கதை கேளு கணக்குப் போடு
முத்துக்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடம் 9 முத்துக்கள் இருந்தன. அனைத்தையும் ஒரே நேரத்தில் விற்பனை செய்து பணமாக்க விரும்பினார். விற்பனை செய்ய யாரிடம் கொண்டு செல்லலாம் என யோசித்தார்.
உடனே அவருக்கு அந்நாட்டு அரசன் நினைவிற்கு வந்தார். நம் அரசனுக்குத்தான் 3 பெண்குழந்தைகள் உள்ளனரே! அரசனிடம் எடுத்துச் சென்றால் அனைத்து முத்துக்களையும் உடனடியாக வாங்கிக் கொள்வார் என நினைத்தார்.
அரண்மனைக்குச் சென்று அரசனிடம் முத்துக்களை வரிசைப்படுத்திக் காட்டினார். அரசனுக்கும் அரசிக்கும் முத்துக்களைப் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. என்ன விலை என்று கேட்டனர்.
அந்தக் காலத்தில் விலையைப் பணமாகக் கூறுவது வழக்கம். அதன்படி வியாபாரி, முத்துக்களை வரிசையாக வைத்து முதல் முத்து 1 பணம் , இரண்டாம் முத்து 2 பணம், மூன்றாம் முத்து 3 பணம், நான்காம் முத்து 4 பணம், அய்ந்தாம் முத்து 5 பணம், ஆறாம் முத்து 6 பணம், ஏழாம் முத்து 7 பணம், எட்டாம் முத்து 8 பணம், ஒன்பதாம் முத்து 9 பணம் என்றார்.
விலையைக் கேட்ட அரசன் அனைத்து முத்துக்களையும் வாங்க விரும்பினார்.
வியாபாரியே, என் 3 பெண்களுக்கும் இந்த முத்துக்களை நீயே சமமாகப் பங்கிட்டுக் கொடுத்துவிடு. முத்தும் சரியாக வர வேண்டும், விலையும் சரியாக வரவேண்டும். சிறு வேறுபாடுகூட வந்துவிடக் கூடாது என்றார்.
வியாபாரியும், அரசரே தங்கள் விருப்பப்படியே பங்கிட்டுக் கொடுக்கிறேன் என்று பங்கிட்டுக் கொடுத்தார். வியாபாரி 9 முத்துக்களையும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தார்? கண்டுபிடியுங்களேன்.