தமிழில் 100க்கு 100
அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற முடியாது என்று இருந்து வந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் பிரியங்காவும் விக்னேஷ்குமாரும்.
அரசின் உதவியில் நடைபெற்றுவரும் போடி ஜமீன்தாரனி காமுலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படித்தவர் பிரியங்கா. சென்னை – கீழ்ப்பாக்கம், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் விக்னேஷ்குமார். பிரியங்காவின் அம்மா ஆசிரியை என்பதால் சிறு வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதோடு, பாரதி, பாரதிதாசன் கவிதைகளையும் படிக்கச் சொல்வாராம். அப்போது, தமிழில் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொடுத்துள்ளார்.
வகுப்பில் நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களைக் காட்டும் போது, ஒற்றுப் பிழை, ல, ள, ழ, ண, ன வேறுபாடுகளை எடுத்துச் சொல்லி விளக்கியுள்ளார்.
பிரியங்காவின் தமிழ் ஆசிரியை ஜீவாவும் தமிழ்ப்பாடத்தில் எப்படியாவது நம் பிள்ளைகளுள் ஒருவர் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார்.
தன்னுடைய சாதனையில் பெரும்பங்கு கொண்டவர்கள் அம்மாவும் தமிழ் ஆசிரியையும்தான் என்று பூரிக்கிறார் பிரியங்கா.
விக்னேஷ்குமாரின் தந்தை பெயின்டர், தாய் வீட்டு வேலைகளைச் செய்து வருபவர். மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண்ணைப் பெற்றதுடன் தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்து அசத்தியுள்ளார்.
தமிழ்ப் பாடத்தில் 98 அல்லது 99 மதிப்பெண்களை எதிர்பார்த்த விக்னேஷ்குமாருக்கு 100 மதிப்பெண்கள் என்றதும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆசிரியர் பாடம் நடத்தியபோது, ஆழ்ந்து கவனித்துப் படித்ததே தனது வெற்றிக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.