நாம் தமிழ் படிக்கலைனா யார் படிக்கிறது?
உலக மக்களோடு நாம் போட்டி போட்டு உயர நமக்கு இங்கிலீஷ் மொழி அவசியம். அதே நேரத்தில் நமது தாய்மொழியை மறந்துவிட முடியாது. துறை சார்ந்த பாடங்களை இங்கிலீஷ் மொழியில் படித்தாலும் மொழிப்பாடமாக தமிழை எடுத்துப் படிப்பதே தமிழர்களுக்கு நல்லது. ஆனால், தேசியக் கல்வி வாரியத்தின் பள்ளிகளில் அல்லது தேசியக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் (C.B.S.E.) இயங்கும் பள்ளிகளில் பயிலும் நம் தமிழ்ப் பிள்ளைகள் பலர் தமிழை விடுத்து இந்தி, பிரெஞ்ச் என பிற மொழிகளைப் பயிலும் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழை மொழிப்பாடமாக எடுத்து ஒரு மாணவர் 99 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.
அவரை நாம் பாராட்டாமல் இருக்கலாமா? அவர் நமது பெரியார் பிஞ்சு உட்பட தமிழின் முன்னணி இதழ்களுக்கு ஓவியங்கள் வரையும் ஓவியர் அரஸ் அவர்களின் மகன் ஹர்ஷவர்த்தன்.
சென்னை – பூந்தமல்லி – நசரத்பேட்டையில் உள்ள தூய யோவான் சர்வதேச உறைவிடப் பள்ளியில் (St. Johns International Residential School) படித்த ஹர்ஷவர்த்தனிடம் எப்படி தமிழ் மீது இந்த ஆர்வம் வந்தது என்று கேட்டோம். சிறு வயதிலிருந்தே தமிழ்ப் பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தை அப்பா உருவாக்கினார். தமிழின்மீது ஈடுபாடு வர இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கலாம். மேலும், தமிழ்நாட்டில் பிறந்த நாம் தமிழ் படிக்காமல் வேறு யார் படிப்பது? நம் தாய்மொழியை நாமே இகழ்வாக – மரியாதைக்குறைவாக நினைக்கலாமா?
எங்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 74 மாணவர்களுள் நான் மட்டுமே மொழிப்பிரிவில் தமிழ் எடுத்துப் படித்தேன். என் ஆசிரியை விஜயலட்சுமி, முதல்வர் கிஷோர் குமார் ஆகியோர் என்னை அதிக உற்சாகப்படுத்தினர்.
வகுப்புத் தேர்வுகளில் தமிழில் 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன். பொதுத்தேர்வுக்குப் படிப்பதற்கு ஒரு மாதம் விடுமுறை இருந்தது. அப்போது கடின உழைப்புடன் படித்தேன். படித்த பாடங்களை எழுதிப் பார்க்கும் பழக்கம் என்னிடம் உண்டு. தமிழ்ப் பாடத்தையும் படித்ததும் எழுதிப் பார்த்து தவறுகளைத் திருத்திக் கொள்வேன். இதுவே நான் 99 மதிப்பெண்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
அப்பா, அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பள்ளிக்கும், தமிழாசிரியருக்கும் பெருமை தேடித் தந்ததாக ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.
தமிழில் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ள பிரியங்காவுக்கும், விக்னேஷ்குமாருக்கும் எனது வாழ்த்துகள்!
தமிழ் மொழியைப் பாரமாக நினைக்கக் கூடாது. நாம் தமிழ் படிக்கலைனா யார் படிக்கிறது? பெற்றோர்கள் ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிப் பாடங்களை எடுத்துப் படிக்கச் சொல்வார்கள். அப்போது நாம்தான் நம் தாய்மொழி இருக்கும்போது பிறமொழிகளை ஏன் எடுத்துப் படிக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.
பெரும்பாலான ஆங்கிலப் பள்ளிகளில் தமிழில் பேசக்கூட அனுமதி மறுக்கப்படுவதை நினைத்து வருத்தமாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை என் நண்பர்களுடன் பெரும்பாலும் தமிழில்தான் பேசுவேன். பிற மாநிலங்களிலிருந்து படிக்க வந்த நண்பர்களிடம்கூட தமிழில் பேசிப் பழகி அவர்களையும் தமிழில் பேச வைத்துவிடுவேன்.
மொழிப்பிரிவில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
ஏனெனில் ஸ்போக்கன் இங்கிலிஷ், ஹிந்தி, சமஸ்கிருதம், ஃபிரெஞ்ச், ஜப்பானிஷ் போன்ற மொழிகளைக் கற்றுக் கொள்ள ஏராளமான பயிற்சி மய்யங்கள் (Coaching Centres) உள்ளன.
தமிழ் மொழிக்கென்று எந்தப் பயிற்சி மய்யமும் இல்லை. எனவே, நம் தாய்மொழியைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பள்ளிப் பருவத்தில் மட்டுமே உள்ளது. அந்த வாய்ப்பை ஒவ்வொருவரும் தவறவிடக் கூடாது என்பதே என் விருப்பம் என்று கூறும் ஹர்ஷவர்த்தனுக்கு அப்பாவைப்போலவே ஓவியத்திலும் தீவிர ஆர்வம் உண்டு. ஒரு ஓவியக் கண்காட்சியையும் நடத்திய ஹர்ஷவர்த்தன் தொடர்ந்து கூறும்போது,.
பெயிண்டிங்கில் அதிக ஆர்வம் உண்டு. மனோதத்துவ முறையிலும் அதிக ஈடுபாடு உண்டு. ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களது மனநிலையை ஓரளவு அறிந்து கொள்வேன்.
தமிழில் நாவல் இலக்கியம் குறைந்து வருவதாக எனக்குள் ஓர் ஆதங்கம் உள்ளது. எனவே, நிறைய நாவல்கள் எழுதி ஏதேனும் சாதனை புரிந்து தமிழுக்காகத் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் அதிகமாக உள்ளது என்கிறார். (இவ்வளவு மகிழ்ச்சியிலும் நமக்கு ஒரே ஒரு வருத்தம். தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இவர்களின் பெயர்கள் தமிழில் இல்லையே…!
சந்திப்பு :- குறள்மொழி
நம் பெரியார் பிஞ்சுகளும் இதே போல் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலோ அல்லது பள்ளியிலோ சாதனை புரிந்திருப்பீர்கள். சாதனைப் பிஞ்சுகள் உங்களது புகைப்படத்துடன் மதிப்பெண் சான்றிதழ் நகலினை (Xerox) வைத்து, தங்கள் வெற்றியின் இரகசியத்தை எழுதி மற்ற பிஞ்சுகளுடன் பகிர்ந்து கொள்ள பெரியார் பிஞ்சுக்கு அனுப்பி வையுங்கள்.