துணுக்குச் சீட்டு – 8 : வலியில் கத்தும் செடி
அபி
ஒரு விஷயம் தெரியுமா? செடி, மரம் எல்லாம் சத்தம் போட்டுக் கத்துமாம். அப்போ, ஏன் நம்மளால அந்தச் சத்தத்தைக் கேக்க முடியல? அவை உண்மையாகவே கத்துமா?
இது தானே உங்க கேள்வி..
ஆமாம், செடி சத்தம் போடும்.
நம்மளால 20KHz வரைக்கும் தான் கேக்க முடியும் ஆனால், நம்ம செடி நண்பர்கள் எல்லாம், 40-80KHz அளவில் சத்தம் போடும். அதனால் தான் நமக்கு அதோட கூச்சல் கேக்கல. இதெல்லாம் நானா சொல்ற கதை இல்லைங்க, ஆய்வாளர்களின் ஆராய்ச்சி முடிவு தான் சொல்லுது. இந்த ஆய்வுக்கு, முக்கியமாக தக்காளிச் செடியைப் பயன்படுத்தி இருக்காங்க. ஆய்வுக்காக, பாதி வெட்டபட்ட செடி, நீர் இல்லாம வாடிய செடி மற்றும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்குற செடியைப் பயன்படுத்தி இருக்காங்க.
நல்ல ஆரோக்கியத்தோடு இருக்குற செடி, ஒரு மணி நேரத்துக்கு, ஒரு தடவை சத்தம் போட்டு இருக்கு. தண்ணீர் இல்லாம வாடிப் போன செடி, ஒரு மணி நேரத்துக்கு, 35 தடவை தண்ணீர் வேணும், தண்ணீர் வேணும் என்று கேட்டுகிட்டே இருந்து இருக்கு (தண்ணீர் இல்லேன்னா, தண்ணீர் வேணும்னுதான் கேட்கும், அது அதோட மொழியில் கேட்டு இருக்கு.. இதெல்லாம் கண்டுக்கப்படாது!) பாதி வெட்டப்பட்ட செடி ஒரு மணி நேரத்துக்கு 25 தடவை சத்தம் போட்டிருக்கு. இது இருக்கட்டும், திரையரங்குல படம் பார்க்கும்போது கொரிக்க Popcorn வாங்கும்போது, அதை பொரிக்கும்போது வருகிற சத்தத்தைக் கவனிச்சு இருக்கீங்களா? அந்த சத்தத்தைப்போல தான், நம்ம செடி போடுற சத்தமும் இருக்கும்.
‘செடி போடும் சத்தம், காற்றில் பரவுமா?’ என்ற இந்த ஆய்வுக்கு, தக்காளிச் செடியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில், ஒலிவாங்கியை (Microphone) வைத்து ஆராய்ச்சி செய்து இருக்காங்க. செடி வெளியிடும் ஒலியை அந்த ஒலிவாங்கி மூலமாக வாங்கி அதை மனிதர்கள் கேட்கக் கூடிய ஒலியில் வெளியிட்டு இருக்காங்க நம்ம ஆய்வாளர்கள். செடியில் xylem என்று ஒரு vascular தசை இருக்கு. இதன் வழியாகத் தான் வேரிலிருந்து செடி முழுவதும் தண்ணீர் போகும். தண்ணீருடன் காற்றுக் குமிழிகளும் xylem- சைலத்தில் செல்லும் போது, கொஞ்சம் கொஞ்சமாக, காற்றுக் குமிழிகள் பெரிசாகி, நீர் போகவிடாமல் தடுக்கும். இதைக் குமிழாதல்னு (cavitation) சொல்லுவாங்க. இந்தக் குமிழாதல் ஏற்படுவதால இந்தச் சத்தம் வரலாம்னு சொல்றாங்க. மேலும், இந்த சத்தம் எப்படி வருது என்பதற்கான விரிவான ஆய்வை நடத்திக்கிட்டு இருக்காங்க. கோடை காலம் வந்துடுச்சு, பாவம் வெளிய இருக்குற செடி ரொம்ப நேரமா தண்ணீர் வேணும்னு கேட்டுக்கிட்டு இருக்கும், அதுக்கும் கொஞ்சம் குடுங்களேன், பாவம் அது!