இடர்மீட்புத் தொடர் : மீள்வோம்!மீட்போம்! புயலுக்குப் பின்
தே.பொய்யாமொழி
பேரிடர் கடந்த இரண்டு கட்டுரைகளில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் பற்றிப் பார்த்தோம். அந்த வரிசையில் இக் கட்டுரையில் புயல் (cyclone) பற்றித் தெரிந்து கொள்வோம். புயல் எப்படி உருவாகிறது? அல்லது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பன பற்றிப் பார்ப்போம்.
புயல் கடல் பகுதியில் மட்டுமே உருவாகும்; நிலப்பரப்புகளில் உருவாகாது. ஆனால், கடலில் இருந்து கரையைக் கடந்து நிலத்தின் உள்ளே வரும். கடலின் உள்ளே சேதத்தை ஏற்படுத்தாது, கரையைக் கடந்து உள்ளே வரும் பொழுது அதன் வேகத்திற்கு ஏற்ப சேதங்களை ஏற்படுத்தும்.
எப்படி புயல் உருவாகிறது? கடல் நீர் நன்றாகச் சூடாகும் பொழுது (குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ்) அந்த இடத்தில் உள்ள காற்று சூடாகிறது. சூடான காற்று மேல்நோக்கிச் செல்லும்.
அதற்கு காற்று அழுத்த உயர்வு நிலை என பெயர். கடலின் மேற்பரப்பிலிருந்து மேல்நோக்கி காற்று சென்றவுடன் அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படும். அந்த வெற்றிடத்தை அருகில் உள்ள காற்று வந்து நிரப்பி விடும். பிறகு அந்தக் காற்றும் சூடாகி மேலே செல்லும். இவ்வாறு தொடர்ந்து செயல்படும் பொழுது புயல் உருவாகும்.
ஒரு முறை புயல் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு குட்டி சுட்டிப் பையன் கேட்டான், “கடல் உள்ளேயே புயல் இருக்கு இருக்குன்னு சொல்றாங்களே அங்கே பெரிய ஃபேன் (fan) கொண்டு போய் வச்சு அந்தப் புயல் காத்தை அப்படியே கலைத்து விட்டால் என்ன சார்?’’
அவனுடைய அறிவுக்குத் தோன்றிய யோசனை. அதில் தவறு ஒன்றும் இல்லை. இந்தப் புயல் எனப்படுவது சுமார் 15 கிலோ மீட்டருக்கும் மேல் உயரமாகவும் பல நூறு கிலோமீட்டர் நீள, அகலத்திலும் இருக்கும். அதனால் தான் அவ்வளவு பெரிய நீர் நிலை நிலப்பகுதியில் இல்லாததனால் கடலில் மட்டுமே தோன்றுகிறது. இப்ப யோசிச்சுப் பாருங்க. மின்விசிறி வச்சு அதைக் கலைக்க முடியுமா? அவ்வாறு ஏற்படும் காற்றுச் சுழல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கரையைக் கடக்கும் பொழுது பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தோம்.
அதன் வேகம் மணிக்கு
= 1. 39 கிலோ மீட்டருக்கும் கீழே இருந்தால் அதற்கு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எனப் பெயர்.
= 31-49 கிமீ வேகத்தில் வந்தால் அதற்கு காற்றழுத்தத் தாழ்வும் மண்டலம் எனவும்
= 50-61 வரை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் எனவும்
= 62-88 வரை புயல் எனவும்
= 89-118 வரை தீவிரப் புயல் எனவும்
= 119-221 வரை மிகத் தீவிரப் புயல் எனவும்
= 221 – கி.மீக்கு மேல் சென்றால் மாபெரும்
புயல் எனவும் அதன் வேகத்தை வைத்து ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். புயல் வருவதை அறிந்து கொள்வதற்கு டாப்ளர் வெதர் ராடார் (DOPPLER WEATHER RADAR) உள்ளது. அதன் மூலம்
காற்றின் வேகத்தைக் கணித்து வானிலை ஆய்வு மய்யம் நமக்குத் தகவல் தெரிவிக்கும். கடற்கரை ஓரங்களில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப புயல் எச்சரிக்கைக் கூண்டு அல்லது கொடி ஏற்றப்படும். அதை வேகத்திற்கு ஏற்ப 11 பிரிவுகளாகப் பிரித்து உள்ளனர். அவ்வாறு வரும் ஒவ்வொரு புயலுக்கும் ஒரு பெயர் வைத்துள்ளனர். முன்பு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து போன்ற எட்டு நாடுகளும் தொடர்ந்து சுழற்சி முறையில் 88 பெயர்கள் கொடுத்து வைத்துள்ளனர். அதற்குப் பிறகு இப்பொழுது மேலும் அய்ந்து நாடுகள் சேர்ந்து 13 நாடுகள் அந்த வரிசையில் உள்ளன.
ஒரே ஒரு புயலின் அழிவுகளைப் பற்றிப் பார்ப்போம். 12.11.2018 இல் உருவாகி 16.11.2018 கரையைக் கடந்த கஜா புயல் அதில் 45 பேர் மரணம் அடைந்தனர். 732 கால்நடைகள் இறந்தன. ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்தன. 56 ஆயிரம் கூரை வீடுகள் முழுதும் பாதிக்கப்பட்டன. 30,000 கூரை வீடுகள் ஒரு பகுதி பாதிப்படைந்தன. 30,000 ஓட்டு வீடுகள் பாதிப்படைந்தன. ஒரு லட்சத்து 10 ஆயிரம் மின் கம்பங்கள் முறிந்து விழுந்து நாசமாகின. ஆயிரக்கணக்கான மீட்டர் மின் கம்பிகள் அறுந்து சேதமடைந்தன. 81 ஆயிரம் பேர்களுக்கு மேல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சாதாரணமாகச் சொல்லப்படும் காற்றின் வேகத்தைப் பாருங்கள்.
சரி, புயல் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படித் தற்காத்துக் கொள்வது?
புயல் கரையைக் கடக்கும் பொழுது அதிகப் பாதிப்பு கடற்கரை யோர மக்கள் மற்றும் கடற்கரை யோர மாவட்டங்களுக்குத் தான். எனவே, பாதிப்பு ஏற்படுத்தும் என்று அறியப்படும் பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விடுவர். மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விடும். கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து மக்களுக்குப் புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குவார்கள். அதைப் பின்பற்றி நாம் நடக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பெரிய பாதிப்புகளில் இருந்து நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.
(மீட்போம்)