நினைவில் நிறுத்துவோம்
சிகரம்
மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்குச் செல்ல வந்தபோது சாலையில் உடைக்கப்பட்டுக்கிடந்த பூசணிக்காயால் வழுக்கி விழுந்து மண்டை உடைபட்டவர்.
வழக்குரைஞர் பழனிவேல் உடனடியாக அக் காட்சியைப் படம் பிடித்துக்கொண்டு, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காவல்துறைக்கும் தெரிவித்துவிட்டு, நீதிமன்றம் நோக்கிச் சென்றார்.
அப்போது அருகிலுள்ள வீட்டிலிருந்து ஒருவர், ஒரு தட்டில் இரு வாழைப்பழங்களை வைத்து, அதில் இரண்டு ஊதுவத்தியை கொளுத்திச் செருகி எடுத்துக்கொண்டு மறுகையில் தேங்காயோடு வந்தார். தெருவில் அடியெடுத்து வைத்தவர் கல் தடுக்கிக் கீழே சாய்ந்தார். அவரை வழக்குரைஞர் தாங்கிப்பிடிக்க, வாழைப்பழமும் தேங்காயும் சாலையில் வீழ்ந்தன.
வழக்குரைஞர் பழனிவேல் ஒரு கையில் இருவாழைப்பழங்களையும், மறு கையில் தேங்காயையும் எடுத்தார். அப்போது வழுக்கி விழுந்த அந்த நபர், “அய்யா சிதறுதேங்காய் உடைக்க வந்தேன், வழுக்கிவிட்டது. நல்ல வேளை தாங்கிப் பிடிச்சிட்டிங்க!’’ என்றார்.
அப்போது தேங்காயும், வாழைப்பழமும், “வக்கீல் அய்யா எங்களை அவரிடம் கொடுக்காதீங்க. வீணாகச் சாலையில் போட்டு பாழாக்கிவிடுவார்’’ என்றன.
“பெரியவரே! தேங்காயைச் சாலையில் உடைத்துப் பாழாக்கலாமா? பக்தியின் பேரால் உணவுப் பொருள்களைப் பாழாக்கக்கூடாது என்ற வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. எலுமிச்சைப் பழம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருது. அந்த வழக்கில் பூசணிக்காயும் சேர்ந்துகொள்ளவிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், வாழைப்பழத்தையும் தேங்காயையும் சாலையில் பாழாக்கக்கூடாது. சரியா?’’ என்றார் வழக்குரைஞர் பழனிவேல்.
“ஓ…! இதுங்கெல்லாம் வழக்குப்போட ஆரம்பிச்சிட்டதுங்களா!” மலைத்துப்போய்க் கேட்டார் அந்தப் பெரியவர்.
“வக்கீல் அய்யா! நாங்களும் இந்த வழக்கில் இணைந்து கொள்கிறோம். நாங்களும் நீதிமன்றத்திற்கு வருகிறோம்’’ என்றன தேங்காயும், வாழைப்பழங்களும்.
“சரி வாங்க!’’ என்று வழக்குரைஞர் கூற, நீதிமன்றத்தை நோக்கி பழனிவேல் சென்றார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் பழனிவேல் சென்றதும் எல்லோரும் அவரையும் அவர் அருகில் இருந்த எலுமிச்சை, பூசணி, தேங்காய், வாழைப்பழங்களையும் பார்த்தனர்.
“என்ன சார் படையலா?’’ என்றார் ஒரு வழக்குரைஞர் பழனிவேலுவைப் பார்த்துச் சிரித்தபடி.
அப்போது,
“எலுமிச்சை! எலுமிச்சை! எலுமிச்சை!’’ நீதிமன்ற ஊழியர் மூன்று முறை அழைத்தார்.
வழக்குரைஞர் பழனிவேல் எலுமிச்சையை எடுத்துக்கொண்டு, நீதிபதி முன் நின்றார். அருகில் பூசணிக்காய், தேங்காய், வாழைப்பழமும் இருந்தனர்.
நீதிபதி: “எலுமிச்சைப்பழம் கொடுத்துள்ள உறுதிமொழிகளைப் பார்த்து, அதனுடைய கோரிக்கைகளை இந்த நீதிமன்றம் புரிந்து கொண்டது. எலுமிச்சை சார்பில் நீங்கள் வாதாடுகிறீர்களா?” என்று பழனிவேலுவைப் பார்த்துக் கேட்டார்.
எலுமிச்சை: (முந்திக்கொண்டு”) அய்யா! என் தரப்பு நியாயங்களை நானே சொன்னால்தான் சரியாக இருக்கும். எனவே, தாங்கள் அனுமதித்தால் நானே வாதிட விரும்புகிறேன்.
நீதிபதி: உமது வாதத்தைக் கேட்க இந்த நீதிமன்றமும் இங்குள்ள வழக்குரைஞர்களும் ஆவலாய் இருக்கிறோம். எனவே, இன்றே உமக்கு இந்த நீதிமன்றம் நேரம் ஒதுக்கித் தருகிறது. உமது வாதங்களை வைக்கலாமா?
எலுமிச்சை: “அய்யா! என்னைப் போலவே பாதிக்கப்பட்ட பூசணிக்காய், தேங்காய், வாழைப்பழம் ஆகியவையும் இவ்வழக்கில் சேர்ந்துகொள்ள விரும்புகின்றன. எனவே, தாங்கள் அவற்றையும் இவ்வழக்கில் இணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறோம்.”
நீதிபதி, வழக்குரைஞர்கள் உள்பட அந்த அறையில் உள்ள அனைவரும் வியப்புடன் நோக்கினர்.
நீதிபதி: “ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய், மதம், சாஸ்திரம், ஜாதி போன்றவற்றின் பேரால் உரிமைகள் மறுக்கப்பட்டு ஊமைகளாய் வாழ்ந்த நிலையில், அவர்களுக்கு இப்போதுதான் ஓரளவு உரிமைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட சமுதாயத்தில் உங்களைப் போன்ற பேசும் திறனற்ற பழங்கள், காய்கள் தங்கள் உரிமைக்காகப் போராட நீதிமன்றத்தின் முன் நிற்பது மகிழ்வளிக்கிறது.
சமுதாயத்தில் உரிய உரிமைகள் ஒவ்வொரு வருக்கும் கிடைக்க, விழப்பு வேண்டும், துணிவு வேண்டும். அதற்காகப் போராடும் முயற்சி வேண்டும். இவை மனிதர்களிலே பலருக்கு இன்னும் இல்லாத நிலையில், நீங்கள் நியாயத்திற்காகவும், நாட்டின் நன்மைக்காகவும் வாதிட வந்திருப்பதை இந்த நீதிமன்றம் வரவேற்கிறது. உங்கள் கோரிக்கை ஏற்கப்படுகிறது. பூசணி, தேங்காய், வாழைப்பழமும் இவ்வழக்கில் இணைந்துகொள்ள மனுதாக்கல் செய்ய வழக்குரைஞரை இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது.
வழக்குரைஞர் பழனிவேல்: அய்யா, தங்கள் ஆணைப்படி இன்றே மனுதாக்கல் செய்கிறேன்.
நீதிபதி: இவ்வழக்கு நாளை மறுநாள் எடுத்துக்கொள்ளப்படும். அப்போது எலுமிச்சை தனது நியாயங்களை இந்த நீதிமன்றத்தின் முன் வைக்கலாம்.
(தொடரும்)