தொடர் கதை – 7 : வரதாச்சாரியின் வாதம்
“வரதாச்சாரி! வரதாச்சாரி! வரதாச்சாரி!
நீதிமன்ற ஊழியர் மூன்று முறை அழைத்தார்.
வரதாச்சாரி நீதிபதி முன் நின்றார்.
“வரதாச்சாரி, நீங்கள் எதிர்மனுதாரராய் மனுச் செய்துள்ளீர்கள். நீங்ளே வாதிடுகிறீர்களா, அல்லது வழக்குரைஞர் வைத்துக் கொள்கிறீர்களா?”
“நானே வாதிடுகிறேன் அய்யா!”
“இன்றைக்கே வாதிடுகிறீர்களா? அல்லது கால அவகாசம் வேண்டுமா?”
“இன்றைக்கே வாதிடத் தயாராகவுள்ளேன் அய்யா!”
“உங்கள் எதிர்வாதங்களை வைக்கலாம்!”
“கனம் நீதிபதி அவர்களே! பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் இவை மூன்றும் வழக்குத் தொடர்ந்து வாதங்களை எடுத்து வைத்துள்ளன. எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால் என்னை எதிர்மனுதாரராய் இணைத்துக் கொண்டு என்கருத்தை தங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
அய்யா! மக்கள் வழக்கத்தில் சில நம்பிக்கைகள் வைத்துள்ளனர். அந்த நம்பிக்கைகயின் அடிப்படையில் சில காரியங்களைச் செய்கின்றனர். பொருள் விரயம், சேதம், பாதிப்பு என்று சொல்லி அவற்றை நீக்கிவிட முடியாது,
எலுமிச்சை, தேங்காய், பூசணி போன்றவை பயனுள்ள பொருள்கள்தான். இவற்றை, அன்றாட வாழ்க்கையில் அனைவரும் பயன்படுத்துகிறோம். என்றாலும் எங்கள் நம்பிக்கையின்படி சிலவற்றைச் செய்கிறோம்.
பொருள்கள் வீணாகின்றன என்று காரணங்காட்டி எங்கள் நம்பிக்கையைக் கைவிட முடியுமா?
கடவுளுக்கு சிலவற்றைப் படையலிடும் போது பொருள்கள் பாழாகின்றன என்று பார்க்க முடியாதேயவுர் ஆனர்!
யாககுண்ட நெருப்பில் நெய்யை ஊற்றுகிறோம். அப்படி ஊற்றினால்தான் கடவுளைப் போய்ச் சேரும். நெய்யைப் பாழாக்கக் கூடாது என்று நினைத்தால் யாகம் செய்ய முடியுமா?
சாமிக்குப் பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்கிறோம். பாலும், தேனும் பாழாகிறது என்று பார்த்தால் சாமிக்கு அபிஷேகம் செய்ய முடியுமா?
எனவே, மக்களின் நம்பிக்கைப்படி அவர்கள் செய்வதைத் தடுக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்’’ என்று வாதிட்டார் வரதாச்சாரி.
வரதாச்சாரியின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, “வரதாச்சாரி, உங்கள் நம்பிக்கையை விட முடியாமல் உங்கள் கருத்தை நீங்கள் கூறியிருப்பதை இந்த நீதிமன்றம் புரிந்து கொள்கிறது.
கடவுளுக்கு சர்க்கரைசாதம், புளிசாதம் என்று பலவற்றை படையல் போடுகிறார்கள். படைத்த பின் அவற்றை எடுத்துச் சாப்பிடுறார்கள்! அவ்வாறு செய்யும் போது பொருள்கள் வீணாவதில்லை. அப்படி பொருள்களைப் பாழாக்காமல் படையல் செய்யலாமே! நடுச்சாலையில் நசுக்கியும், பாழாக்கியும் பொருளை வீணாக்குவது எப்படிச் சரியாகும்?” என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு வரதாச்சாரி,
“வழக்கமாய் நாங்கள் எங்கள் நம்பிக்கையின் படி அப்படிச் செய்து வருகிறோம். அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்” என்றார்.
உடனே நீதிபதி பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய்க்காக வாதாடிய வழக்குரைஞர் பழனிவேல் அவர்களைப் பார்த்து, “உங்கள் வாதத்தை நீங்கள் முன்வைக்கலாம்’’ என்றார். “நான் எதிர்மனுதாரர் வரதாச்சாரியாரை சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன் அய்யா!’’ என்றார்……
“அனுமதி வழங்கப்படுகிறது”, என்றார் நீதிபதி.
“அய்யா வரதாச்சாரியார் அவர்களே! கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறதா? நாம் கடவுளைக் காப்பாற்றுகிறோமா?’’ என்று கேட்டார் வழக்குரைஞர்.
“கடவுளே! இது என்ன அபச்சாரம்! கடவுள்தான் நம்மைப் படைத்தார். அவர்தான் நம்மைக் காக்கிறார்’’ என்றார் வரதாச்சாரி.
“கடவுளிடம் நாம் வேண்டுதல் வைக்கிறோமா? கடவுள் நம்மிடம் வேண்டுதல் வைக்கிறதா?’’
“கடவுள் நம்மிடம் எப்படி வேண்டுவார். நாம்தான் கடவுளிடம் வேண்டிப் பெற வேண்டும்?” என்றார் வரதாச்சாரி. “அப்படியென்றால் நம்மிடம் கடவுள் பெற வேண்டியது எதுவும் இல்லையென்று தானே அர்த்தம்?” என்று கேட்டார் வழக்கறிஞர்.
“ஆமாம்’’. வாரதாச்சாரி பதில்.
“அப்படியென்றால் கடவுளுக்கு யாகம் நடத்தி அங்கு எரியும் நெருப்பில் நெய் ஊற்றினால் அது கடவுளுக்குப் போகிறது என்பதும், அதைக் கடவுள் ஏற்கிறார் என்பதும் எப்படிச் சரியாகும்?
நெய் ஊற்றினால் கூட பெரிய பாதிப்பு இல்லை. உணவுப் பொருள் வீண் என்று கொள்ளலாம். நெருப்பிலே ஆடு, மாடு, குதிரை இவற்றைத் தள்ளி வேகடித்து, சாகடித்து கடவுளுக்குச் செய்கிறேன் என்பது சரியா?
கடவுள் எல்லா உயிர்களுக்கும் தாய் என்றால், ஆடு, மாடு, குதிரையென்று கடவுளுக்குப் பலியிடுவதைக் கடவுள் ஏற்குமா?
அறியாமையால், மூடநம்பிக்கையால் நாம் செய்கின்ற செயல்களுக்குக் கடவுளைக் காரணமாகக் காட்டுவது கடவுளை இழிவு செய்வது ஆகாதா?” என்று வழக்குரைஞர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல,
“அய்யா… நாங்கள் கடவுளை மதிப்பவர்கள். அப்படிச் சொல்லாதீர்கள்!’’ என்று பதறினார் வரதாச்சாரி.
“வழக்குரைஞர் நியாயமாய்த்தானே கேட்கிறார்? உங்கள் பதிலைச் சொல்லுங்கள்’’ என்றார் நீதிபதி.
வரதாச்சாரியார் அமைதியாக இருந்தார். நீதிபதி வழக்குரைஞரைப் பார்த்து, “உங்கள் வாதம் தொடர்கிறதா?’’ என்று கேட்டார்.
வழக்குரைஞர் “ஆம்’’ என்றார்.
“வழக்கு அடுத்த வாரம் புதன்கிழமை ஒத்திவைக்கப்படுகிறது” என்று அறிவித்தார் நீதிபதி.
(தொடரும்)