குட்டிக் கதை : வெற்றிக்கான சூத்திரம்
ம.பொடையூர் வெங்கட. இராசா
விவசாயி ஒருவர் வளர்த்து வந்த வயது முதிர்ந்த, பொதி சுமக்கும் கழுதை ஒன்று அவரது தோட்டத்தில் இருந்து வறண்ட கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.
உள்ளே விழுந்த கழுதை அலறிக் கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றிக் காப்பாற்றுவது என்று அவர் விடிய விடிய யோசித்துப் பார்த்தும் ஒரு வழியும் புலப்படவில்லை.
அவர் காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்தக் கழுதையின் விலையைவிட, அதிகச் செலவு பிடிக்கக் கூடியதாக இருந்தது.
அந்தக் கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. இது தவிர அது வயது முதிர்ந்த கழுதைதான் என்பதால் அதைக் காப்பாற்றுவது வீண் வேலை, வெட்டிச் செலவு என்று முடிவு செய்த அவர் கழுதையுடன் அப்படியே அந்தக் கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தார்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்குக் கூப்பிட, அனைவரும் திரண்டனர்.
சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியால் அள்ளிக் கொண்டு வந்து, அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். நடப்பதை உணர்ந்த அந்தக் கழுதை, மரண பயத்தில் சத்தமாக அலறியது. ஆனால், அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை.
இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளித் தொடர்ந்து கொட்டக் கொட்ட, கொஞ்ச நேரம் கழித்து அந்தக் கழுதையின் அலறல் சத்தம் குறைந்து கொண்டே வந்தது.
ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளிக் கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே அந்த விவசாயி எட்டிப் பார்க்க, அவர் பார்த்த காட்சி அவரை வியப்பிலாழ்த்தியது. மண்ணை ஒவ்வொரு முறையும் கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒருமுறை உதறிவிட்டு மண்ணைக் கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே ஏறி நின்று வந்தது.
கழுதை, தன் இடைவிடாத முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்புக்கே வந்துவிட்டது. விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை துள்ளிக் குதித்து ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மைப் படுகுழியில் தள்ளி, குப்பைகளையும், மண்ணையும் நம்மீது கொட்டிப் பார்க்கும். ஆனால், நாம்தான் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் அவற்றை உதறித் தள்ளி மேலே வர வேண்டும். இதுவே நம் வாழ்வின் வெற்றிக்கான சூத்திரம்.