ஜூலை 15: கல்வி வளர்ச்சி நாள் கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்
அய்யம் தெளிக!
உனக்குள் தோன்றும் அய்யத்தை
உடனே தீர்க்க வேண்டும் நீ;
மனத்துள் வைத்தே இருந்திட்டால்
மதியும் கூர்மை கொள்ளாது!
கல்வி கற்கும் வேளையிலே
கண்டிப் பாக அய்யங்கள்
எல்லோருக்கும் எழுந்திடுமே;
எதையும் தீர்ப்பார் ஆசிரியர்!
ஏனென் றிங்கே கேட்பதுவும்
எதற்கென் றிங்கே கேட்பதுவும்
தானே அய்ய வெளிப்பாடாம்;
தக்கோ ரிடம்நீ கேட்டறிக!
கேள்வி கேட்கும் மாணவர்க்கே
கிட்டும் அறிவின் விளக்கங்கள்;
தூள்போல் ஆகும் அறியாமை;
தோல்வி எதிலும் அவர்க்கில்லை!
விடைகள் உலகில் கிடைப்பதெல்லாம்
வினவும் அய்யத் தால்தானே?
உடையும் மூடம், மடமைகள்
உன்னுள் அய்யம் எழுந்திட்டால்;
சிறிய அய்யம் ஆனாலும்
சிந்த னையின் வெளிப்பாடே;
அறிவின் எல்லை காண்பதற்காய்
அய்யம் தெளிய முயன்றிடுவாய்!
– கே.பி.பத்மநாபன்
சிங்காநல்லூர், கோவை.