார். “மன்னிச்சிடு கோமு, நீ கேட்கச் சொன்ன, நான் தான் கேட்கல. மன்னிச்சிடு கோமு” என்றார்.
“கால்மணி நேரத்துல உனக்கு பொங்குசாதம் ஆக்கிப் போடறேன். மூனு பேரும் சாப்பிடுவோம்.. என்ன” என்று கூறிய தாத்தா அடுப்பு பத்தவைத்து சமைக்க ஆரம்பித்தார். மிக எளிய உணவு.
“விடுமுறை விட்டா பசங்களுக்கு சாப்பாட்டுக்காச்சும் ஏற்பாடு செய்யணுமில்ல… இதை எல்லாம் யாரு யோசிப்பா..”
சுடச்சுட தயாரானது. வாசலுக்கு அருகே அமர்ந்து இருவரும் உண்டனர்.
“நல்லா இருக்கா? காரம் போதுமா?”
“ம்ம்ம்” என்றாள்.
“கோமு நீ சொன்ன மாதிரியே சாதம் செஞ்சேன். நல்லா இருக்காம்” வீட்டின் நடுவே கோமு பாட்டி படமாக இருந்து சிரித்துக்கொண்டு இருந்தார். எங்கிருந்தோ வீசிய வேகமான காற்றால் சில மழைத்துளிகள் அல்லியின் முகத்தில் பட்டுப் பூத்தன. அல்லி விட்ட கப்பல் எங்கும் மூழ்காமல் போய்க்கொண்டே இருந்தது.