கணக்கும் இனிக்கும்
உமாநாத் செல்வன்
பிஞ்சுகளே!
மழை அதிகரிக்கும் போது தொலைக் காட்சிகளில் “ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது, 10 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது” என்று வாசிப்பதைக்கேட்டு இருப்பீர்கள். அந்த டிஎம்சி என்றால் என்ன? லட்சம் கன அடி என்றால் எவ்வளவு என்று பார்ப்போமா!
அது கண்டிப்பாக ஓர் அளவீடாகத்தான் இருக்கவேண்டும். தூரமாக இருக்குமா? அல்லது பரப்பளவாக இருக்குமா?
நீருக்கு தூரம் இருக்குமா? அது பயணம் செய்யும் தூரமாக இருக்கலாம்.
நீருக்கு பரப்பளவு? கண்டிப்பாக இருக்கும். ஒரு ஏரிக்கோ, குளத்திற்கோ அவற்றின் பரப்பளவைச் சொல்ல இயலும். ஆனால், டிஎம்சி என்பது இவை இரண்டும் அல்ல, அது கொள்ளளவு (Volume).
One TMC என்றால் One Thousand Million Cubic Feet
Thousand என்றால் ஆயிரம் = 1,000
Million என்றால் 1000 ஜ் 1000 = 10,00,000 (பத்துலட்சம்)
அப்படி என்றால் 1 TMC எவ்வளவு?
1 ஆயிரம் மில்லியன் Cubic Feet
= 1 ஜ் 1000 ஜ் 10,00,000 Cubic Feet
Cubic Feet = Feet 3 = Feet X Feet X Feet.
தமிழில் இதனை கனஅடி என்போம். கனஅடி என்பது கொள்ளளவின் அலகு (unit of volume) ஓர் அடி நீளம், ஓர் அடி அகலம், ஓர் அடி உயரம் கொண்ட ஒரு கனசதுரத்தின் கொள்ளளவு. (கனசதுரம்னு சொல்லிட்டாலே நீளம், அகலம், உயரம் எல்லாம் ஒரே அளவில்தான் இருக்கும்).
சரி, ஓர் அடி எவ்வளவு நீளம் இருக்கும்? நம்ம காலடி அளவிற்கு இருக்கும். குட்டிக் குழந்தைகளின் காலடி அல்ல. 15 வயது குழந்தையின் காலடின்னு வைத்துக்கொள்ளலாம். பென்சில் பாக்ஸ் அல்லது ஜியோமெட்ரி பாக்ஸில் ஒரு ஸ்கேல் இருக்கும் அல்லவா? அது அரைஅடி (15 சென்டி மீட்டர் வரையில் காட்டும் பாருங்க). அது இரு மடங்காக இருக்கும்போது அது 1 அடி ஸ்கேல். அதாவது 12 அங்குலம் (inch) என்பது ஓர் அடி.
இப்ப அந்த அளவிலான ஒரு கன சதுரத்தில் எவ்வளவு நீரினை ஊற்ற முடியுமோ அதுவே
1 Cubic Feet.
ஆனாலும் நமக்குத் தெரிந்தது லிட்டர் கணக்கு தானே! வீட்டிற்கு அரைலிட்டர், ஒரு லிட்டர் என பால் வாங்குவோம். அந்தக் கணக்கில் எவ்வளவு லிட்டராக இது இருக்கும்?
1 லிட்டர் = 1000 Cm3
அதாவது 10 சென்டிமீட்டர் கன சதுரத்தின் கொள்ளளவு 1 லிட்டர்.
இப்படி நம்ம டிஎம்சி கணக்கிற்கு வருவோம். அதில் Cubic feet என்று இருக்கு. நம்மிடம் இருப்பது Cubic Centimetre (Cm3)
1 feet = 30.48 cm
1 feet3 = 30.48 cm X 30.48 cm X 30.48 cm = 28,316.84 Cm3 = 28. 316 X 1000 Cm3
= 1 X 1000 X 10,00,000 Cubic Feet
= 103 X 106 X 28. 316 litres
[10 = 101 ; 100 = 102 ; 1000 = 103]
1 TMC = 28.316 X 1000000000 litres
இனி செய்திகளைக் கேட்கும்போது எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகின்றார்கள் என்று கேட்டாலோ வாசித்தாலோ இந்த எண் நம்ம மனதில் தோன்ற வேண்டும். நாம் பால்குடிக்கும் டம்ளரின் கொள்ளளவு 200 மில்லி லிட்டர் – அதாவது ஒரு லிட்டரில் அய்ந்தில் ஒரு பகுதி. அப்படின்னா ஒரு டிஎம்சி தண்ணீர் எவ்வளவு இருக்கும்னு பார்த்துக்கோங்க!
அதுமட்டுமில்லை, விவசாயத்திற்குத் தண்ணீர் தேவை அல்லவா? ஒரு டிஎம்சி தண்ணீரானது ஓர் ஆண்டு முழுக்க 10,000 ஏக்கர் நிலத்திற்குத் தோராயமாகத் தேவைப்படும். சிலவேளையில் சில பயிர்களுக்கு அதிகமான நீர் தேவைப்படலாம் அல்லது குறைவாகவும் தேவைப்படலாம். இந்த நீர் நிலத்தடி நீராகவும் இருக்கலாம்; மழை மூலம் பெறும் நீராகவும் இருக்கலாம். கால்வாய்கள் மூலம் பெறும் நீராகவும் இருக்கலாம்; இப்போது மீண்டும் செய்திகளை வாசிக்கும்போது கவனியுங்கள், எவ்வளவு நீர் ஆற்றில் இருந்து கடலில் கலக்கின்றது என்று குறிப்பிடுவார்கள். இதனை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம், என்ன என்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் ஆராய முற்படுங்கள்.