பயனுள்ள சுற்றுலா : கீழடி எனும் வரலாற்றுப் பெட்டகம்!
ப. மோகனா அய்யாதுரை
அடிக்கின்ற வெயிலுக்கு ஊட்டிக்கு போகலாமா? கொடைக்கானல் போகலாமா? என்று சிந்திப்பவர்களுக்கு மத்தியில் வரலாற்றைத் தேடுபவர்களும், தொன்மையை விரும்புபவர்களும் தேர்ந்தெடுக்கும் இடம் “கீழடி’’.
தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அய்ந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஒன்றிய தொல்லியல் துறை அகழாய்வு செய்தது. ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் உழைப்பு கீழடியை உலகறியச் செய்தது தொடர்ந்து அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருள்களை உலகத் தமிழர்கள் பொதுமக்கள் காணும் வகையில் நமது பழங்காலக் கட்டடக்கலை அடிப்படையில், ‘கீழடி அருங்காட்சியகம்’ அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அதாவது சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய அருங்காட்சியகத்தைப் பொது மக்கள் பலரும் கோடை விடுமுறையில் தங்கள் குடும்பத்தோடு பார்வையிட்டு வருகின்றனர்.
கீழடி அருங்காட்சியகத்தில்
1. மதுரையும் கீழடியும்
2. வேளாண்மையும் நீர் மேலாண்மையும்
3. கலம் செய்கோ
4. ஆடையும் அணிகலன்களும்
5. கடல் வழி வணிகம்
6. வாழ்வியல்
என்னும் ஆறு தலைப்புகளில் தனித்தனிக் கட்டடங்களில் தொல் பொருள்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
தமிழர்தம் தொன்மை பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதியில் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தொன்மையையும் வரலாற்றையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் திரையிடப்படும் 15 நிமிடக் குறும்படம் தவறாமல் நாம் பார்க்க வேண்டிய ஒன்று.
அருங்காட்சியகத்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பண்டைக் கால ஆற்றங்கரை நாகரிக வாழ்வியலைத் தேடி மேற்கொண்ட செங்கல் கட்டுமானம், யானைத் தந்தத்தால் ஆன பொருள்கள், மண்பாண்டங்கள், விரல் அளவு பானை, ஆட்டக் காய்கள், முதுமக்கள் தாழிகள், 4429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 80 ஆட்டக்காய்கள், 16 சுடுமண் சிற்பங்கள், 14 நாணயங்கள் மற்றும் தங்க அணிகலன்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிறு சிறு பொருள்களின் பாதுகாப்புக்கான நவீன விளக்குகளுடன் கூடிய கண்ணாடிப் பேழைகளில் உலகத் தரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பண்டைக் காலத்தில் பெண்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாக அவர்கள் பயன்படுத்திய யானைத் தந்தத்தால் ஆன சீப்பு, கண் மை, அணிகலன்கள், முத்துமணி, தங்கம், வகை வகையான பாசிகள், சுடுமண் காதணிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அருங்காட்சியகத்தின் வெளியில் நான்கு மாடங்களுடன் கூடிய தெப்பக்குளம், கல் மண்டபம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் தமிழ்நாட்டின் முக்கிய அகழாய்வுத் தளங்களான சிவகளை, கொடுமணல், அரிட்டாபட்டி. மயிலாடும் பாறை உள்ளிட்ட 21 தளங்கள் பற்றிய வரைபடம் பொருத்தப்பட்டுள்ளது.
பண்டைக் கால தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை ஆர்வத்துடன் பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
கீழடியில் நடைபெற்ற அகழாய்வை நேரடியாக வந்து பார்க்க இயலாத மக்கள் பார்க்கும்படி அகழாய்வுத் தளத்தின் மாதிரி வடிவம் வசதி செய்யப்பட்டுள்ளது.
அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருள்கள் மட்டுமல்லாமல் தொல்பொருள்களை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் ‘கீழடியும் வைகையும்’ என்னும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 3D அனிமேஷன் வடிவில் தொல்பொருள்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மெய் நிகர் காட்சி (Virtual Reality) எனும் தொழில்நுட்பத்தில் கீழடி அருங்காட்சியகத்தின் தொன்மைச் சின்னங்களைப் பார்ப்பது பார்வையாளர்களுக்கு ஒரு பேரனுபவமாக இருக்கும்.
கீழடி அருங்காட்சியகத்தில் இருக்கக்கூடிய தொல்பொருள்களை வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இருக்கக்கூடிய மக்கள் இங்குள்ள விரைவுத் துலங்கல் குறியீடுகளைப் (QR Code) பயன்படுத்தி கண்டுகளிக்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டைய தமிழர் வாழ்க்கை முறை, அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவில் மிகச் சிறப்பாக கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
அருங்காட்சியகம் வரும் குழந்தைகள் யாவும் ஆர்வத்துடன் தொல்லியல் பொருள்களைக் கண்டு களிப்பதோடு அதனைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளவும் மிகவும் ஆர்வம் காட்டு கின்றனர்.
கீழடி அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இத்தகு வளமை வாய்ந்த தமிழ்ச் சமூகத்தில் நாமும் பிறந்துள்ளோம் என்னும் பெருமை ஒவ்வொரு தமிழருக்குள்ளும் எட்டிப் பார்க்கும்.
கீழடி எனும் வரலாற்றுப் பெட்டகத்தை நம் சம காலத்தில் காணக் கிடைத்திருப்பது அரிய வாய்ப்பு. அதனை அனைவரும் காணத் தவற வேண்டாம்.