கோமாளி மாமா-34 : படமும் பாடமும்
மு. கலைவாணன்
விடுமுறை நாளில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்பதற்காக மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் தோட்டத்திற்கு வந்துவிட்டார்கள்.
கதை சொல்ல கோமாளி மாமா இன்னும் வரவில்லை. மல்லிகா தன் வீட்டில் புத்தக அலமாரியை ஒழுங்குபடுத்தும் போது கிடைத்த ஒரு படத்தை எடுத்து வந்திருந்தான். அது ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் எடுத்த ஒளிப்படம் அதை மாணிக்கம், செல்வம் இருவரிடமும் காட்டி “இதில் நான் எங்கே இருக்கிறேன் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? என்றாள்.
“இதோ இந்தக் கடைசியில் உம்முன்னு நிக்கிறதுதான் நீ’’ என்றான் செல்வம்.
“டீச்சர் பக்கத்திலே ரொம்ப ஸ்டெயிலா நிக்கிறதுதான் மல்லிகா’’ என்றான் மாணிக்கம்.
“ரெண்டுமே இல்லை… டீச்சருக்குப் பின்னாடி இடுப்புல கையெ வச்சுக்கிட்டு நிக்கிறதுதான் நான்’’ என்றாள் மல்லிகா.
அந்த நேரம் அங்கு வந்தார் கோமாளி மாமா. “என்ன… எல்லாரும் ஏதோ படம் பாத்துக்கிட்டிருக்கிறிங்க? நானும் பாக்கலாமா? என்றார்.
“மாமா… இது ரொம்ப பழைய படம் மாமா’’ என்று கிண்டலாகச் சொன்னான் செல்வம்.
“இந்தப் படத்திலே மல்லிகா எங்கேன்னு கண்டுபுடிக்கிறது ரொம்ப சிரமம் மாமா’’ என்றான் மாணிக்கம்.
“அப்படியா… காட்டுங்க நான் பாக்குறேன்’’ என்றார் கோமாளி.
“இது நான் ஒன்னாவது படிக்கும்போது எடுத்த படம் மாமா…’’ என்றாள் மல்லிகா.
“அடடே! பரவால்லியே… இதைப் பாதுகாப்பா வச்சிருக்கிற உனக்கு என்னோட பாராட்டுகள். இப்படி கடந்த கால நிகழ்வுகளை நம்ம கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டுற படங்களைப் பாக்கும்போது மனசுக்குள்ள இருக்கிற பசுமையான நிகழ்வுகள் திரைப்படம் மாதிரி ஓடும்” என்றார் கோமாளி மாமா.
“ஆமா! மாமா இப்பவும் என்னோட சேர்ந்து படிக்கிற தேன்மொழி… அபிநயா எல்லாரும் இந்தப் படத்துலயும் இருக்காங்க மாமா…” என மகிழ்ச்சியாகச் சொன்னாள் மல்லிகா.
“பழைய படங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள் இதெல்லாம்தான் நாம முன்னாடி எப்படி இருந்தோம். இப்ப எப்படி இருக்கிறோம்? வளர்ச்சி அடைஞ்சு இருக்கிறோமா? வளராம அப்படியே இருக்கிறோமா? அப்படிங்கிற உண்மையை தெரிஞ்சுக்க உதவுற சாட்சிகள்…
இது மாதிரி நானும் ஒரு படம் கொண்டு வந்திருக்கிறேன்’’ என்றார் கோமாளி.
“அட…! மாமா… நீங்க பள்ளிக்கூடம் படிக்கும்போது எடுத்த படமா மாமா?’’ என்றான் செல்வம்.
“இல்லே. இது ஒரு பத்திரிகையில செய்தியா வந்த படம்…’’ என்றபடி தன் சட்டைப் பையிலிருந்து ஒரு படத்தை எடுத்து மூவருக்கும் காட்டினார்.
“அய்யய்யோ! எலும்புந்தோலுமா இருக்கிற குழந்தையைக் கழுகு தூக்கிக்கிட்டுப் போகப் பாக்குது; படத்தைப் பாத்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கே’’ என வியப்போடு சொன்னாள் மல்லிகா.
“வாங்க! இதைப் பத்தின தகவலைச் சொல்றேன்’’ என்றபடி வழக்கமாக அமர்ந்து கதை சொல்லும் இடத்துக்குப் போனார் கோமாளி. அவரைச் சுற்றி உட்கார்ந்து கொண்டனர் மூவரும்.
“இந்தப் படம் உலகப் புகழ் பெற்ற படம். இந்த படத்திலே ஒரு பெரிய பாடமும் இருக்கு.
ஒரு சின்னப் பெண் குழந்தை. பஞ்சத்துனால சாப்பிட உணவு இல்லாம… நடக்கக்கூட முடியாம… எலும்புந்தோலுமா கூனிக்குறுகிக் கிடக்குது.
அந்தக் குழந்தைக்குப் பின்னால ஒரு கழுகு எப்ப வேணும்னாலும் கொத்தித் தூக்கிக்கிட்டுப் போகக் காத்துக்கிட்டிருக்கு.
இது 1993ஆம் ஆண்டுல தெற்கு சூடான்ங்கிற நாட்டில… ஏற்பட்ட கொடுமையான பஞ்சத்தின்போது நடந்த சோகமான நிகழ்ச்சி.
இந்தப் படத்தை எடுத்தவரு தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர் கெவின் கார்ட்டர்.
அந்த கெவின் கார்ட்டருக்கு இந்தப் படத்தை எடுத்ததுக்காக உலகப் புகழ் பெற்ற ‘புலிட்சர்’ விருது கிடைச்சது. அது மட்டுமில்லே அந்த நேரத்திலே இந்தப் படம் உலகம் முழுக்கப் பரவி, பரபரப்பாகி சூடான் நாட்டு மக்களின் வறுமையின் கொடுமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.
1994ஆம் ஆண்டு புலிட்சர் விருது வாங்கின சில நாள்களிலேயே ஒரு தொலைக்காட்சி சேனல்ல இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் பேட்டி கொடுக்கிறாரு.
அப்போ அங்கே இருந்த பார்வையாளர்களிலே ஒருத்தரு… ‘நீங்க படம் எடுத்தீங்க சரி… அதுக்குப் பிறகு உயிருக்குப் போராடிக்கிட்டிருந்த அந்தச் சின்னக்குழந்தைக்கு என்ன ஆச்சு?’ன்னு கேட்டாரு.
அதுக்கு கெவின் கார்ட்டர் ‘அந்தப் படம் எடுத்த உடனேயே எனக்கு அவசரமான விமானப் பயணம் இருந்ததாலே நான் உடனே புறப்பட்டுட்டேன். அதுக்குப் பிறகு என்ன நடந்துதுன்னு எனக்குத் தெரியாது. ஏன்னா… நான் அங்கே இல்லை.’ அப்படின்னு இயல்பா பதில் சொன்னாரு.
பார்வையாளர் மறுபடி…
‘நான் உங்களுக்கு ஒன்று சொல்றேன்… உயிருக்குப் போராடுற குழந்தைக்குப் பக்கத்தில ரெண்டு கழுகுகள் இருந்துச்சு.
ஒரு கழுகு அதனோட இரைக்காக காத்துக்கிட்டிருந்துது.
இன்னொரு கழுகு கேமராவோட தன் புகைப்பட பசிக்காக காத்துக்கிட்டிருந்துது…’ அப்படின்னாரு.
பார்வையாளர் சொன்ன இந்தச் சொற்கள் கெவின் கார்ட்டரை… அதிர்ச்சிக்கு உள்ளாக்கிடுச்சு.
தப்பு செய்துட்டோமேன்னு மனஉளைச்சலுக்கு ஆளானாரு.
அதுக்குப் பிறகு மனச்சோர்வுல தொடர்ந்து சிகரெட் பிடிச்சு… தன்னைத்தானே தற்கொலை செய்துக்கிட்டாருன்னு… அந்த நேரத்திலே செய்திகள் வந்துது.
சின்னாபின்னமா சிதைஞ்சு போன மனித நேயத்தின் ஓர் உருவமா மாறிப்போனாரு கெவின் கார்ட்டர்.
தன்னோட 33 வயசுலே மறைஞ்ச கெவின் கார்ட்டர் எடுத்த இந்தப் படம் பழைய படமா இருந்தாலும்… இப்பவும் நம்ம எல்லாருக்கும் பாடமா இருக்கா, இல்லியா?’’ என்ற கேள்வியோடு முடித்தார் கோமாளி மாமா.
“மாமா… நமக்கு மட்டுமில்லே ஊடகத் துறையிலே இருக்கிறவங்களுக்கும் இது ஒரு பாடம்தான் மாமா!’’ என்றான் மாணிக்கம்.
“இன்னைக்கும் இவரைப் போல பல பேரு நம்ம நாட்டிலேயும் இருக்காங்களே…
தப்பு செய்யிறவங்க பெரிய ஆளா… உசந்த ஜாதின்னு சொல்லிக்கிறவங்களா இருந்தா அவங்களைக் கண்டுக்காம விட்டுடுறது. சாதாரண சாமானிய மக்களா இருந்தா அவங்களைப் பெருசா காட்டுறதுன்னு நடக்கத்தானே செய்யுது…” என்றாள் மல்லிகா.
“ஒவ்வொரு செய்தியையும், தகவலையும் மனிதாபிமான உணர்வோட பார்க்கணும் செயல் படணும்ங்கிற பொறுப்பு எல்லாருக்கும் வரணும் மாமா…” என்றான் செல்வம்.
ஒரு படம் சொன்ன பாடம்… குழந்தைகள் மனதில் மாற்றத்தை உருவாக்கிவிட்டது என்ற மனநிறைவோடு புறப்பட்டார் கோமாளி.<
(மீண்டும் வருவார் கோமாளி)