தொடர் கதை – 4 சிகரம்
“எலுமிச்சை! எலுமிச்சை! எலுமிச்சை!”
நீதிமன்ற ஊழியர் அழைக்க, எலுமிச்சையை எடுத்துக் கொண்டு வழக்குரைஞர் பழனிவேல் உள்ளே சென்று நீதிபதி முன் நின்றார். நீதிபதி எலுமிச்சையைப் பார்த்து, “உங்கள் வழக்கின் நியாயங்களை இந்த நீதிமன்றம் முன்பு எடுத்து வைக்கலாம். உங்களுக்கு இந்த நீதிமன்றம் அனுமதியளிக்கிறது” என்றார்.
எலுமிச்சையாகிய நாங்கள் ‘ஓசுபேக்’ என்னும் தாவர வகையைச் சேர்ந்தவர்கள் ஆவோம். ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட எலுமிச்சை மரம் ‘ருட்டேசி’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. எலுமிச்சை மரம் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் குறுஞ்செடி வகை தாவரமாக அறியப்படுகிறது. எங்களை அரசக் கனி என அழைப்பார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ‘லெமன்’ என்னும் சொல் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரெஞ்சு மொழியில் ‘Limon’ என்றும், இத்தாலி மொழியில் ‘Limone’ என்றும், அரபு மொழியில் Layman,
சமஸ்கிருதத்தில் Limba, மற்றும் பாரசீக மொழியில் Limun என்றும், ஆங்கிலத்தில் Lime மற்றும் Lemon என்றும் எங்களை அழைக்கிறார்கள். பொதுவாக எல்லா இடங்களிலும் ‘சிட்ரஸ்’ பழம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறோம்.
எலுமிச்சையாகிய எங்களிடம் கலோரி 24%, புரதச் சத்து 0.92 கிராம், நார்ச்சத்து 2.4 கிராம், இரும்புச் சத்து 0.5 மில்லி கிராம், கால்சியம் 11 மில்லி கிராம், சோடியம் 2 மில்லி கிராம், பொட்டாசியம் 138 மில்லி கிராம், சர்க்கரை 2.5 கிராம் உள்ளது. மேலும், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் போன்றவையும் அடங்கியுள்ளன. உடலுக்கு தேவையான சத்துக்களைத் தருவதோடு, மருத்துவத்திற்கு நாங்கள் பயன்படுகிறோம்.
நாங்கள் எல்லாக் காலங்களிலும் கிடைக் கிறோம். பித்தம் குறைப்பதால் ‘பித்த முறி மாதர்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்க வாய்த் துர்நாற்றத்தைப் போக்கி, சீரான சுவாசம் நாங்கள் உதவுவோம்.
நுரையீரல் தொற்றுகளைக் குறைப்போம். எங்களிடம் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘சி’ சத்து உள்ளது. எங்களைச் சாறாக்கி, ‘எலுமிச்சைச் சாறு’ பருகுவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை, நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைப் பழச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றைச் சரியாக்கும் ஒப்பற்ற சாறு நாங்கள் தருவது. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் எங்களிடம் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எங்களால் நலம் பெறலாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுகளை வெளியேற்றுவோம். உடலின் தற்காப்பு ஆற்றலைப் பெருகச் செய்வோம். கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி ஆகும் என்பார்கள். கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையவர்கள் நாங்கள்.
தலைவலி தீர்க்க, மலச்சிக்கல் விலக்க, தொண்டை வலியைப் போக்க, வாந்தியை நிறுத்த, காலராக் கிருமிகளை ஒழிக்க, பித்தத்தைப் போக்க, பல் நோய்களைக் குணப்படுத்த, வாய் நாற்றத்தை அகற்ற, சர்ம நோய்களைக் குணப்படுத்த, டான்சிலைத் தடுக்க, நஞ்சை முறிக்க, வாய்ப்புண்ணை ஆற்ற, தேள் கடிக்கு உதவ,
மஞ்சள்காமாலையை நீக்க, வீக்கத்தைக் குறைக்க, வாயுவை அகற்ற, பசியை உண்டாக்க, நகச் சுற்றியைக் குணமாக்க, யானைக்கால் வியாதியைக் குணப்படுத்த நாங்கள் பயன்படுகிறோம்.
நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எங்கள் தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் உள்ளது. தினமும் எங்களை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கித் தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.
விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ குடித்தால் உடனடித் தெம்பு ஏற்படும். உண்ணாவிரதம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு உண்டால் செரியாமைப் பிரச்சினைகள் ஏற்படாது.
உப்பில் ஊறவைத்த ஊறுகாயாக ஓராண்டுகள் கூட கெட்டுப்போகாமல் உணவுக்கு பக்க உணவாகப் (கடித்துக் கொள்ள) பயன்படுகிறோம்.
எங்களை நறுக்கி மிளகாய் போன்றவை சேர்த்துத் தாளித்து அவ்வப்போது பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.
பெரிய மனிதர்களைச் சந்திக்கும் போது அவர்களின் கையுறைப் பொருளாக்கி எங்களைத் தான் கொடுக்கிறார்கள். நாங்கள் ஒன்றும், நெடுநாள் வாழ்ந்து காய்ந்து உதிர வேண்டும் என்று கேட்கவில்லை. இத்தனைப் பயன்தரும் எங்களை எவ்வளவோ குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் பயன்பட வேண்டிய எங்களைக் கொஞ்சமும் பயனில்லாமல் நடுவீதியில் நசுக்கிப் பாழாக்குவதை இந்த நீதிமன்றம் தடுக்க வேண்டும் அய்யா!
எலுமிச்சையின் வாதக் கருத்துகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி, “ஆகா! வெகுசிறப்பான வாதம். பாராட்டுகள்! நாளை பூசணிக்காய் தன் வாதங்களை இந்த நீதிமன்றத்தில் வைக்கலாம்” என்றார். வழக்கு மறுநாள் மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது.
(தொடரும்)