அரைநாண் கயிறு ஆணுக்கு அவசியமா?
ஆண்கள் குழந்தையாக இருக்கும்போதே இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டிவிடுவார்கள். கேட்டால் மதரீதியாக ஆணுக்கு இடுப்பில் கயிறு கட்ட வேண்டும் என்பர். அதுவும், குலவழியாக கருப்புக் கயிறா? சிவப்புக் கயிறா? என்று முடிவு செய்வர். எங்கள் குலத்துக்குக் கருப்புக் கயிறுதான் வழக்கம் என்பர் சிலர்; தங்களுக்குச் சிவப்புக் கயிறுதான் என்பர் சிலர்.
இதில் மதமும் இல்லை, கடவுளும் இல்லை. பெண்களைவிட ஆண்கள் மிகக் குறைவான ஆடை அணிவர். குறிப்பாக, ஆண்கள் வெளியில் சென்று வெயிலில் உழைக்கக்கூடியவர்கள். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்கள் பெரும்பாலும் கோவணத்துடன்தான் காணப்படுவர். கிராமங்களில் 95% ஆண்கள் அப்படித்தான். அதிலும் குக்கிராமங்களில் 99% ஆண்கள் கோவணத்துடன்தான் இருப்பர். உழைப்பாளிகள் வியர்வையால் பாதிக்கப்படாமல் இருக்கவும், இடுப்பில் இருக்கும் ஆடை அவிழாமல் இருக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது கோவணம். தற்போதைய ஜட்டியின் பயன்பாட்டை அப்போதைய கோவணமே ஈடு செய்தது.
அவ்வாறு கோவணம் கட்ட இடுப்பில் நிரந்தரமாக ஆண்களுக்குக் கட்டப்பட்ட கயிறே அரைநாண்கயிறு. அரை என்றால் இடுப்பு. நாண் என்றால் கயிறு. இடுப்புக்கயிறு என்பது பொருள். ஜட்டி அணிவோர் இடுப்புக்கயிறு கட்டவேண்டியது இல்லை. கோவணம் கட்டுவோருக்கே வேண்டும். எனவே, அரைநாண் கயிறு ஆணுக்கு அவசியம் இல்லை!