செயத்தக்க… ப.மோகனா அய்யாதுரை
கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்றால் உலகம் முழுமையும் முடங்கிப் போனது. பெரும் வர்த்தக நிறுவனங்கள் கூட கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. பெரும் பணம் படைத்தவர்கள்கூட வாழ்வா? சாவா? என்ற நிலையில் உயிருக்குப் போராடினர். பலர் மடிந்தே போயினர்.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, வருங்கால சமுதாயத்தைக் கட்டமைக்கும் அடுத்த தலைமுறை பள்ளி மாணவர்கள் கற்றலில் பெரும் இடைவெளியைச் சந்தித்து வருகின்றனர். இந்த கற்றல் இடைவெளியைச் சரி செய்ய அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பல முனைகளில் இருந்தும் மாணவர்களுக்கு அழுத்தம் தரப்படுகின்றன.
எமர்சன் கூற்றுப்படி “குதூகலமின்றிச் செய்யப்படும் எந்த ஒரு செயலும் முழுப் பலனை அளிக்காது.” அந்த வகையில் மாணவர்கள் வெறும் புத்தகங்களின் வாயிலாக மட்டும் முழு அறிவையும் பெற்று விட முடியாது. எண்ணும் எழுத்தும் பற்றிய அறிவு இருக்க வேண்டியது அவசியம்தான். அதற்காகத் தான் பல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அதை நோக்கியே எப்போதும் பயணிக்க வேண்டும் என்று மாணவச் செல்வங்களை கட்டாயப்படுத்த முடியாது; கட்டாயப்படுத்தவும் கூடாது.
அவ்வகையில் தமிழ்நாடு அரசால் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் நிறைவாக மாநில அளவில் நடத்தப்பட்டு வரும் கலைத் திருவிழாக்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் குதூகலிப்பைக் கொண்டு வந்துள்ளன.
எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாணவர்களும் தங்கள் திறமைகளை வெளிக் காட்ட ஒரு பொது மேடை கிடைத்துள்ளது.அடிப்படை வசதி கூட இல்லாமல் படிக்கும் மாணவர்களின் திறமைகள் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது.பறை, சிலம்பம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைகளும் மாணவச் செல்வங்களால் புது வடிவம் பெற்றுள்ளன.முடங்கிக் கிடந்த மாணவர்கள் அனைவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கிடைத் திருக்கும் இந்த வாய்ப்பைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். பலதரப்பட்ட போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்கிறார்கள். முழு ஈடுபாட்டோடு தங்கள் திறமைகளை வெளிப் படுத்துகின்றார்கள்.கலை இலக்கிய நிகழ்வுகளால் மட்டுமே பல தரப்பட்ட மாணவர்களை இத்தகு மகிழ்ச்சியில் மூழ்கடிக்கச் செய்ய முடியும்.
கொரோனா காலத்தில் குழந்தைகள் இழந்ததும் இது போன்ற சின்னச் சின்னக் கொண்டாட்டங்களைத் தான். கலைத் திருவிழாக்களின் முடிவில் வெற்றி, தோல்வி என்பதை எல்லாம் தாண்டி அவர்களின் மனம் குளிர்ச்சி அடைந்துள்ளது. முழு உற்சாகம் தொற்றி உள்ளது. புது உத்வேகம் பிறந்துள்ளது.“அரசுப் பள்ளி மாணவர்களா?” என்றவர் கள் எல்லாம் அண்மைக் காலமாக அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளைக் கண்டு வியக்கின்றனர். சமூக வலைதளங்கள் யாவற்றையும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமைகளால் ஆக்கிரமித்துள்ளனர். இந்த விலையில்லா வெகுமதி, கற்றலில் அடுத்த கட்டத்துக்கு அவர்களை நகர்த்தும். அவர்களது கனவை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளச் செய்யும்.
கலைத் திருவிழா போன்ற மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொண்டுவரும் பல திருவிழாக்கள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். பாடப் புத்தகங்களைத் தாண்டி பயன் தரும் நல்ல பல புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கும் பழக்கத்தை பள்ளி வயதிலேயே மாணவர்களிடம் விதைக்க வேண்டும். அறிவியல் மனப்பான்மை அவர்களிடம் உண்டாகும்படி செய்ய வேண்டும். அதற்கான முன்னெடுப்பை அரசும், ஆசிரியர்களும் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறை மாணவர்கள் சமுதாய வளர்ச்சிக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை நல்கிட, நாம்தான் அவர்களுக்கு நல்வழி காட்டிட வேண்டும்.<