குருவியும்… குரங்கும்…
அடைமழைக் காலம் அதனால்
அன்று முழுதும் மழையே!
குடைபோல் கட்டிய கூட்டிலே
குருவியும் இருந்தது குஞ்சுடன்!
மழையில் நனைந்த குரங்குமே
மரத்தினி லேறியது நடுங்கியே!
நிலையினைக் கண்ட குருவியும்
நெஞ்சம் பதைத்துக் குரங்கிடம்
‘அண்ணா! என்னைப் பாருங்கள்
அருமைக் கூட்டினைக் கட்டியே
என்றும் மகிழ்ந்து வாழ்கிறேன்!
ஏனோ நீங்களும் இப்படி
நனைந்து மழையில் திரிவது
நன்றாய் இல்லை! நீங்களும்
முனைந்தொரு கூட்டினைக் கட்டி
முடித்திடக் கூடாதா?’ என்றது’
அதனைக் கேட்ட குரங்குதான்
ஆணவமாய் ஏறி மரத்தில்
இதமாய் இருந்த கூட்டினை
இரண்டு கையால் பிய்த்தது!
அறிவிலா மூடர்க்குக் கூறும்
‘அறிவுரை’ எல்லாம் வீணாகும்!
தெரிந்து சொல்லல் நன்று – செவி
திறந்து கேட்போர் யாரென்று!!<
– அழகு நிலவன்
புதுக்கோட்டை