கூலிங் க்ளாஸ் குணாளன்
குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இருந்தது. தன்னுடைய பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு அங்கே சென்றுவிட்டது. அந்த மரம் காட்டிலேயே மிகவும் உயரமான மரம். அதில் ஏறுவதற்கு அனைவரும் பயப்படுவார்கள். குணாளன் அதன் மேலே ஏறிவிட்டது. ஏறியதோடு இல்லாமல் இரவு அங்கேயே தூங்கிவிட்டது. கோபம் எதற்குத் தெரியுமா? அன்று காலை கிடைத்த தேனுக்காக அடம்பிடித்தது. அதனை உடனே நான் குடிக்கணும் என அடம்பிடித்தது. சேமித்து வைத்து, கொஞ்ச நாள் கழித்துக் குடிக்கலாம் என்றால் கேட்கவில்லை. பெற்றோர் சமாதானம் செய்தார்கள். ஆனாலும் கேட்கவில்லை. அதனால் தான் கோபம். மரத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டது.
ஆமாம், அதற்கு என்ன புரியவில்லை தெரியுமா? தன் கையில் கிடைத்த பொருள் என்னவென்று தெரியவில்லை. கருப்பான நிறத்தில் அது இருந்தது. வானத்தில் இருந்து யாரேனும் போட்டார்களா? ஏதாச்சும் பறவை போட்டுச்சா? நட்சத்திரத்தில் இருந்து விழுந்ததா? மேகத்தில் இருந்து தவறி விழுந்ததா?
குணாளனின் கைகளில் இருந்தது ஒரு கூலிங் க்ளாஸ். முதலில் குணாளன், கண்ணாடிக்குப் பயந்துவிட்டது. பின்னர் அது பயம் தரக்கூடிய பொருள் இல்லை எனப் புரிந்துகொண்டது. கண்ணாடியை மேலும் கீழும் பார்த்தது. பின்னர் கண்ணாடியின் பகுதிகள் விரிந்தன. ‘அட!’ என ஆச்சரியமானது குணாளனுக்கு. அதனை முகத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று புரிந்துவிட்டது. அதனை முகத்தில் அணிந்தது உலகமே இருட்டானதுபோலத் தெரிந்தது. போட்டது. கழற்றியது. போட்டது. கழற்றியது. இருள். வெளிச்சம். இருள். வெளிச்சம். பயங்கர மகிழ்ச்சியாகிவிட்டது குணாளனுக்கு.
மரத்தின் கீழே ஒரு குரல் “குணாளா.. குணாளா.. எங்கப்பா இருக்க..” என்று அம்மா தேடிக்கொண்டு வந்துவிட்டார். மரத்தின் கிளையை ஆட்டி, தான் அங்கே இருப்பதைத் தெரிவித்தது. பிறகு மெல்ல மரத்தின் மேலே இருந்து இறங்கியது. கீழே இறங்கும்போது பயங்கர கெத்தாக இறங்கியது. ஆமாம் அதன் முகத்தில் கூலிங் க்ளாஸ் இருந்தது. வழக்கமான நடையைவிட ஒரு துள்ளல் அதிகமாக இருந்தது. உற்சாகம் கூடுதலாக இருந்தது. அதனுடைய அம்மாவே ‘அட!’ என்று வியப்புடன் பார்த்தது.
காடு முழுக்கக் குணாளனைப் பற்றித்தான் பேச்சு. குணாளனைவிட குணாளனின் கூலிங் க்ளாஸ் பற்றிதான் பேச்சு. ‘அதுக்கு ரெண்டு கண்ணு இருக்காம்…’, ‘இல்லை’ மூனு கண்ணு இருக்காம்… என்று பரவி அந்தக் கண்ணாடிக்கு நாற்பத்தைந்து கண்கள் இருக்குன்னு பேச ஆரம்பித்துவிட்டார்கள். காட்டின் சந்தையில் இறங்கி நடக்கும்போது எல்லோருடைய கண்ணும் குணாளன் மீதுதான் இருந்தது. ஏதாச்சும் கடையில் நின்று கேரட் கேட்டால் உடனே இலவசமாக கேரட் கிடைத்தது. குட்டியான மரத்தின் மீது ஏறிக்கொண்டு கிளையில் படுத்துக்கொள்ளும். வானத்தைப் பார்த்தபடி படுத்துக்கொண்டு கண்ணாடியைப் போட்டுக்கொள்ளும். “ஆஹா! என்ன சுகமா தூக்கம் வருது” என்று கதைவிடும். அந்தக் கண்ணாடியை யாரிடமும் தரவே இல்லை. அதனுடைய அப்பா, அம்மா கேட்டும் தரவே இல்லை. “ஆங், இது எனக்கு மட்டுமே” எனச் சொல்லிவிட்டது குணாளன்.
காட்டில் எல்லோருமே வந்து குணாளனையும் அதன் கூலிங் க்ளாஸையும் பார்த்துவிட்டனர். ஆனால், காட்டில் ஒருவர் மட்டும் பார்க்கவில்லை. இந்தச் செய்தி குணாளனின் காதிற்கும் எட்டியது. பார்க்காத அந்த விலங்கு ஒரு குரங்கு. அதன் பெயர் கண்ணாளன். ஆமாம், அது ஏன் பார்க்க வரவில்லை தெரியுமா? குணாளனைப் பார்க்க வராதது மட்டுமல்ல, அது மரத்தினைவிட்டு இறங்கியே பல காலம் ஆகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுக்குள் ஒரு விளையாட்டு நடைபெற்றது. மரத்திற்கு மரம் தாவும் விளையாட்டுதான். குறிப்பிட்ட மரத்தில் இருந்து வெகு தூரமாக இருந்த மரத்திற்குத் தாவ வேண்டும். அப்படித் தாவும்போது கண்ணாளன் ஒரு விபத்தினைச் சந்தித்தது. தாவும்போது பொத்தென விழுந்துவிட்டது. விழுந்த இடத்தில் முறிந்த மரம் ஒன்று இருந்தது. அந்தக் கூரிய கிளை கண்ணாளனின் முகத்தை பதம் பார்த்துவிட்டது. ஒரு கண் பெயர்ந்துவிட்டது. முகமே கொஞ்சம் சிதைந்துவிட்டது. அன்றைய இரவு மரத்தில் ஏறியதுதான். அதன் பின்னர் கீழே இறங்கவேயில்லை. கண்ணாளனின் நண்பர்கள் அவ்வப்பொழுது சில பழங்களைப் கொடுப்பார்கள். நண்பர்கள் வெகு தூரம் சென்று இரவு திரும்பவில்லை என்றால் அன்றைய தினம் சாப்பாடு இல்லை. பசியுடனே இருக்கும். இறங்கவே இறங்காது. அதனால்தான் குணாளனையும் பார்க்க வரவே இல்லை. சில குரங்குகள் வந்து, “அது செம்மையா எதையோ மாட்டி இருக்கு தெரியுமா?” என்றார்கள். அப்போதும் அது இறங்கவேயில்லை.
இதைக் கேள்விப்பட்டு; “அது யார், ஏன் என்னை இன்னும் பார்க்கவரவில்லை” என்று குணாளன் ஒரு நாள் கடும் கோபத்தில் அந்த மரத்தை நோக்கி நடந்தது. சந்தையில் அதனைப் பார்த்தவர்கள், வழியில் பார்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு ஏதோ சம்பவம் நடக்கப்போகுது என்று அதன் பின்னால் சென்றார்கள். கோபத்தில் குணாளன் வருவதைப் பார்த்த குரங்கு நண்பர்கள் கையில் இருந்த வாழைத்தாரினை அப்படியே வைத்துக்கொண்டு நின்றுவிட்டார்கள். கண்ணாளன் இருந்த மரத்தினை அடைந்தது குணாளன். மரத்தினை எல்லோரும் சூழந்துகொண்டனர். குணாளன் தன்னுடைய பெரும் உடலை வைத்து மரத்தின் மேலே ஏறியது.
“நீ பார்க்க வரலைன்னா என்ன, நானே வந்து கண்ணாடியைக் காட்றேன்னு போகுது போல” என்று பேச்சுகள் எழுந்தன. மேலே ஏறிய பின்னர் எந்தச் சத்தமும் வரவில்லை. பேச்சுக் குரலும் கேட்கவில்லை. கால்மணி நேரம் கழித்து லேசான சலசலப்பு. யாரோ இறங்குவதுபோல இருந்தது. குணாளன் சிரமப்பட்டு தொப்பென கீழே குதித்தது. அது குதித்த மறு நிமிடம் மற்றொரு தொப். ஆமாம் கண்ணாளனே தான். மீண்டும் கண்ணாளனைக் கீழே பார்த்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. இப்போது கண்ணாளன் முகத்தில் அந்த கூலிங் க்ளாஸ் இருந்தது. எல்லோரும் ‘வாவ்!’ என்று பார்த்தார்கள். கை தட்டினார்கள்.
கீழே இருந்த குணாளனுக்குக் கைகொடுத்துத் தூக்கியது கண்ணாளன். தன் இடுப்பில் மாட்டி இருந்த தேன் பாட்டிலை எடுத்து ஒரு சொட்டு குடித்துவிட்டு கண்ணாளனின் கைகளில் கொஞ்சம் ஊற்றியது. கண்ணாளனுக்கு எல்லோரையும் பார்த்ததே உற்சாகமாக இருந்தது. அப்போது
குணாளன் சொன்னது:
“நண்பா, நாம எப்படி இருக்கமோ அதான் அழகு. விபத்து நடந்துடுச்சா? ஆமா, அதுக்கு என்ன? மத்தவங்க என்ன நெனப்பாங்கன்னு நாம ஏன் நம்ம வாழ்க்கையைச் சுருக்கிக்கனும்?” என்றதும் தன் முகத்தில் மாட்டி இருந்த கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்ணீருடன் குணாளனை அணைத்துக்கொண்டது.
அன்றிலிருந்து காட்டில் எல்லோரும் கூலிங் க்ளாஸினை அணியத் துவங்கினார்கள். கூலிங் க்ளாஸ் காட்டிற்கே சொந்தமானது. குணாளனின் நெருங்கிய நண்பனானது கண்ணாளன். ஆனாலும் இன்றும் காட்டில் குணாளனை “கூலிங் க்ளாஸ் குணாளன்” என்றே அழைக்கின்றார்கள்.