அறிவியல் :”ஃபேனைப் பன்னெட்டுல வைங்க”
ப. மோகனா அய்யாதுரை
வெயில் காலம் ஆரம்பிச்சிடுச்சி. இனிமே இதோட பயன்பாடு ரொம்ப அதிகமா இருக்கப் போகுது. வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் இது மேல தான் நம்ம கண்ணு இருக்கும். நாம் எதப் பத்தி தெரிஞ்சிக்கப் போறோம்னு புரிஞ்சிடுச்சா?
சரியா யூகிச்சவங்க உங்க முதுகில தட்டிக் கோங்க… கண்டுபிடிக்கலைன்னாலும் பரவால்ல. இந்த கட்டுரைல நம்ம தெரிஞ்சுக்கப் போறது மின்விசிறி அதாவது ‘Fan’ பத்தின தகவல்கள் தான்.
வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள், இன்னும் நெறைய இடங்கள்ல குளிரூட்டுவதற்காகவே மின்விசிறி பயன் படுத்தப்படுது.
விசிறிகள் காற்றைச் சுத்தவைக்கறது மட்டு மில்லாம அந்த இடத்துல ஈரப்பதத்தோட அளவை நிலைநிறுத்தவும் உதவுது.
எல்லா இடங்கள்லயும் ஒரே மாதிரி மின்விசிறி பயன்படுத்தலாமானு கேட்டீங்கன்னா கண்டிப்பா முடியாது. அறையோட அளவைப் பொருத்தும், அதோட பயன்பாட்டைப் பொருத்தும்தான் மின் விசிறியைத் தேர்ந்தெடுக்கணும்.
பொதுவா நாம பார்க்கிற மின்விசிறிகள் மூன்று இறக்கைகள் கொண்டதா இருக்கும். ஆனா, 4, 5, 8 இறக்கைகள் கொண்ட மின்விசிறிகள்கூட இருக்கு.
அதே மாதிரி மின்விசிறிகள்லTable Fan, Exhaust Fan, Wall mount Fan இப்படி இன்னும் பல ரகங்கள் கூட இருக்கு.
மின்விசிறி சுத்தும்போது அதுக்கு மேல் பக்கமும் காற்று வருமானு நாம யோசிச்சிருப்போம். ஆனா அப்படி வராது.
நாம பார்க்கிற பெரும்பாலான மின் விசிறிகள் இடஞ்சுழியாக (Anti- clockwise) சுத்தும் போது மின் விசிறிக்கு மேலே இருக்க குளிரான காற்றை கீழே இழுக்கும். அப்படி கீழே வர்ற குளிரான காற்று நம்ம உடம்புல இருக்கற வியர்வையை ஆவியாக்கி நம்ம உடம்பைக் குளிர்விக்குது.
விமானத்துல இருக்கற விசிறி எதுக்குனு என்னைக்காவது யோசிச்சிருக் கீங்களா?
மின் விசிறி எப்படி மேல இருக்கற காற்றைக் கீழே தள்ளுதோ அதே மாதிரி விமானத்தில் இருக்கற விசிறி, முன்னாடி இருக்கற காற்றை ரொம்ப வேகமாப் பின்னால தள்ளும். அப்போ தான் விமானம் முன்னாடி போகும்.
அது சரி. மின்விசிறி இறக்கைகள் வடி வமைப்புல அறிவியல் இருக்கானு அடுத்து தெரிஞ்சிப்போம்.
விசிறியில் பொதுவாக மூன்று இறக்கைகள் இருக்கும். ஒவ்வொரு இறக்கையும் வெறும் தகடு போல இல்லாம படத்துல இருக்க மாதிரி சற்று சரிவாக வளைஞ்சிருக்கும் ஒவ்வொரு இறக்கையும் நடுப்பகுதியில சரியான ஒரு கோணத்தில் (Pitch) இணைக்கப்பட்டிருக்கும்
மின் விசிறி சரியான திசையில் சுத்துனாத் தான் காற்று அதிகமாக வரும். எதிராகச் சுற்றினால்…? விசிறிக்குள்ள மின் இணைப்பை மாத்தி அது சுத்துற திசைய மாத்த முடியும்.
மின் விசிறி இடஞ்சுழியாகச் சுத்தும் போது அதோட பிளேடுகள் இடது மேலிருந்து வலது கீழாகச் சுத்தும். அதனால்தான், மின் விசிறியின் கீழே நிற்கும் போது அதிகமான காற்றை உணர முடியுது. (முன்பே பெரியார் பிஞ்சு இதழில் பார்த்திருப்பீங்களே!)
வெயில் காலத்துல இது நல்லா இருக்கும். இதுவே குளிர் காலத்துல ரூம்ல குளிர் இல்லாம வெப்பத்தை உணர என்ன பண்றதுனு கேட்கறீங்களா? அதுக்கும் வழி இருக்கு.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள்ல வீட்ல இருக்கற மின் விசிறிகள் இரண்டு திசைகள்லேயும் சுழலக் கூடியதா இருக்குமாம். காலநிலைக்கு ஏத்த மாதிரி மின் விசிறியோட திசைய மாத்திக்கலாமாம். அதாவது வெளியில் காலத்துல இடஞ்சுழியாகவும், குளிர்காலத்துல வலஞ்சுழியாகவும் (Clockwise) சுத்தற மாதிரி வச்சிருப்பாங்களாம். வலஞ்சுழியா மாத்தும் போது கீழே இருக்கற குளிரான காற்றை மெதுவாக மேல் நோக்கி இழுக்கும். திரும்ப மேலே வந்த குளிர்ந்த காற்று சுழற்சியாக தரைக்குப் போகும். இதுபோல செய்யறதால அந்த ரூம் கதகதப்பா இருக்கும், ஹீட்டர் பயன்படுத்தத் தேவை இல்லை (அல்லது மிதமான வெப்பநிலையில் வைத்துக் கொள்ளலாம்). இப்படி மாத்திக்கறதால மின் விசிறிகளால் மின் கட்டணம் 15 சதவிகிதம் வரை குறையறதாவும் சொல்லப்படுது.
மேசை மின் விசிறி எப்படி சுத்துது? உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியே அனுப்ப சமையலறையிலும், கழிவறையிலும் நாம் பயன் படுத்தும் Exhaust Fan எப்படி சுத்துதுங்கிறதையெல்லாம் கவனிங்க!