அடங்கா ஆர்வம்
அண்ணன் சொந்தமாக பத்திரிகை ஒன்றினை நடத்திவந்தார். அச்சகமும் சொந்தமாக வைத்திருந்தார். தம்பி அச்சகத்தில் வேலை செய்து வந்தார். எழுத்துகளைக் கோர்த்துக் கொடுப்பது, அச்சடிப்பது, அச்சடித்த பத்திரிகைகளை வீடு வீடாகச் சென்று போட்டு வருவது தம்பியின் வேலைகளாகும். நிறையப் படிக்க வேண்டும், அனைத்துச் செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட தம்பி எந்த நேரமும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருந்தார்.
தானும் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. மனதில் தோன்றியதை எழுத ஆரம்பித்தார். தான் எழுதியவையும் பத்திரிகையில் வெளிவந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது. தான் எழுதியதை அண்ணன் வெளியிடுவாரா என்ற அய்யம் ஏற்பட்டது. எனவே, அண்ணனிடம் காட்டத் தயங்கினார். பின்பு ஒரு முடிவுக்கு வந்தார்.
இரவு நேரத்தில் கட்டுரை ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று பத்திரிகை அலுவலக ஆசிரியர் அறையின் ஜன்னல் வழியாக யாருக்கும் தெரியாமல் உள்ளே போட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். காலையில் அலுவலகம் வந்த அண்ணன் எடுத்துப் படித்துப் பார்த்தார். படித்துவிட்டு, பெயர் எங்காவது ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று தேடிப் பார்த்தார். எங்கும் எழுதப்படவில்லை. தனது நண்பர்களிடம் காட்டினார். அருமையாக உள்ளது, பத்திரிகையில் வெளியிடுங்கள் என்றனர். இப்படியே பல கட்டுரைகள் வெளிவந்தன. புகழை விரும்பாத யாரோ ஒருவரே இப்படி ஜன்னல் வழியே போட்டுவிட்டுச் செல்கின்றனர் என அனைவரும் நினைத்தனர்.
ஜன்னல் வழியே கட்டுரைகளைப் போட்டுவிட்டுச் செல்பவர் தம்பிதான் என்று ஒரு நாள் தெரிந்துவிடுகிறது. அண்ணன் மற்றும் பத்திரிகை அலுவலக நண்பர்கள் பாராட்டி மகிழ்கின்றனர். இந்தத் தம்பி, பிற்காலத்தில் தலைசிறந்த பத்திரிகை ஆசிரியராகத் திகழ்ந்த பெஞ்சமின் ஃபிராங்ளின்.